Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

சத்தியம் செய்வதை இயேசு ஏன் கண்டனம் செய்தார்?

சில சந்தர்ப்பங்களில், “கடவுளுடைய பெயரில் உங்களுக்குச் சத்தியம் செய்து கொடுக்கிறேன்” என்றோ, “யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்கிறேன்” என்றோ சொல்ல திருச்சட்டம் மக்களை அனுமதித்தது. ஆனால், இயேசுவின் காலத்தில், சத்தியம் செய்யும் பழக்கம் ரொம்பவே சர்வசாதாரணமாகிவிட்டது. தாங்கள் சொல்வதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக யூதர்கள் எதற்கெடுத்தாலும் சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், ஒன்றுக்கும் உதவாத அந்தப் பழக்கத்தை இயேசு இரண்டு தடவை கண்டனம் செய்தார். “நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்” என்று அவர் சொன்னார்.—மத். 5:33-37; 23:16-22.

ஆணையிட்டுக் கொடுப்பது, அதாவது தாங்கள் சொல்வது உண்மை என்று சத்தியம் செய்வது, யூதர்கள் மத்தியில் எந்தளவுக்குச் சகஜமாக இருந்தது என்பதை அவர்களுடைய புத்தகமாகிய டால்முட் காட்டுவதாக புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்) சொல்கிறது. ஏனென்றால், எப்படிப்பட்ட சத்தியங்களை மீறலாம், எப்படிப்பட்ட சத்தியங்களை மீறக் கூடாது என்றெல்லாம் மிகவும் விலாவாரியாக டால்முட் விளக்குகிறது.

இயேசு மட்டுமல்ல, மற்றவர்களும் இந்தத் தவறான பழக்கத்தைக் கண்டனம் செய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு யூதப் பிரிவைச் சேர்ந்தவர்கள், சத்தியம் செய்வதைத் தவிர்த்ததாக யூத சரித்திராசிரியரான ஃபிளேவியஸ் ஜொசிஃபஸ் எழுதினார். சத்தியம் செய்வது பொய் சொல்வதைவிட மோசமானது என்று அந்தப் பிரிவினர் நம்பினார்கள். மற்றவர்கள் தன்னை நம்ப வேண்டும் என்பதற்காக ஒருவர் சத்தியம் செய்ய வேண்டியிருக்கிறது என்றால், அவர் பொய் பேசுபவராகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். “அடிக்கடி ஆணையிடுபவர்கள் தீநெறியில் ஊறியவர்கள்” என்று யூதர்களின் புத்தகமாகிய சீராக்கின் ஞானம் (23:11, பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. முக்கியமில்லாத விஷயங்களுக்காகச் சத்தியம் செய்வதை இயேசு கண்டனம் செய்தார். நாம் எப்போதுமே உண்மை பேசினால், மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகச் சத்தியம் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.