Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் என்ன சொல்கிறது?

“வானமும் பூமியும் படைக்கப்பட்ட காலத்தில் . . . நடந்தவற்றைப் பற்றிய பதிவு இதுதான்.” (ஆதியாகமம் 2:4) இந்தப் பூமி எப்படி உருவானது என்பதைப் பற்றிய பைபிள் பதிவு மேலே சொல்லப்பட்ட வார்த்தைகளோடு முடிகிறது. பைபிள் சொல்கிற விஷயங்கள் அறிவியலோடு ஒத்துப்போகிறதா? இதோ சில உதாரணங்கள்:

ஆரம்பத்தில்: கண்களுக்குத் தெரிகிற வானமும், பூமியும் படைக்கப்பட்டன

இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆரம்பமே இல்லையா?

ஆதியாகமம் 1:1 இப்படிச் சொல்கிறது: “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.”

இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் இல்லை, அது காலம் காலமாக இருந்துவருகிறது என்று கிட்டத்தட்ட 1950-க்கு முன்புவரை விஞ்ஞானிகள் நம்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை வைத்து இந்தப் பிரபஞ்சத்துக்கு கண்டிப்பாக ஒரு ஆரம்பம் இருந்திருக்க வேண்டும் என்று நிறைய விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் பூமி பார்ப்பதற்கு எப்படி இருந்தது?

ஆதியாகமம் 1:2, 9-ல், இந்தப் பூமி படைக்கப்பட்ட சமயத்தில் “ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருந்தது” என்றும் எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான் இருந்தது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

பைபிள் சொல்வதை விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்கிறார்கள். பூமி உருவான சமயத்தில் ‘வளிமண்டலத்தில் ஆக்சிஜனே இல்லை . . . பார்க்கவே வினோதமாக இருந்திருக்கும்’ என்று உயிரியல் விஞ்ஞானி பாட்ரிக் ஷிஷ் சொல்கிறார். “கொஞ்சம்கூட நிலமே தெரியாத அளவுக்கு பூமி முழுக்க தண்ணீரால் நிறைந்திருந்தது என்று சமீப ஆராய்ச்சிகள்” காட்டுவதாக அஸ்ட்ரானமி பத்திரிகை சொல்கிறது.

காலங்கள் போகப்போக வளிமண்டலம் எப்படி மாறியது?

ஆரம்பத்தில், வளிமண்டலத்துக்குள் மங்கலான வெளிச்சம் நுழைய ஆரம்பித்தது. ஆனால் அந்தச் சமயத்தில், பூமியின் நிலப்பரப்பிலிருந்து சூரியனோ சந்திரனோ தெரியவில்லை என்று ஆதியாகமம் 1:3-5-லிருந்து புரிந்துகொள்கிறோம். ஏனென்றால், வளிமண்டலம் அடர்த்தியாக இருந்தது. கொஞ்ச காலத்துக்குப் பிறகுதான் அவை தெளிவாக தெரிய ஆரம்பித்திருக்கும்.—ஆதியாகமம் 1:14-18.

24 மணிநேரம் கொண்ட ஆறு நாட்களில், பூமியில் இருக்கிற எல்லா உயிர்களும் படைக்கப்பட்டதாக பைபிள் சொல்வதில்லை

ஸ்மித்சோனியன் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிலையம் இதைப் பற்றி சொல்லும்போது, ஆரம்பத்தில் வளிமண்டலத்தைத் தாண்டி மங்கலான ஒளிதான் பூமியின் மேல் பட்டது என்று சொல்கிறது. அதோடு, “பூமி உருவான சமயத்தில் பூமியைச் சுற்றி மீத்தேன் துளிகள் பனிமூட்டம்போல் படர்ந்திருந்தது” என்றும், காலம் போகப்போக இந்த “மீத்தேன் துளிகள் விலக ஆரம்பித்து வானம் நீல நிறத்தில் தெரிய ஆரம்பித்தது” என்றும் சொல்கிறது.

உயிரினங்கள் எந்த வரிசையின்படி உருவாயின?

ஆதியாகமம் 1:20-27-ல் சொல்லப்படுகிற வரிசை இதுதான்: மீன்கள், பறவைகள், நிலத்தில் வாழ்கிற மிருகங்கள், கடைசியாக மனிதர்கள்! முதல் பாலூட்டி உருவாவதற்கு பல வருஷங்களுக்கு முன்பே முதல் மீன் தோன்றியிருக்க வேண்டும் என்றும், ரொம்ப காலம் கழித்துதான் மனிதர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

காலம் போகப்போக உயிரினங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று பைபிள் சொல்வதில்லை

பைபிள் என்ன சொல்வதில்லை?

விஞ்ஞானத்தோடு பைபிள் ஒத்துப்போவதில்லை என்று சிலர் நினைப்பதற்குக் காரணம், அவர்கள் பைபிளைச் சரியாகப் புரிந்துகொள்ளாததுதான்!

இந்தப் பிரபஞ்சமோ பூமியோ ஆறாயிரம் வருஷங்களுக்கு முன்புதான் உருவானது என்று பைபிள் சொல்வதில்லை. பிரபஞ்சமும் பூமியும் “ஆரம்பத்தில்” படைக்கப்பட்டன என்றுதான் அது சொல்கிறதே தவிர, எவ்வளவு காலத்துக்கு முன்பு என்று திட்டவட்டமாக அது சொல்வதில்லை.—ஆதியாகமம் 1:1.

24 மணிநேரம் கொண்ட ஆறு நாட்களில், பூமியில் இருக்கிற எல்லா உயிர்களும் படைக்கப்பட்டதாக பைபிள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, ‘நாள்’ என்ற வார்த்தை காலப்பகுதிகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? ‘பூமியையும் வானத்தையும்’ படைப்பதற்கு கடவுள் ஒரு நாள் எடுத்துக்கொண்டதாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 2:4) இந்த ‘ஒரு நாளில்’ ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற ஆறு படைப்பு நாட்களும் அடங்கும். அப்படியென்றால், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றபடி இந்தப் பூமியை வடிவமைப்பதற்கும் உயிர்களைப் படைப்பதற்கும் கடவுள் எடுத்துக்கொண்ட ஆறு நாட்கள், வெறுமனே 24 மணிநேரம் கொண்ட நாட்கள் அல்ல, அது ஒரு நீண்ட காலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

காலம் போகப்போக உயிரினங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று பைபிள் சொல்வதில்லை. ஆதியாகமம் புத்தகத்தில் மிருகங்கள் “அந்தந்த இனத்தின்படி” உருவானதாக சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 1:24, 25) ‘இனம்’ என்ற வார்த்தையை விஞ்ஞானிகள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்களோ அதே அர்த்தத்தில் பைபிள் பயன்படுத்துவதில்லை. விரிவான ஒரு அர்த்தத்தில்தான் பைபிள் அதைப் பயன்படுத்துகிறது. அப்படியென்றால், பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு ‘இனத்துக்குள்’, பல சிற்றினங்களும் பல ரகங்களும் இருக்கும் என்று தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட ‘இனத்தை’ சேர்ந்த உயிரினங்கள், ஒரே பகுதியில் வாழும்போது காலங்கள் போகப்போக அவற்றுக்குள் வித்தியாசங்களும் மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை காட்டுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்தப் பிரபஞ்சம், பூமி, உயிர்கள் ஆகியவை எப்படி உருவாயின என்பதைப் பற்றி பைபிள் எளிமையாகவும் ரொம்ப சரியாகவும் சொல்கிறது என்று பார்த்தோம். இதையெல்லாம் துல்லியமாக சொல்கிற பைபிள், இதைப் படைத்தவரைப் பற்றியும் துல்லியமாக சொல்லும்தானே? “மனிதர்களைவிட சக்திவாய்ந்த ஏதோவொன்றிலிருந்து உயிர் வந்திருக்க வேண்டும் என்ற கருத்து, இன்றைக்கு இருக்கிற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு ஒத்துப்போகிறது” என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. *

^ பாரா. 20 உயிர் படைக்கப்பட்டது என்ற கருத்தை என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா ஆதரிப்பதில்லை.