Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுத்தத்தைப் பற்றி அன்றே கடவுள் கொடுத்த சட்டங்கள்

சுத்தத்தைப் பற்றி அன்றே கடவுள் கொடுத்த சட்டங்கள்

 3500 வருஷங்களுக்கு முன்பு, வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் போவதற்குத் தயாராக இருந்த சமயம் அது! அப்போது, எகிப்தியர்களுக்கு வந்த ‘கொடிய நோய்களிலிருந்து’ இஸ்ரவேலர்களைப் பாதுகாக்கப் போவதாக யெகோவா சொன்னார். (உபாகமம் 7:15) இதை யெகோவா நிறைய விதங்களில் செய்தார். அதில் ஒன்றுதான், நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் இஸ்ரவேலர்கள் தங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் யெகோவா கொடுத்த விலாவாரியான அறிவுரைகள்! உதாரணங்கள்:

  •    இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தின்படி, அவர்கள் குளிக்க வேண்டும்; உடைகளைத் துவைக்க வேண்டும்.—லேவியராகமம் 15:4-27.

  •   மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்துவதைப் பற்றி யெகோவா இப்படிச் சொன்னார்: “மலஜலம் கழிப்பதற்காக முகாமுக்கு வெளியே ஒரு இடத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு, அங்குதான் நீங்கள் போக வேண்டும். ஆயுதங்களோடு ஒரு சிறிய தடியையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டும். அந்தத் தடியால் குழிதோண்டி மலஜலம் கழித்துவிட்டு மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்.”—உபாகமம் 23:12, 13.

  •    யாருக்காவது தொற்று நோய் இருந்தால், கொஞ்ச நாளைக்கு அவர்கள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். அவர்கள் குணமாகி திரும்பவும் வரும்போது, சுத்தமாகக் குளித்து உடைகளை நன்றாகத் துவைக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் ‘தீட்டில்லாதவர்களாக’ கருதப்படுவார்கள்.—லேவியராகமம் 14:8, 9.

  •   பிணத்தைத் தொட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருக்க வேண்டும்.—லேவியராகமம் 5:2, 3; எண்ணாகமம் 19:16.

 அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாத மருத்துவம் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தில் இருந்தன.

 அதே காலத்தில் வாழ்ந்த மற்ற தேசத்து மக்களுக்கு சுத்தத்தைப் பற்றியும் சுகாதாரத்தைப் பற்றியும் அவ்வளவாகத் தெரியவில்லை. சில உதாரணங்கள்:

  •    குப்பைகள் தெருக்களில் கொட்டப்பட்டிருந்தன. தண்ணீரும் உணவும் மாசுபடுத்தப்பட்டிருந்தன. வேறு விதமான கழிவுகளும் சரியாக அப்புறப்படுத்தப்படவில்லை. அதனால், சுகாதாரம் சீர்கெட்டுப்போய் நோய்கள் வேகமாகப் பரவின. குழந்தைகள் நிறைய பேர் இறந்துபோனார்கள்.

  •    கிருமிகளைப் பற்றி அந்தக் காலத்தில் இருந்த மருத்துவர்களுக்கு அவ்வளவாக எதுவும் தெரியவில்லை. நோய்களைக் குணப்படுத்துவதற்காக, பல்லியின் இரத்தம்... கூழைக்கடாவின் கழிவுகள்... செத்த எலி... சிறுநீர்... பூசணம் பிடித்த ரொட்டி... ஆகியவற்றை எகிப்தியர்கள் பயன்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய மருத்துவத்தில் மனிதர்களுடைய கழிவுகளையும், மிருகங்களுடைய கழிவுகளையும் பரவலாகப் பயன்படுத்தினார்கள்.

  •    நைல் நதியிலும் அதனுடைய வாய்க்கால்களிலும் இருந்த மாசுபடுத்தப்பட்ட தண்ணீரில் நிறைய ஒட்டுண்ணிகள் இருந்ததால், எகிப்தியர்களை நோய் தாக்கியது. அதேபோல், மாசுபடுத்தப்பட்ட உணவால் நிறைய நோய்கள் பரவின. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தைகள் நிறைய பேர் செத்துப்போனார்கள்.

 கடவுளுடைய சட்டங்களை இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்ததால், மற்ற தேசத்து மக்களைவிட அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.