Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷப் பாதையில் செல்ல...

மன்னிப்பு

மன்னிப்பு

“சின்ன வயசுல, கேவலமான பேச்சும், காட்டுக்கத்தலும்தான் என் காதுல விழுந்துட்டே இருக்கும். மன்னிக்கறதுனா என்னென்னே எனக்குத் தெரியாம இருந்துச்சு. பெரியவளான பிறகுகூட, யார் மேலயாவது கோபம் வந்துச்சுன்னா, நாள்கணக்கா மனசுக்குள்ள புகைஞ்சிட்டு இருப்பேன், தூங்கக்கூட மாட்டேன்” என்று பெட்ரிஷியா சொல்கிறார். ஆம், எரிச்சலும் கோபமும்தான் வாழ்க்கை என்று இருந்தால், அந்த வாழ்க்கையில் சந்தோஷத்துக்கும் மனநிம்மதிக்கும் இடமில்லாமல் போய்விடும். மன்னிக்கிற குணம் இல்லாதவர்களைப் பற்றிய ஆய்வுகள் அதைத்தான் காட்டுகின்றன; அவர்கள் . . .

  • கோபத்தின் அல்லது மனக்கசப்பின் காரணமாக மற்றவர்களோடு சண்டை போட்டுக்கொண்டு, யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கிபோய்விடலாம், தனிமையில் வாடலாம்

  • சீக்கிரத்தில் மனம் புண்பட்டுவிடலாம், கவலையில் மூழ்கிவிடலாம், பயங்கரமான மனச்சோர்வுக்கு ஆளாகிவிடலாம்

  • மற்றவர்கள் செய்த தவறையே யோசித்துக்கொண்டு தங்களுடைய சந்தோஷத்தைப் பறிகொடுத்துவிடலாம்

  • மன்னிக்க வேண்டுமென்று தெரிந்திருந்தும், மன்னிக்காமல் இருப்பதைக் குறித்து குற்ற உணர்ச்சியில் தவிக்கலாம்

  • அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்; உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு வலி, தலைவலி போன்ற பிரச்சினைகளை அதிகளவில் எதிர்ப்படலாம் *

மன்னிப்பது என்றால் என்ன? மன்னிப்பது என்றால், புண்படுத்திய நபரைத் தண்டிக்காமல் விட்டுவிடுவதாகும்; கோபத்தையும் மனக்கசப்பையும் பழிவாங்குகிற எண்ணத்தையும் விட்டுவிடுவதாகும். ஆனால் அது, தவறைக் கண்டும்காணாமல் விட்டுவிடுவதோ, அந்தத் தவறைக் குறைவாக எடைபோடுவதோ, தவறே நடக்காததுபோல் காட்டிக்கொள்வதோ கிடையாது. மாறாக, பிரச்சினை ஏற்பட்ட நபரோடு சமாதானத்தையும் நல்ல பந்தத்தையும் காத்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தோடு, நன்றாக யோசித்து எடுக்கப்படுகிற தனிப்பட்ட தீர்மானமாகும்; இதில் அன்பு உட்பட்டிருக்கிறது.

மன்னிக்கும் குணத்தில் புரிந்துகொள்ளுதலும் உட்பட்டிருக்கிறது. எல்லாருமே சொல்லிலும் செயலிலும் தவறு செய்பவர்கள்தான் என்பதை மன்னிக்கும் குணமுள்ளவர் புரிந்துகொள்கிறார். (ரோமர் 3:23) இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.

அப்படியானால் மன்னிக்கும் குணம், ‘எல்லாரையும் பரிபூரணமாக இணைக்கிற’ அன்பின் ஒரு முக்கியமான அம்சம் என்பது தெளிவாகத் தெரிகிறது. (கொலோசெயர் 3:14) மாயோ கிளினிக் வெப்சைட் சொல்கிறபடி, மன்னித்தால் . . .

  • சந்தோஷமான பந்தங்களை அனுபவிக்க முடியும்; முக்கியமாக, மனதைப் புண்படுத்தியவரைப் புரிந்துகொண்டு, அவர்மேல் அனுதாபத்தையும் கரிசனையையும் காட்ட முடியும்

  • மன நிம்மதியும், கடவுளைச் சந்தோஷப்படுத்துகிறோம் என்ற திருப்தியும் கிடைக்கும்

  • கவலை, மன அழுத்தம், பகை உணர்ச்சி ஆகியவை குறையும்

  • மனச்சோர்வு ஏற்படாமல் இருக்கும்

உங்களை நீங்களே மன்னியுங்கள். நம்மை நாமே மன்னிப்பது “ரொம்பக் கஷ்டம்தான்,” ஆனால், உடல் மற்றும் மன “ஆரோக்கியத்துக்கு அது மிகமிக முக்கியம்” என்கிறது டிஸெபிலிட்டி & ரீஹாபிலிடேஷன் என்ற பத்திரிகை. உங்களை நீங்களே மன்னிப்பதற்கு உதவுகிற சில விஷயங்கள் என்ன?

  • எல்லாவற்றையும் நூறு சதவீதம் சரியாகச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்களும்கூட தவறு செய்கிறவர்தான் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்.—பிரசங்கி 7:20.

  • நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்; அப்போதுதான், மறுபடியும் அதே தவறுகளைச் செய்ய மாட்டீர்கள்.

  • உங்களிடமே நீங்கள் பொறுமையாக இருங்கள்; உங்களிடமுள்ள சில குறைகளும் சில கெட்ட பழக்கங்களும் சட்டென்று மறைந்துவிடாது.—எபேசியர் 4:23, 24

  • உற்சாகமூட்டும், நம்பிக்கையூட்டும், கருணைகாட்டும், நேர்மையான நண்பர்களோடு பழகுங்கள்.—நீதிமொழிகள் 13:20

  • ஒரு நபரைப் புண்படுத்திவிட்டால், அதை ஒத்துக்கொள்ளுங்கள், உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். அவரோடு சமாதானமாகிவிட்டால், உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.—மத்தேயு 5:23, 24

பைபிள் நெறிமுறைகள் நிச்சயம் பலன் தரும்!

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பெட்ரிஷியா, பைபிளைப் படித்த பிறகு, மன்னிக்கக் கற்றுக்கொண்டார். “என் வாழ்க்கைய சீரழிச்ச கோபத்திலிருந்து விடுபட்ட மாதிரி உணர்றேன். இப்ப நான் வேதனைப்படறது இல்ல, மத்தவங்கள வேதனைப்படுத்தறதும் இல்ல. கடவுள் நம்மள நேசிக்கிறாரு, நமக்கு எது சிறந்ததோ அதத்தான் கொடுக்க நினைக்குறாருங்கறத பைபிள் நெறிமுறைகள் காட்டுது” என்கிறார் அவர்.

ரான் என்பவர் இப்படிச் சொல்கிறார்: “மத்தவங்களோட எண்ணங்களையோ செயல்களையோ என்னால கட்டுப்படுத்த முடியாது, ஆனா என்னை நானே கட்டுப்படுத்திக்க முடியும். எனக்குச் சமாதானம் வேணும்னா, நான்தான் கோபத்த விடணும். சமாதானம், கோபம் இந்த ரெண்டும் வட துருவம் தென் துருவம் மாதிரி, ஒரே சமயத்தில என்னால இந்த ரெண்டு இடத்திலயும் இருக்க முடியாதுனு தெரிஞ்சுகிட்டேன். இப்ப என் மனசாட்சி சுத்தமா இருக்கு.”

^ பாரா. 8 ஆதாரங்கள்: மாயோ கிளினிக் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவம் வெப்சைட்டுகள்; அதோடு, சோஷியல் ஸைக்கியாட்ரி அண்ட் ஸைக்கியாட்ரிக் எப்பிடமையாலஜி என்ற பத்திரிகை.