Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை

பேரழிவு தாக்கும்போது உயிர் தப்புவது எப்படி?

பேரழிவு தாக்கும்போது உயிர் தப்புவது எப்படி?

“ஒரு பயங்கரமான குண்டுவெடிப்பு என்னை அப்படியே தூக்கி வீசிடுச்சு, நாங்க இருந்த கட்டிதத்தோட காற்று துளைகள்லருந்து புகை வந்துச்சு, எங்களோட பெரிய அடுக்கு மாடி கட்டிடம் பற்றியெரிஞ்சது.” —ஜோஷூவா.

பூமி அதிர்ச்சி . . . சூறாவளி . . . தீவிரவாத தாக்குதல் . . . பள்ளியில் துப்பாக்கி சூடு! இவையெல்லாம் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருகின்றன. இவற்றை வெறும் தலைப்புச் செய்திகளாகப் பார்க்காமல், இது போன்ற பேரழிவிலிருந்து உயிர் தப்ப என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படியென்றால், பேரழிவுக்கு முன்பும், பேரழிவின்போதும், பேரழிவுக்குப் பின்பும் நாம் என்ன செய்ய வேண்டும்?

பேரழிவுக்கு முன்பு தயாராக இருங்கள்!

பேரழிவு யாரையும் விட்டுவைப்பதில்லை. பேரழிவின்போது உயிர் தப்ப, தயாராக இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அதற்காக நாம் என்ன செய்யலாம்?

  • மனதைத் தயார்படுத்துங்கள். பேரழிவு ஏற்படும் என்பதையும், இதனால் உங்களுக்கும் உங்கள் அன்பானவர்களுக்கும் ஆபத்து வரும் என்பதையும் மனதளவில்ஏற்றுக்கொள்ளுங்கள். பேரழிவுக்கு முன்பே நாம் தயாராக இல்லையென்றால், பேரழிவின்போது உயிர் தப்புவது கஷ்டமாகிவிடும்.

  • என்னென்ன பேரழிவுகள் உங்கள் பகுதியைத் தாக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பாதுகாப்பான இடம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்த்து வையுங்கள். உங்கள் வீடு கட்டப்பட்டிருக்கிற விதமும், அது அமைந்திருக்கிற இடமும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை அகற்றிவிடுங்கள். புகையைக் கண்டறியும் கருவியைப் பொருத்துங்கள், அதன் பேட்டரிகளை வருஷத்துக்கு ஒரு தடவையோ அல்லது பல தடவையோ மாற்றுங்கள்.

  • அவசரத்துக்குத் தேவையான பொருள்களைத் தயாராக வையுங்கள். மின்சாரம், தண்ணீர், ஃபோன், போக்குவரத்து வசதி ஆகியவை நமக்குக் கிடைக்காமல் போகலாம். ஒருவேளை உங்களிடம் கார் இருந்தால், அதில் பாதி அளவுக்காவது எரிபொருளை நிரப்பி வையுங்கள். உங்கள் வீட்டில் எப்போதும் உணவு, தண்ணீர், முதலுதவி பெட்டி ஆகியவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.—“ உங்களுக்குத் தேவையானதை நீங்கள் வைத்திருக்கிறீர்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

    நீங்கள் உயிர் தப்ப தயாராக இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்

  • ஃபோன் நம்பரை வைத்துக்கொள்ளுங்கள். பக்கத்திலும் தூரத்திலும் இருக்கும் உங்கள் நண்பர்களுடைய ஃபோன் நம்பரை வைத்துக்கொள்ளுங்கள்.

  • தப்பிப்பதற்குத் திட்டம் போடுங்கள், அதை ஒத்திகை பாருங்கள். உங்கள் பிள்ளைகளுடைய பள்ளியில், அசம்பாவிதத்தைச் சமாளிக்க என்ன அவசரத் திட்டம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கட்டிடத்தில், வெளியே போவதற்கான வழி பக்கத்தில் எங்கே இருக்கிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள். பேரழிவின்போது உங்கள் குடும்பத்தினர் எல்லாரும் ஒரு இடத்தில் வந்து சந்திப்பதற்காக, உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும் தூரத்திலும் இருக்கிற ஒரு பள்ளியையோ பூங்காவையோ தேர்ந்தெடுங்கள். இந்த இடங்களுக்கு நடந்து போக உங்கள் குடும்பத்தோடு ஒத்திகை பார்ப்பது நல்லதாக இருக்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

  • மற்றவர்களுக்கு உதவுங்கள். வயதானவர்களுக்கும் உடம்பு முடியாதவர்களுக்கும்கூட உதவுங்கள்.

பேரழிவின்போது உடனே செயல்படுங்கள்

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஜோஷூவா இப்படிச் சொல்கிறார்: “தீ பிடிக்க ஆரம்பிச்சதும் நிறைய பேர் பதட்டப்படல, அங்கிருந்து மெதுவாதான் கிளம்புனாங்க. சிலர் கம்ப்யூட்டர ஆஃப் பண்ணிட்டு இருந்தாங்க, சிலர் பாட்டில்ல தண்ணி நிரப்பிட்டு இருந்தாங்க. அப்போ ஒருத்தர், ‘நாம கொஞ்ச நேரம் இங்கேயே காத்திருக்கலாம்’னு சொன்னார்.” மற்றவர்கள் தயங்கிக்கொண்டிருந்தாலும், “நாம எல்லாரும் உடனே வெளியில போணும்” என்று ஜோஷூவா சத்தமாகச் சொன்னார். அப்போது, அவரோடு வேலை செய்தவர்கள் அவர் சொன்னதைக் கேட்டு அவரோடு படிக்கட்டில் இறங்கினார்கள். “யாராவது கீழ விழுந்தா, அவர தூக்கிக்கிட்டு நடந்து போய்கிட்டே இருங்க. நம்மால நிச்சயமா தப்பிக்க முடியும்” என்று ஜோஷூவா சொல்லிக்கொண்டே இருந்தார்.

  • தீ விபத்து ஏற்படும்போது. தரையில் படுத்துக்கொள்ளுங்கள், அப்படியே நகர்ந்துகொண்டு உடனே வெளியே போக முயற்சி செய்யுங்கள். புகை சூழ்ந்திருப்பதால், அந்த இடத்தில் இருப்பவற்றைப் பார்ப்பது கஷ்டமாக இருக்கலாம். சொல்லப்போனால், தீ விபத்தின்போது புகையைச் சுவாசித்ததால்தான் நிறைய பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில், உங்கள் பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போகாதீர்கள். ஒரு நொடி தாமதித்தால்கூட உயிரை இழந்துவிடலாம்.

  • பூமி அதிர்ச்சி ஏற்படும்போது. உறுதியான நாற்காலி அல்லது மேஜைக்குக் கீழேயோ, வீட்டிலுள்ள சுவருக்குப் பக்கத்திலேயோ மறைந்துகொள்ளுங்கள். பூமி அதிர்ச்சிக்குப் பிறகு சின்ன சின்ன அதிர்வுகள் ஏற்படும் என்பதை எதிர்பார்த்திருங்கள். எவ்வளவு சீக்கிரமாகக் கட்டிடத்தைவிட்டு வெளியே போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வெளியே போய்விடுங்கள். மீட்பு வேலையில் ஈடுபடுபவர்கள் அங்கே வந்துசேர பல மணிநேரம் ஆகலாம். அதனால், உங்களால் முடிந்தால் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள்.

  • சுனாமி தாக்கும்போது. கடல் அலைகள் கரையைத் தாண்டி வேகமாக வரும்போது, உடனே உயரமான பகுதிக்குப் போய்விடுங்கள். இன்னும் பெரிய பெரிய அலைகள் வரும் என்பதை எதிர்பார்த்திருங்கள்.

  • சூறாவளி தாக்கும்போது. மறைந்துகொள்வதற்கென்று நீங்கள் கட்டிவைத்திருக்கும் இடத்துக்கு வேகமாகப் போய்விடுங்கள்.

  • வெள்ளம் வரும்போது. தண்ணீர் புகுந்த கட்டிடத்தைவிட்டு வெளியே வந்துவிடுங்கள். தண்ணீரில் நடப்பதையோ வாகனத்தை ஓட்டிக்கொண்டு போவதையோ தவிருங்கள். ஏனென்றால், அந்தத் தண்ணீரில் கழிவு நீர் கலந்திருக்கலாம். சில ஆபத்துகளும் மறைந்திருக்கலாம், அதாவது கழிவுபொருள்கள் இருக்கலாம், பாதாளச் சாக்கடை திறந்து கிடக்கலாம், மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்.

  • உங்களுக்குத் தெரியுமா? இரண்டு அடிக்கு [0.6 மீ.] தண்ணீர் கரைபுரண்டு ஓடினால், அது ஒரு காரையே அடித்துக்கொண்டு போய்விடலாம். வெள்ளத்தின்போது, நிறைய பேர் உயிர் இழந்ததற்குக் காரணம், கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் அவர்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டுபோனதுதான்!

  • அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டு வெளியேற சொன்னால், உடனே அங்கிருந்து கிளம்பிவிடுங்கள்! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லையென்றால், உங்களைத் தேடப்போய் அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளலாம்.

    அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டு வெளியேற சொன்னால், உடனே அங்கிருந்து கிளம்பிவிடுங்கள்!

  • உங்களுக்குத் தெரியுமா? ஃபோனில் பேசுவதைவிட மெஸேஜ் அனுப்புவது நல்லது.

  • வீட்டிலோ ஒரு பாதுகாப்பான இடத்திலோ அதிகாரிகள் உங்களை இருக்கச் சொன்னால், அவர்கள் சொல்கிறபடி செய்யுங்கள். விஷவாயு தாக்கும்போதோ, வைரஸ் அல்லது பாக்டீரியா மூலம் நோய் பரவும்போதோ, அணுமின் விபத்து ஏற்படும்போதோ வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். ஏசியை ஆஃப் செய்யுங்கள், கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வையுங்கள். அணுமின் விபத்து ஏற்படும்போது, ஆபத்தான கதிர்வீச்சு உங்களைத் தாக்காமல் இருக்க உங்கள் கட்டிடத்தின் தாழ்வான பகுதிக்குப் போய்விடுங்கள். டிவியில் அல்லது ரேடியோவில் வரும் செய்திகளைக் கேளுங்கள். ஆபத்து நீங்கிவிட்டது என்று அதிகாரிகள் அறிவிக்கும்வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

பேரழிவுக்குப் பின்பு பாதுகாப்பாக இருங்கள்!

நோயையும் ஆபத்தையும் தவிர்க்க, பின்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள்:

  • நண்பர்களோடு இருங்கள். முகாமில் இருப்பதற்குப் பதிலாக, முடிந்தளவு நண்பர்களோடு இருங்கள்.

  • நீங்கள் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வையுங்கள்.

  • குப்பைகளைச் சுத்தம் செய்ய உங்கள் பொருள்களை மட்டுமே பயன்படுத்துங்கள். முடிந்தால், கையுறை, நல்ல ஷூ, கனமான தொப்பி, ‘மாஸ்க்’ போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். மின்சார கம்பிகளும் நெருப்பு தணல்களும் குப்பைகளில் இருக்கலாம், அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்.

  • நீங்கள் அன்றாடம் செய்வதைத் தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் அமைதியாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும். பிள்ளைகளுக்குப் பள்ளிப் பாடத்தைச் சொல்லிக்கொடுங்கள், அவர்களோடு விளையாடுங்கள். தவறாமல் குடும்ப வழிபாடு செய்யுங்கள். பேரழிவு சம்பந்தமான செய்திகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். உங்கள் வெறுப்பையும் விரக்தியையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் காட்டாதீர்கள். மற்றவர்கள் உதவும்போது அதை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்களும் மற்றவர்களுக்கு உதவுங்கள்.

    பேரழிவுக்குப் பின்பு, நீங்கள் அன்றாடம் செய்வதைத் தொடர்ந்து செய்யுங்கள்

  • பேரழிவால் இழப்பு ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அரசாங்கமும் மீட்புக் குழுவும், மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்குத்தான் கவனம் செலுத்துவார்கள்; இழந்த எல்லா பொருள்களையும் திருப்பிக் கொடுப்பதற்கு அல்ல! உயிர் வாழ வேண்டுமென்றால் சுத்தமான தண்ணீர், உணவு, உடை, தங்குவதற்குப் பாதுகாப்பான ஒரு இடம் ஆகியவை தேவை.—1 தீமோத்தேயு 6:7, 8.

  • மனதளவில் பாதிக்கப்படுவீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அதைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். பேரழிவால் ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பிறகு கவலை, மனச்சோர்வு, மனநிலையில் மாற்றம் போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்படலாம். அதோடு, யோசிப்பதும், வேலை செய்வதும், தூங்குவதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதனால், உங்கள்மேல் அக்கறையாக இருக்கும் நண்பர்களிடம் பேசுங்கள்.

வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து ஜோஷூவா உயிர் தப்பினார். ஆனால், அவருடன் வேலை செய்த நிறைய பேர் அதில் உயிர் இழந்தார்கள். கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்தும் மனநல மருத்துவர்களிடமிருந்தும் ஜோஷூவாவுக்கு உதவி கிடைத்தது. “துக்கம் இருக்குறது சகஜம்தான், அது அப்படியே காலப்போக்குல மறஞ்சு போயிடும்னு அவங்க சொன்னாங்க. ஆறு மாசத்துக்கு அப்புறம் என்னோட கவலை கொஞ்சம் குறைஞ்சது. ஆனா, மன அழுத்தத்துனால ரொம்ப நாள் பாதிக்கப்பட்டிருந்தேன்” என்று ஜோஷூவா சொல்கிறார்.

பேரழிவு தாக்கும்போது மக்கள் நியாயமாக யோசிப்பது கிடையாது; அதனால்தான், சிலர் கடவுள்மேல் பழிபோடுகிறார்கள். ஜோஷூவாவைப் போல நிறைய பேர் குற்றவுணர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘நான் இன்னும் நிறைய பேரோட உயிர காப்பாத்தியிருக்கலாம்னு இப்பக்கூட தோணும். ஆனா, கடவுள் சீக்கிரத்துல ஒரு நீதியான உலகத்த கொண்டுவந்து எல்லா கெட்ட காரியங்களையும் சரிசெய்வாருங்கற விஷயம் எனக்கு ஆறுதலா இருக்கு. அதுவரைக்கும், என்னோட ஒவ்வொரு நாளையும் நான் சந்தோஷமா அனுபவிக்குறேன், அதுக்காக என்னால முடிஞ்சத எல்லாம் செய்றேன்’ என்று அவர் சொல்கிறார்.—வெளிப்படுத்துதல் 21:4, 5. *

^ பாரா. 33 எதிர்காலத்தில் கடவுள் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதைப் பற்றியும், அவர் ஏன் துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தைப் பாருங்கள். இதை www.pr418.com வெப்சைட்டிலிருந்து டவுன்லோட் செய்யலாம்.