Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப சந்தோஷத்துக்கு ஞானமான ஆலோசனைகள்

குடும்ப சந்தோஷத்துக்கு ஞானமான ஆலோசனைகள்

கல்யாண வாழ்க்கையும், பிள்ளைச் செல்வமும் கடவுளின் அருள். நம் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் பூத்துக்குலுங்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். அதற்கு உதவும் ஞானமான ஆலோசனைகளை ஒரு புனிதப் புத்தகத்தில் நமக்காகப் பதிவு செய்திருக்கிறார். அந்த ஆலோசனைகளை இப்போது பார்க்கலாம்.

கணவர்களே, உங்கள் மனைவிமேல் அன்பு காட்டுங்கள்

‘கணவர்கள் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன்மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான்.’​—எபேசியர் 5:28, 29.

கணவர், குடும்பத்துக்குத் தலைவராக இருக்கிறார். (எபேசியர் 5:23) ஆனாலும், ஒரு நல்ல கணவர் கறாராகவோ கடுகடுப்பாகவோ நடந்துகொள்ள மாட்டார். தன்னுடைய மனைவிக்கு மதிப்புக் கொடுப்பார். அவளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார். அவளிடம் அன்பாக, பாசமாக நடந்துகொள்வார். எப்போதுமே தான் நினைக்கிறபடி எல்லாமே செய்ய வேண்டுமென்று தன் மனைவியைக் கட்டாயப்படுத்தாமல் அவளை சந்தோஷப்படுத்தவும் முயற்சி செய்வார். (பிலிப்பியர் 2:4) மனைவியிடம் ஒளிவுமறைவில்லாமல் பேசுவார். அவள் பேசும்போது காதுகொடுத்துக் கேட்பார். அவளிடம் “கடுகடுப்பாக” நடந்துகொள்ள மாட்டார். அவளை அடிக்கவோ அவளுடைய மனதைக் காயப்படுத்துகிற மாதிரி பேசவோ மாட்டார்.​—கொலோசெயர் 3:19.

மனைவிகளே, உங்கள் கணவருக்கு மதிப்புக் கொடுங்கள்

“மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.”​—எபேசியர் 5:33.

ஒரு மனைவி தன்னுடைய கணவருக்கு மதிப்புக் கொடுத்து அவர் எடுக்கிற முடிவுகளுக்கு ஆதரவு கொடுக்கும்போது குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். தன்னுடைய கணவர் ஏதாவது தவறு செய்துவிட்டால் அவரை மட்டம் தட்டிப் பேச மாட்டாள். அதற்குப் பதிலாக, சாந்தமாகவும் மரியாதையாகவும் பேசுவாள். (1 பேதுரு 3:4) ஒரு பிரச்சினையைப் பற்றிக் கணவரிடம் பேச வேண்டுமென்றால், சரியான சமயம்பார்த்து பேசுவாள், மரியாதையாகவும் பேசுவாள்.​—பிரசங்கி 3:7.

உங்கள் துணைக்கு உண்மையாக இருங்கள்

“மனிதன் [கணவன்] . . . தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்.”​—ஆதியாகமம் 2:24.

ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்துகொள்ளும்போது, அவர்களுக்குள் நெருக்கமான உறவு ஏற்படுகிறது. இந்த உறவு முறிந்துவிடாமல் இருக்க கணவனும், மனைவியும் மனம்விட்டுப் பேச வேண்டும். அன்பைக் காட்டும் விதத்தில் சின்ன சின்ன விஷயங்களைச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டுமென்றால், கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. துணைக்குத் துரோகம் செய்வதால் வரும் வலி காலத்துக்கும் ஆறாது. அதனால், ஒருவர்மேல் ஒருவருக்கு இருக்கிற நம்பிக்கை போய்விடும், குடும்பமும் இரண்டாகிவிடும்.​—எபிரெயர் 13:4.

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

“நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.”​—நீதிமொழிகள் 22:6.

பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய பொறுப்பைப் பெற்றோருக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, மற்றவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், பிள்ளைகளுக்கு அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும். (உபாகமம் 6:6, 7) ஒரு பிள்ளை தவறு செய்யும்போது, ஞானமாக நடந்துகொள்கிற ஒரு அப்பாவோ அம்மாவோ உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக, ‘நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவராகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவராகவும் . . . சட்டென்று கோபப்படாதவராகவும்’ இருப்பார். (யாக்கோபு 1:19) பிள்ளைகளைக் கண்டிக்க வேண்டிய சூழ்நிலை வரும்போதுகூட அன்பாகக் கண்டிப்பாரே தவிர, கோபத்தோடு கண்டிக்க மாட்டார்.

பிள்ளைகளே, உங்கள் பெற்றோர் பேச்சைக் கேட்டு நடங்கள்

“பிள்ளைகளே, . . . உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். . . . ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.’”​—எபேசியர் 6:1, 2.

பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர்களிடம் மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும். அப்பா, அம்மாவுக்கு அவர்கள் மதிப்புக் கொடுக்கும்போது, குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் இருக்கும். வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் அப்பா, அம்மாவை நன்றாகக் கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கலாம். உதாரணத்துக்கு, அவர்களுடைய வீட்டைப் பராமரிக்கலாம் அல்லது அவர்களுக்குத் தேவையான பண உதவி செய்யலாம்.—1 தீமோத்தேயு 5:3, 4.