Skip to content

விவாகரத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன நினைக்கிறார்கள்?

விவாகரத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன நினைக்கிறார்கள்?

 திருமணத்தையும் விவாகரத்தையும் பற்றிய பைபிளின் கருத்துதான் எங்களுடைய கருத்து. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிரந்தர பந்தம் இருக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார். விவாகரத்து செய்வதற்கு பைபிள் அனுமதி அளிப்பதற்கான ஒரே காரணம், பாலியல் முறைகேடுதான்.—மத்தேயு 19:5, 6, 9.

மணவாழ்க்கையில் பிரச்சினைகளை அனுபவிக்கிற தம்பதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்களா?

 ஆம், பல வழிகளில் உதவுகிறார்கள்:

  •   பிரசுரங்கள். சிதைந்து சின்னாபின்னமாகியிருப்பதுபோல் தெரிகிற திருமண பந்தத்தைக்கூட பலப்படுத்துகிற விஷயங்கள் இந்தப் பிரசுரங்களில் தவறாமல் வருகின்றன. உதாரணத்திற்கு, “திருமண பந்தத்தைப் பாதுகாத்திடுங்கள்,” “எப்படி மன்னிப்பது,” “இழந்த நம்பிக்கையைப் பெற...” ஆகிய கட்டுரைகளைப் பாருங்கள்.

  •   கூட்டங்கள். எங்களுடைய சபைக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் மணவாழ்க்கை சம்பந்தமான நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன.

  •   மூப்பர்கள். சபை மூப்பர்கள் தம்பதிகளுக்கு தனிப்பட்ட உதவி அளிக்கிறார்கள்; பைபிளிலிருந்து எபேசியர் 5:22-25 போன்ற வசனங்களைக் காட்டி ஆலோசனை கொடுக்கிறார்கள்.

ஒரு யெகோவாவின் சாட்சியுடைய விவாகரத்திற்கு சபை மூப்பர்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டுமா?

 வேண்டாம். மணவாழ்வில் பிரச்சினைகளைச் சந்திக்கிற ஒரு தம்பதிக்கு உதவி செய்யும்படி மூப்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிற சூழ்நிலையில்கூட, அந்தத் தம்பதி என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டுமென்று சொல்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. (கலாத்தியர் 6:5) பைபிள் சொல்கிற காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக ஒருவர் விவாகரத்து செய்கிறார் என்றால், அப்படிப்பட்ட நபர் மறுமணம் செய்வதை பைபிள் அனுமதிப்பதில்லை.—1 தீமோத்தேயு 3:1, 5, 12.

பிரிந்துவாழ்வது பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன நினைக்கிறார்கள்?

 மணவாழ்க்கை அவ்வளவு சுமூகமாக இல்லாவிட்டாலும்கூட, தம்பதிகள் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியாமல் சேர்ந்து வாழ வேண்டுமென்றே பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 7:10-16) ஊக்கமாக ஜெபம் செய்வதன் மூலமும், பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அன்பு காட்டுவதன் மூலமும் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.—1 கொரிந்தியர் 13:4-8; கலாத்தியர் 5:22.

 ஆனாலும், நிலைமை படுமோசமாகும்போது கிறிஸ்தவர்கள் சிலர் தங்களுடைய மணத்துணையைவிட்டுப் பிரிய முடிவு செய்திருக்கிறார்கள்; சில சூழ்நிலைகளைக் கவனியுங்கள்:

  •   வேண்டுமென்றே குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளாமல் இருப்பது.—1 தீமோத்தேயு 5:8.

  •   அடித்துக் கொடுமைப்படுத்துவது.—சங்கீதம் 11:5.

  •   யெகோவாவை வணங்குவதற்கு பெரும் தடையாக இருப்பது. உதாரணமாக, கடவுளுடைய கட்டளையை மீறும்படி யெகோவாவின் சாட்சியாக இல்லாத மணத்துணை கட்டாயப்படுத்தினால் “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்பதற்காக ஒரு யெகோவாவின் சாட்சி பிரிந்துவாழ முடிவு செய்யலாம்.—அப்போஸ்தலர் 5:29.