Skip to content

தங்களுடைய சில நம்பிக்கைகளை யெகோவாவின் சாட்சிகள் ஏன் மாற்றியிருக்கிறார்கள்?

தங்களுடைய சில நம்பிக்கைகளை யெகோவாவின் சாட்சிகள் ஏன் மாற்றியிருக்கிறார்கள்?

 நாங்கள் எப்போதுமே பைபிள் சொல்வதைத்தான் நம்புகிறோம். பைபிள் வசனங்களை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளும்போது, எங்களுடைய நம்பிக்கைகளை அதற்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறோம். a

 இந்த மாற்றங்கள், நீதிமொழிகள் 4:18-ல் இருக்கும் வார்த்தைகளோடு ஒத்துப்போகின்றன: “நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற விடியற்கால வெளிச்சம்போல் இருக்கிறது.” சூரிய வெளிச்சம் அதிகமாக அதிகமாக, நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாமே இன்னும் தெளிவாகத் தெரியும். அதேபோல், பைபிள் சத்தியங்களைக் கடவுள் நமக்குப் படிப்படியாகப் புரிய வைக்கிறார், அதுவும் அவர் குறித்திருக்கும் நேரத்தில்! (1 பேதுரு 1:10-12) ஏற்கெனவே பைபிள் சொன்னதுபோல், இந்த ‘முடிவு காலத்தில்’ அவர் அதை இன்னும் வேகமாக செய்துவருகிறார்.—தானியேல் 12:4.

 நம்பிக்கைகளில் மாற்றங்கள் வரும்போது நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, கவலைப்படவும் வேண்டியதில்லை. அன்று வாழ்ந்த கடவுளுடைய மக்கள்கூட சில விஷயங்களைத் தவறாகப் புரிந்து வைத்திருந்தார்கள், அவர்களுக்குத் தவறான எதிர்பார்ப்புகளும் இருந்தன. அதையெல்லாம் அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.

  •   கடவுள் குறித்து வைத்திருந்த காலத்துக்கு 40 வருஷங்களுக்கு முன்பே இஸ்ரவேலர்களை விடுதலை செய்ய மோசே முயற்சி செய்தார்.—அப்போஸ்தலர் 7:23-25, 30, 35.

  •   மேசியாவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களை அப்போஸ்தலர்கள் புரிந்துகொள்ளவில்லை.—ஏசாயா 53:8-12; மத்தேயு 16:21-23.

  •   முதல் நூற்றாண்டில் இருந்த சில கிறிஸ்தவர்கள், “யெகோவாவின் நாள்” எப்போது வரும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள்.—2 தெசலோனிக்கேயர் 2:1, 2.

 பிற்பாடு கடவுள் அவர்களுக்கு உண்மைகளைப் புரிய வைத்தார். அதேபோல் இன்றும் கடவுள் தன் மக்களுக்கு உண்மைகளைத் தொடர்ந்து புரிய வைக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபம் செய்கிறோம்.—யாக்கோபு 1:5.

a பைபிள் வசனங்களை நாங்கள் புரிந்துகொள்ளும் விதம் மாறும்போது அதை நாங்கள் மூடிமறைப்பதில்லை. அதற்குப் பதிலாக, அதைப் பதிவு செய்து, எங்கள் பிரசுரங்களில் வெளியிடுகிறோம். உதாரணத்துக்கு, “நம் நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்துதல்” என்ற லிங்க்கைப் பாருங்கள்.