Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததற்கு பைபிளைத் தவிர வேறு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா?

மீதியானியர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கூட்டிக்கொண்டு போன பிறகு, மூதாதையான யாக்கோபும் அவருடைய குடும்பமும் கானான் தேசத்திலிருந்து எகிப்துக்குக் குடிமாறிப் போனதாக பைபிள் சொல்கிறது. நைல் நதியின் டெல்டா பகுதியான கோசேனில் அவர்கள் குடியேறினார்கள். (ஆதி. 47:1, 6) இஸ்ரவேலர்களுடைய “எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. . . . அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது.” இதைப் பார்த்து எகிப்தியர்கள் பயந்துபோனார்கள். அதனால், இஸ்ரவேலர்களை கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்க ஆரம்பித்தார்கள்.—யாத். 1:7-14.

இன்றிருக்கும் சில விமர்சகர்கள், இந்தப் பதிவு வெறும் கட்டுக்கதை என்று சொல்கிறார்கள். ஆனால், செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவர்கள் * பழங்கால எகிப்தில் கொத்தடிமைகளாக இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, எகிப்தின் வடக்குப் பகுதியில், ஆரம்பக் கால குடியிருப்புகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்திருக்கிறார்கள். 20 அல்லது அதற்கும் அதிகமான செமிட்டிக் குடியிருப்புகள் அங்கே இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக டாக்டர் ஜான் பிம்சன் சொல்கிறார். எகிப்தோடு சம்பந்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளைச் செய்யும் ஜேம்ஸ் கே. ஹாஃப்மையர் இப்படிச் சொல்கிறார்: “மேற்கு ஆசிய பகுதியில் [யாக்கோபின் குடும்பத்தார் வாழ்ந்த பகுதியில்] இருந்த செமிட்டிக் மொழி பேசிய மக்கள் குடிமாறிப் போவதற்கு, கிட்டத்தட்ட கி.மு. 1800-லிருந்து 1540 வரை, எகிப்து வசதியான ஓர் இடமாக இருந்தது.” அதோடு, “இந்தக் காலப்பகுதி, ‘மூதாதையர்களின் காலப்பகுதி’ என்று நம்பப்படுகிற காலத்தோடு ஒத்துப்போவதால், ஆதியாகமப் புத்தகத்தில் இருக்கிற காலப்பகுதியோடும் சூழ்நிலைகளோடும் இது பொருந்துகிறது” என்றும் சொல்கிறார்.

எகிப்தின் தெற்குப் பகுதியில் இன்னும் ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட கி.மு. 2000 முதல் 1600 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த பாப்பிரஸ் துண்டுகள் அங்கே கண்டெடுக்கப்பட்டன. எகிப்தின் தெற்குப் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் வேலை செய்த அடிமைகளின் பெயர்கள் அவற்றில் இருக்கின்றன. அந்தப் பெயர்களில், 40-க்கும் அதிகமான பெயர்கள் செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள்! இந்த அடிமைகள், சமையல்காரர்களாகவும் நெசவாளிகளாகவும் மற்ற வேலைகளைச் செய்பவர்களாகவும் இருந்தார்கள். “திபெய்டில் [தெற்கு எகிப்து] இருந்த ஒரு வீட்டிலேயே நாற்பதுக்கும் அதிகமான செமிட்டிக் மக்கள் வேலை செய்திருக்கிறார்கள் என்றால், எகிப்து முழுவதும், அதுவும் டெல்டா பகுதியில், கண்டிப்பாக நிறைய பேர் இருந்திருக்க வேண்டும்” என்று ஹாஃப்மையர் சொல்கிறார்.

அந்த பாப்பிரஸ் துண்டுகளில் இருக்கும் சில பெயர்கள், “பைபிளில் இருக்கும் பெயர்களைப் போலவே இருக்கின்றன” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டேவிட் ரோல் குறிப்பிட்டார். உதாரணத்துக்கு, இசக்கார், ஆசேர், சிப்பிராள் மாதிரியான பெயர்கள் அவற்றில் இருக்கின்றன. (யாத். 1:3, 4, 15) “இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள் என்பதற்கு இது ஆணித்தரமான அத்தாட்சி” என்று அவர் சொல்கிறார்.

இஸ்ரவேலர்கள் “எகிப்தில் அடிமைகளாக இருந்ததைப் பற்றியும், அவர்களுடைய பயணத்தைப் பற்றியும் பைபிள் சொல்லும் விஷயங்களுக்கு உறுதியான சரித்திரப்பூர்வ ஆதாரங்கள் இருக்கின்றன” என்று டாக்டர் பிம்சன் சொல்கிறார்.

^ பாரா. 4 நோவாவின் மூன்று மகன்களில் ஒருவரான சேமின் வம்சத்தில் வந்தவர்கள்தான் செமிட்டிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏலாமியர்கள், அசீரியர்கள், ஆரம்பக் கால கல்தேயர்கள், இஸ்ரவேலர்கள், சீரியர்கள் மற்றும் சில அரேபிய இனத்தாரும் சேமின் வம்சத்தில் வந்திருப்பதாகத் தெரிகிறது.