Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

எம்பரர் பென்குவினின் இணையில்லா இறக்கை

எம்பரர் பென்குவினின் இணையில்லா இறக்கை

எம்பரர் பென்குவின் தண்ணீருக்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்கிறது, பின்பு ஜெட் வேகத்தில் நீந்திச்சென்று ஒரே துள்ளலாகத் துள்ளி ஒரு பனிக்கட்டியின் மீது நிற்கிறது. இப்படி மின்னல் வேகத்தில் செயல்பட இந்தப் பென்குவினுக்கு எது உதவுகிறது?

எம்பரர் பென்குவினின் இறக்கை

சிந்தித்துப் பாருங்கள்: எம்பரர் பென்குவின் தன்னுடைய இறக்கைகளில் காற்றை அடைத்து வைத்துக்கொள்கிறது. இப்படி அடைத்து வைக்கப்படுகிற காற்று அதை அதிக குளிரிலிருந்து பாதுகாத்து கதகதப்பாக வைக்கிறது; அதுமட்டுமல்ல, சாதாரணமாக நீந்தும் வேகத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகமாக நீந்த உதவுகிறது. எப்படி? கடல் உயிரியலாளர்கள் அந்த ரகசியத்தை உடைக்கிறார்கள்: எம்பரர் பென்குவின்கள் தண்ணீரில் நீந்தும்போது இறக்கைகளுக்கு இடையே அடைத்து வைத்திருக்கிற காற்றைச் சிறுசிறு குமிழிகளாக வெளிவிடுகின்றன. இந்த நீர்க்குமிழிகள்... இறக்கைகளில் ஏற்படும் நீர் உராய்வைக் குறைத்து, அசர வைக்கும் வேகத்தில் நீந்த பென்குவினுக்குக் கைகொடுக்கின்றன.

நீர்க்குமிழிகளைப் பயன்படுத்தி, கப்பலின் உடற்பகுதியில் ஏற்படுகிற நீர் உராய்வைக் குறைத்து கப்பலின் வேகத்தை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க பொறியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். ஆனால், “இந்தப் பென்குவினின் இறக்கையிலுள்ள வடிவமைப்பு படுசிக்கலாய் இருப்பதால், அதற்கு இணையாக... நுண்துளைகள் உள்ள ஒரு சல்லடையை அல்லது வலைப்பின்னலை வடிவமைப்பது ரொம்ப ரொம்பக் கடினம்” என்று ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இதனால் கூடுதலான ஆராய்ச்சி சவாலாக இருக்கிறது என்றும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எம்பரர் பென்குவினின் இறக்கை தானாக வந்திருக்குமா? அல்லது, அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா? ◼ (g13-E 09)