Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?

நீங்கள் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?

டான், கனடாவிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சி! தெருவில் குடியிருக்கிறவர்களிடம் பேச அவர் விசேஷ முயற்சி எடுக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி டான் இப்படிச் சொல்கிறார்: “பீட்டரை மாதிரி ஒரு அழுக்கான ஆள நான் இதுவரைக்கும் தெருவுல பார்த்ததே இல்ல. பார்க்குறதுக்கு அவர் ரொம்ப அருவருப்பா இருந்தார். யாரையும் அவர் பக்கத்துல விடவே மாட்டார். மத்தவங்க அவருக்கு அன்பா உதவி செய்யணும்னு முயற்சி செஞ்சா, அவர் அத ஏத்துக்க மாட்டார்.” இருந்தாலும் தெருவில் இருந்த பீட்டரிடம் கனிவாக நடந்துகொள்ள, 14 வருஷங்களுக்கும்மேல் டான் பொறுமையோடு முயற்சி செய்தார்.

ஒரு நாள் பீட்டர் டானிடம், “நீ ஏன் என்னை தொந்தரவு பண்ற? மத்தவங்க யாரும் என்னை கண்டுக்கிறது இல்ல. உனக்கு மட்டும் என்மேல ஏன் இவ்வளவு அக்கறை?” என்று கேட்டார். பீட்டரின் மனதைத் தொடும் விதத்தில், டான் சாதுரியமாக 3 பைபிள் வசனங்களை அவருக்குக் காட்டினார். முதலாவதாக, கடவுளுக்கு ஒரு பெயர் இருப்பது தெரியுமா என்று அவரிடம் கேட்டார். அதை சங்கீதம் 83:18-ல் பைபிளிலிருந்து வாசிக்கும்படி சொன்னார். பிறகு, அவர்மேல் தனக்கு ஏன் அக்கறை இருக்கிறது என்று விளக்க, ரோமர் 10:13, 14-ஐ வாசிக்கச் சொன்னார். “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று அந்த வசனம் சொல்கிறது. கடைசியாக, மத்தேயு 9:36-ஐ டான் வாசித்தார். அதே வசனத்தை பீட்டரையும் வாசிக்கச் சொன்னார். “மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய [இயேசுவுடைய] மனம் உருகியது; ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்” என்று அந்த வசனம் சொல்கிறது. அதைப் படித்ததும், பீட்டருடைய கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. “நானும் அந்த ஆடுகள்ல ஒருத்தனா?” என்று பீட்டர் கேட்டார்.

பீட்டர் மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தார். குளித்தார், தாடியை நேர்த்தியாக வெட்டினார், டான் தந்த நல்ல துணிமணிகளை உடுத்தினார். தொடர்ந்து தன்னை சுத்தமாக வைத்துக்கொண்டார்.

பீட்டர் ஒரு டைரி வைத்திருந்தார். அதன் ஆரம்பப் பக்கங்களில் வெறும் கசப்பான அனுபவங்கள்தான் இருந்தன. ஆனால், சமீப காலங்களில் அவர் எழுதிய விஷயங்கள் வித்தியாசமாக இருந்தன. ஒரு பக்கத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார்: “இன்று நான் கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொண்டேன். என்னால் இப்போது யெகோவாவிடம் ஜெபம் செய்ய முடியும். அவருடைய பெயரைத் தெரிந்துகொண்டது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நான் யெகோவாவுடைய நண்பனாக ஆக முடியும் என்றும், நான் எப்போது பேசினாலும், என்ன பேசினாலும், அவர் அதைக் காதுகொடுத்துக் கேட்பார் என்றும் டான் சொல்கிறார்.”

கூடப்பிறந்தவர்களுக்கு பீட்டர் எழுதிய கடைசி வார்த்தைகள்:

“இன்று எனக்கு உடம்பு சரியில்லை. எனக்கு ரொம்ப வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன். ஒருவேளை இது என் கடைசி நாளாகக்கூட இருக்கலாம். இருந்தாலும், என் நண்பரை [டான்] புதிய உலகத்தில் பார்ப்பேன் என்று எனக்குத் தெரியும். நீங்கள் இதைப் படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். ஆனால், என் சவ அடக்கத்திற்கு யாராவது வித்தியாசமாக வந்தால், அவரிடம் பேசுங்கள். தயவுசெய்து இந்தச் சின்ன ப்ளூ கலர் புத்தகத்தை வாசியுங்கள். * புதிய உலகத்தில் மறுபடியும் என் நண்பரைப் பார்ப்பேன் என்று அது சொல்கிறது. நான் இதை முழு மனதோடு நம்புகிறேன். உங்கள் அன்புத் தம்பி, பீட்டர்.”

சவ அடக்கத்துக்குப் பிறகு, பீட்டரின் அக்கா ஊமி இப்படிச் சொல்கிறார்: “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பீட்டர் என்னை தொடர்பு கொண்டான். இத்தனை வருஷத்துல, முதல் தடவையா அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான், சிரிக்கக்கூட செஞ்சான்.” பிறகு, அவர் டானிடம் இப்படிச் சொன்னார்: “இந்த புத்தகத்த கண்டிப்பா படிக்கிறேன். இது என் தம்பியோட மனச தொட்டுருக்குனா, இது ரொம்ப ஸ்பெஷலா இருக்கணும்.” ஒரு சகோதரியோடு, சமீபத்தில் வந்த பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை படிப்பதற்கு ஊமி ஒத்துக்கொண்டார்.

நாமும் மனிதர்களின் வெளித்தோற்றத்தைப் பார்க்காமல், அவர்கள்மேல் உண்மையான அன்பு காட்ட வேண்டும். எல்லா விதமான மக்களிடமும் பொறுமையாக இருக்க வேண்டும். (1 தீ. 2:3, 4) அப்படிச் செய்தால், பீட்டர் போன்ற ஆட்களின் மனதை நம்மால் தொட முடியும். அப்படிப்பட்டவர்கள், ஒருவேளை மனிதர்களுக்கு முக்கியமானவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையிலேயே நல்மனம் உள்ளவர்களாக இருப்பார்கள். ‘இதயத்தைப் பார்க்கிற’ கடவுள், நல்ல மனப்பான்மையோடு இருப்பவர்களின் இதயங்களில் சத்திய விதையை வளரச் செய்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—1 சா. 16:7; யோவா. 6:44.

^ பாரா. 7 பல வருஷங்களுக்கு முன்பு அவருக்குக் கிடைத்த, “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்” என்ற புத்தகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இது பைபிள் படிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சடிக்கப்படுவதில்லை.