Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

அகாமா பல்லியின் வால்!

அகாமா பல்லியின் வால்!

அகாமா பல்லி தரையிலிருந்து செங்குத்தான சுவர்மீது ஒரே தாவு தாவுகிறது! அடடா, என்ன லாவகம்! ‘சரி, வழுவழுப்பான தரையிலிருந்து தாவ முடியுமா? அதுவும்கூட பிரச்சினையே இல்லை. எப்படி? ரகசியம், அந்தப் பல்லியின் வாலில் இருக்கிறது!

சிந்தித்துப் பாருங்கள்: அகாமா பல்லி, நல்ல பிடிமானத்தைத் தருகிற சொரசொரப்பான மேற்பரப்பிலிருந்து தாவி குதிப்பதற்குமுன் முதலில் தன் உடலை ஸ்திரப்படுத்தி, வாலை கீழ்நோக்கி வைத்துக்கொள்கிறது. ஏன்? அப்போதுதான், சரியான கோணத்தில் சுவர்மீது தாவி குதிக்க முடியும். ஆனால், வழுவழுப்பான மேற்பரப்பில் இந்தப் பாச்சா பலிக்காது! தவறான கோணத்தில் அது தாவ நேரிடும். ஆகையால், தாவி குதிக்க குதிக்கவே அது தன் வாலை மேல்நோக்கி ஆட்டியபடி உடலின் கோணத்தைச் சரிசெய்துகொள்கிறது. சவாலான சமாச்சாரம்தான்! பெர்க்கிலேயிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கை சொல்கிறது: “பல்லி தாவி குதிக்கும்போது செங்குத்தான நிலையில் இருப்பதற்குத் தன் வாலை மேலே ஆட்டி அட்ஜெஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது. மேற்பரப்பு எந்தளவு வழுவழுப்பாக இருக்கிறதோ அந்தளவு தன் வாலை மேல்நோக்கி வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்யும்போது பாதுகாப்பாக ‘தரையிறங்க’ முடிகிறது.”

பேரழிவுக்குப் பின்பு இடிபாடுகளுக்கு இடையே மேலேயும் கீழேயும் வேகமாக, லாவகமாகப் போய், அங்கு சிக்கியிருப்பவர்களைக் கண்டுபிடிக்க உதவும் ஸ்திரமான ரோபோ வண்டிகளை வடிவமைக்க இந்த அகாமா பல்லியின் வால் பொறியியலாளர்களுக்கு உதவியிருக்கிறது. “மிருகங்கள் அளவுக்கு ரோபோக்கள் வேகமாகவும் லாவகமாகவும் செல்வதில்லை. எனவே, ஒரு ரோபோவை ஸ்திரமாக, உறுதியாகச் செயல்பட வைக்க ஏதாவது செய்தால்கூட, அது ஒரு சாதனைதான்!” என தாமஸ் லிபி என்ற ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

என்ன நினைக்கிறீர்கள்? அகாமா பல்லியின் வால் தானாக உருவாகியிருக்குமா? அல்லது அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா? ◼ (g13-E 02)