Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷப் பாதையில் செல்ல...

மனத்திருப்தியும் தாராள குணமும்

மனத்திருப்தியும் தாராள குணமும்

‘ஒருவருக்கு எந்தளவு சொத்து இருக்கிறதோ அந்தளவு அவர் சந்தோஷமானவர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்’ என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இந்த எண்ணத்தில்தான், கோடிக்கணக்கான மக்கள் நிறைய பணம் சம்பாதிப்பதற்காகத் தினம்தினம் மாடாய் உழைத்துக் களைத்துப்போகிறார்கள். ஆனால், காசுபணமும் சொத்துசுகமும் நிலையான சந்தோஷத்தைத் தருமா? அத்தாட்சிகள் என்ன காட்டுகின்றன?

நம்முடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பிறகு, வருமானம் எவ்வளவுதான் அதிகமானாலும், அது நம்முடைய சந்தோஷத்தையோ மனநிறைவையோ கடுகளவுகூட அதிகரிக்காது என்று ஜர்னல் ஆஃப் ஹேப்பினஸ் ஸ்டடீஸ் சொல்கிறது. பணம் பிரச்சினைக்குக் காரணமல்ல. “பணம், பணம் என்று அலைவதுதான் பிரச்சினைக்குக் காரணம்” என்கிறது மானிட்டர் ஆன் ஸைக்காலஜி என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை. இந்த வார்த்தைகள், சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு பைபிளில் எழுதப்பட்ட பின்வரும் ஆலோசனையைத்தான் படம்பிடித்துக் காட்டுகின்றன: “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு . . . பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9, 10) பலவிதமான வேதனைகள் என்றால், என்னென்ன வேதனைகள்?

சொத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற கவலை; தூக்கமில்லாமை. “வேலை செய்கிறவன் கொஞ்சம் சாப்பிட்டாலும் சரி, நிறைய சாப்பிட்டாலும் சரி, நிம்மதியாகத் தூங்குவான். ஆனால், ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன் தூங்க முடியாமல் தவிப்பான்.”—பிரசங்கி 5:12.

எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்காததால் ஏமாற்றம். இந்த ஏமாற்றத்திற்கு ஒரு காரணம், தீராத பண ஆசைதான். “வெள்ளியை நேசிக்கிறவன் எவ்வளவு வெள்ளி கிடைத்தாலும் திருப்தியடைய மாட்டான். சொத்துகளை விரும்புகிறவன் எவ்வளவு வருமானம் வந்தாலும் திருப்தியடைய மாட்டான்.” (பிரசங்கி 5:10) ஒருவருக்குப் பண ஆசை இருந்தால், உண்மையான சந்தோஷத்தைத் தருகிற விஷயங்களுக்காக, அதாவது தன் குடும்பத்தாருக்காக, நண்பர்களுக்காக, ஆன்மீகக் விஷயங்களுக்காகக் கொடுக்க வேண்டிய பொன்னான நேரத்தைக் கொடுக்காமல் போய்விடலாம்.

பணம், சொத்து இல்லாமல்போகும்போது, அதன் மதிப்பை இழந்துவிடும்போது ஏற்படுகிற விரக்தி, துக்கம். “சொத்து சேர்ப்பதற்காக உழைத்து உழைத்துக் களைத்துப்போகாதே. அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டு புத்தியோடு நடந்துகொள். இல்லாமல்போகும் ஒன்றின்மேல் நீ ஏன் கண்ணை வைக்க வேண்டும்? அது கழுகைப் போல் இறக்கை விரித்து வானத்துக்குப் பறந்துவிடுமே!”—நீதிமொழிகள் 23:4, 5.

சந்தோஷத்தைப் பெற உதவும் பண்புகள்

மனத்திருப்தி. “இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டுபோகவும் முடியாது. அதனால், நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.” (1 தீமோத்தேயு 6:7, 8) மனத்திருப்தியுடன் இருப்பவர்கள் குறைசொல்ல மாட்டார்கள், முறுமுறுக்க மாட்டார்கள், வயிற்றெரிச்சல்பட மாட்டார்கள். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்று பகட்டாக வாழ மாட்டார்கள்; அதனால், தேவையில்லாத மனக் கவலைக்கும் மன அழுத்தத்திற்கும் அவர்கள் ஆளாவதில்லை.

தாராள குணம். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.” (அப்போஸ்தலர் 20:35) தாராள குணமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள். ஏனென்றால், மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் அவர்களுக்குச் சந்தோஷம் கிடைக்கிறது; மற்றவர்களுடைய சந்தோஷத்துக்காக, கொஞ்சம் நேரத்தையும் சக்தியையும் மட்டும்தான் கொடுக்க முடியும் என்றால்கூட அதைத் தாராளமாகக் கொடுக்கிறார்கள். இதற்காக அவர்களுக்குக் கிடைக்கிற பலன்? கோடி கோடியாகக் கொட்டினாலும் கிடைக்காத பலன்—ஆம், அன்பு, மரியாதை, தாராளமாகக் கைமாறு செய்யும் உண்மை நண்பர்கள்!—லூக்கா 6:38.

பொருள்களுக்கு அல்ல ஆட்களுக்கே முக்கியத்துவம். “வெறுப்போடு பரிமாறப்படும் அருமையான இறைச்சியைவிட, அன்போடு பரிமாறப்படும் காய்கறியே மேல்.” (நீதிமொழிகள் 15:17) இதன் அர்த்தம் என்ன? காசுபணம் அல்ல, அன்பான உறவுகள்தான் நமக்கு விலைமதிப்பில்லா சொத்து! சந்தோஷம் என்ற கட்டிடத்துக்கு அஸ்திவாரமே அந்த அன்புதான்! அன்பைப் பற்றிப் பிறகு பார்ப்போம்.

தென் அமெரிக்காவிலுள்ள சாபீனா என்ற பெண், பைபிள் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொண்டார். கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு வாழ்க்கையே ஒரு போராட்டமானது. தன் இரண்டு மகள்களையும் வைத்துக்கொண்டு அன்றாடத் தேவைகளுக்கே அலைமோதினார். இரண்டு இடங்களில் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. காலை 4 மணிக்கே எழுந்து, ராத்திரிவரை பம்பரமாகச் சுழல வேண்டியிருந்தது. ஆனாலும், அவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். விளைவு?

வருமானத்தில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாவிட்டால்கூட, வாழ்க்கை பற்றிய அவருடைய மனநிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது! ஆம், சோகமாகத் தெரிந்த வாழ்க்கை அவருக்குச் சந்தோஷமாகத் தெரிய ஆரம்பித்தது. உதாரணத்துக்கு, ஆன்மீகப்பசி திருப்தி செய்யப்படும்போது கிடைக்கும் சந்தோஷம் கிடைத்தது. (மத்தேயு 5:3) சக வணக்கத்தார் மத்தியில் உண்மையான நண்பர்கள் கிடைத்தார்கள். கற்றுக்கொண்ட பைபிள் விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொடுக்கும்போது வருகிற சந்தோஷமும் கிடைத்தது.

“ஒருவர் செய்கிற நீதியான செயல்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 11:19) அப்படியானால், மனத்திருப்தியும் தாராள குணமும் காட்டுவது, பொருள்களுக்குப் பதிலாக ஆட்களுக்கு முக்கியத்துவம் தருவது ஆகிய நீதியான செயல்களைச் செய்கிறவர் ஞானமுள்ளவராகத்தான் இருக்க வேண்டும்!