Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் அக்கறை காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்

கடவுள் அக்கறை காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்

தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதமான திறனோடு கடவுள் நம் உடலைப் படைத்திருக்கிறார். ஆரோக்கியமான நம் உடலில் வெட்டுக்காயமோ, சிராய்ப்போ ஏற்படும்போது, அல்லது துளைகள் போடப்படும்போது, “அது பெரிய காயமாக இருந்தாலும் சரி, சிறிய காயமாக இருந்தாலும் சரி, அது குணமாவதற்கு நம் உடலில் சிக்கலான சில விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன.” (ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின்) இரத்தக் கசிவை நிறுத்துவதற்கும், காயத்தை ஆற்றுவதற்கும், திசுக்களைப் பலப்படுத்துவதற்கும் நம் உடல் உடனடியாகச் செயல்பட ஆரம்பிக்கிறது.

சிந்தியுங்கள்: உடல் ரீதியான காயங்களைக் குணப்படுத்திக்கொள்ளும் திறனோடு நம்முடைய படைப்பாளர் நம் உடலை வடிவமைத்திருக்கிறார். அப்படியென்றால், உணர்ச்சி ரீதியான காயங்களைக் குணப்படுத்துவதாக அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதியை நாம் நிச்சயம் நம்பலாம், இல்லையா? “உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார். அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 147:3) முன்பு நடந்த ஒரு விஷயத்தால் அல்லது இப்போது நடந்துகொண்டிருக்கிற ஒரு விஷயத்தால் நீங்கள் உணர்ச்சி ரீதியில் காயப்பட்டிருக்கிறீர்கள் என்றால், இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி, உங்களுடைய காயங்களுக்கு யெகோவா கட்டுப் போடுவார் என்று நீங்கள் எப்படி நிச்சயமாக இருக்கலாம்?

கடவுளுடைய அன்பைப் பற்றி பைபிள் என்ன சொல்லித்தருகிறது?

கடவுள் இப்படி உறுதியளிக்கிறார்: “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.” (ஏசாயா 41:10) தன்மீது யெகோவா அக்கறையாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துவைத்திருக்கும் ஒருவருக்கு மன அமைதியும், பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான பலமும் கிடைக்கிறது. இந்த மன அமைதியைத்தான் அப்போஸ்தலன் பவுல், “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” என்று சொன்னார். அதோடு, “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்றும் சொன்னார்.—பிலிப்பியர் 4:4-7, 9, 13.

மனிதர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்மீது விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள பைபிள் உதவுகிறது. உதாரணத்துக்கு, அவர் என்ன செய்யப்போகிறார் என்றும், அவர் அதைச் செய்வார் என்பதை நாம் ஏன் நம்பலாம் என்றும் வெளிப்படுத்துதல் 21:4, 5 சொல்கிறது.

  • மக்களுடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.” யெகோவா நம்முடைய எல்லா வேதனைகளையும் கவலைகளையும் நீக்கிவிடுவார், மற்றவர்களுடைய கண்களில் அற்பமாகத் தெரிகிறவற்றையும்கூட நீக்கிவிடுவார்.

  • பரலோக ‘சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்’ சர்வவல்லமையுள்ள கடவுள், வேதனைகளைத் தடுப்பதற்காகவும், வேண்டிய உதவிகளை நமக்குச் செய்வதற்காகவும் தன்னுடைய சக்தியையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவார்.

  • யெகோவா, தன்னுடைய வாக்குறுதிகள் “நம்பகமானவை, உண்மையானவை” என்று உறுதியளிக்கிறார். ஆம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற உண்மையான கடவுள் என்று அவர் பெயரெடுத்திருக்கிறார்.

“‘அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன’ என்று சொல்வதைக் கேட்டேன். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர், ‘இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்’ என்று சொன்னார். அதோடு, ‘இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை, இவற்றை எழுது’ என்று சொன்னார்.”—வெளிப்படுத்துதல் 21:4, 5.

நம் பரலோகத் தகப்பனின் குணாதிசயங்களை இந்தப் பிரபஞ்சமும் பைபிளும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய நெருங்கிய நண்பராவதற்கு அவருடைய படைப்புகள் மறைமுகமான அழைப்பைக் கொடுக்கிற அதேசமயத்தில், பைபிள் அந்த அழைப்பை நேரடியாகக் கொடுக்கிறது: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:8) ‘அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்று அப்போஸ்தலர் 17:27 சொல்கிறது.

நீங்கள் நேரமெடுத்து கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள் என்றால், “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்” என்பதை நீங்கள் இன்னும் உறுதியாக நம்புவீர்கள். (1 பேதுரு 5:7) யெகோவாமேல் இந்தளவு நம்பிக்கை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஜப்பானிலுள்ள டோரு என்பவரின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவருடைய அம்மா ஒரு கிறிஸ்தவப் பெண். ஆனாலும், யகூஸா என்ற ஜப்பான் மாஃபியா கும்பலில் சேர்ந்துகொண்டு எப்போதும் அடிதடியில்தான் ஈடுபட்டுவந்தார். “கடவுள் என்னை வெறுக்குறார்னு நான் நினைச்சேன்; என்னை சுத்தி இருக்குறவங்க, குறிப்பா எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க, இறந்துபோறது எனக்கு கிடைக்குற தண்டனைனு நினைச்சேன்” என்று அவர் சொல்கிறார். அந்தக் கொடூரமான சூழலும் அவருடைய மனநிலையும் தன்னை “ஈவிரக்கமில்லாத, உணர்ச்சியில்லாத ஆளாக” மாற்றிவிட்டதென்று அவர் சொல்கிறார். தனக்கிருந்த லட்சியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “என்னைவிட பிரபலமான ஒருத்தர கொன்னுட்டு, எனக்குன்னு ஒரு பேரை சம்பாதிச்சதும் செத்துப்போயிடணும்” என்று அவர் சொல்கிறார்.

ஆனால், டோருவுக்கும் அவருடைய மனைவி ஹேனாவுக்கும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்ட பிறகு, அவர் தன்னுடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களைச் செய்தார்; வாழ்க்கையைப் பற்றிய தன் கண்ணோட்டத்தையும் அடியோடு மாற்றினார். “என் கணவர் செஞ்ச மாற்றங்கள என்னால கண்கூடா பார்க்க முடிஞ்சுது” என்று ஹேனா சொல்கிறார். டோரு நம்பிக்கையோடு இப்படிச் சொல்கிறார்: “நம்ம ஒவ்வொருத்தர் மேலயும் உண்மையான அக்கறை காட்டுற கடவுள் ஒருத்தர் இருக்கார். யாரும் செத்துப்போக கூடாதுனு அவர் நினைக்குறார்; தப்பு செஞ்சவங்க உண்மையிலயே மனம் திருந்தும்போது அவர் மன்னிக்க தயாரா இருக்கார். யார்கிட்டயும் சொல்ல முடியாத, யாராலயும் புரிஞ்சுக்க முடியாத விஷயங்கள, நாம அவர்கிட்ட சொல்லும்போது அவர் காதுகொடுத்து கேட்பார். இன்னும் கொஞ்ச நாள்ல, எல்லா பிரச்சினைகளையும், வேதனைகளையும், வலியையும் யெகோவா நீக்கப்போறார். இன்னைக்கும், நாம எதிர்பார்க்காத வழியில நமக்கு நிறைய உதவிகள செஞ்சிட்டிருக்கார். அவர் நம்மமேல அக்கறையா இருக்கார், துவண்டுபோயிருக்குற சமயத்துல நம்மள தூக்கி நிறுத்துறார்.”—சங்கீதம் 136:23.

டோருவுடைய அனுபவம் என்ன காட்டுகிறது? கடவுளால் நம் வேதனைகளுக்கு முடிவுகட்டி நம் கண்ணீரைத் துடைக்க முடியும் என்பதையும், சீக்கிரத்தில் அவர் அதைச் செய்யப்போகிறார் என்பதையும் தெரிந்துகொள்ளும்போது, அருமையான எதிர்கால நம்பிக்கை கிடைக்கிறது; அதுமட்டுமல்ல, இப்போதே சந்தோஷமான வாழ்க்கை வாழவும் உதவுகிறது. ஆம், வேதனைகள் நிறைந்த உலகத்தில் நீங்கள் வாழ்ந்தாலும், கடவுள் காட்டுகிற அன்பும் அக்கறையும் நிச்சயம் உங்களுக்கு நன்மைகளை அள்ளித்தரும்.