Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

மணவாழ்வில் மனக்கசப்பு ஏற்படும்போது

மணவாழ்வில் மனக்கசப்பு ஏற்படும்போது

சவால்

திருமணத்திற்குமுன் நீங்களும் உங்கள் துணையும் பொருத்தமான ஜோடி என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் திருமணத்திற்குப்பின், எதிர்பார்த்த விதத்தில் மணவாழ்க்கை அமையாததை நினைத்து மனக்கசப்பு அடைந்திருப்பீர்கள். இப்போது, நீங்கள் இருவரும் தனித்தனி துருவங்கள் போல உணர ஆரம்பித்திருப்பீர்கள்.

கவலைப்படாதீர்கள், சந்தோஷம் பூத்துக் குலுங்கும் மணவாழ்வை உங்களால் அனுபவிக்க முடியும்! முதலில், மனகசப்பு ஏற்படுவதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

மனக்கசப்புக்கான காரணங்கள்

நிழலிலிருந்து நிஜத்திற்கு வரும்போது. தினசரி வேலை, பிள்ளை வளர்ப்பு, துணையின் உறவுகளோடு ஏற்படும் உரசல்கள் இவையெல்லாம் உங்கள் திருமண வாழ்வின் பொலிவைக் கொஞ்சம் கொஞ்சமாக மங்கச் செய்யலாம். பணப் பிரச்சினை, தீராத வியாதியால் அவதிப்படும் குடும்பத்தாரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு போன்ற எதிர்பாராத திருப்பங்களும் உங்கள் திருமண பந்தத்தை உரசிப் பார்க்கலாம்.

இருவருக்கும் ஒத்தேவராது என்று நினைக்கும்போது. காதலிக்கும் சமயத்தில், இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் பெரிதாகத் தெரியாதிருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அவைப் பளிச்செனத் தெரிய ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு பேசும் விதத்தில், பணத்தைக் கையாளும் விஷயத்தில், பிரச்சினைகளைச் சமாளிப்பதில் இருவரும் வேறுபடலாம். முன்பு துரும்புபோல் தெரிந்த வித்தியாசங்கள் இப்போது பூதாகரமாகத் தோன்றலாம்.

துணையின் உணர்வுகளை மதிக்காமல் இருக்கும்போது. மனதை ரணமாக்கும் வார்த்தைகள், அன்பற்ற செயல்கள், பேசித் தீர்க்கப்படாத மனஸ்தாபங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை மெல்ல மெல்ல இளக்கிவிடும். இதனால், கணவனோ மனைவியோ தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமலேயே இருந்துவிடுகிறார்கள். சிலசமயத்தில், துணையல்லாத ஒருவரோடு நெருக்கமாகப் பழகவும் ஆரம்பித்துவிடுவார்கள்.

எதிர்பார்ப்பு எதார்த்தத்தை மிஞ்சும்போது. ‘எனக்கென பிறந்தவன்/ள் இவன்தான்/இவள்தான்’ என்ற எண்ணத்தில் சிலர் திருமண வாழ்வில் காலெடுத்து வைப்பார்கள். ஆனால், அவர்களுடைய மனக்கோட்டை மண்கோட்டை ஆகலாம். பிரச்சினைகள் தலைதூக்கும்போது, தவறான துணையைத் தேர்ந்தெடுத்துவிட்டதாக இருவருமே நினைக்கலாம்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

துணையின் நல்ல குணங்களைப் பாருங்கள். உங்கள் துணையின் மூன்று நல்ல குணங்களை எழுதி, அதை கண்ணில் அடிக்கடி படும்படி வையுங்கள். ஒருவேளை, உங்கள் திருமண படத்திற்கு பின்னால் எழுதி வையுங்கள் அல்லது செல்ஃபோனில் பதிவுசெய்யுங்கள். அதை அடிக்கடி பார்க்கும்போது, உங்கள் துணையை ஆசை ஆசையாகத் திருமணம் செய்துகொண்டது நினைவிற்கு வரும். இப்படிச் செய்வது, குறைகளைப் பொறுத்துக்கொள்ளவும் குடும்பத்தில் சமாதானமாக இருக்கவும் உதவும்.—பைபிள் நியமம்: ரோமர் 14:19.

ஒன்றாக நேரம் செலவிட திட்டமிடுங்கள். திருமணத்திற்குமுன், நீங்கள் ஒருவேளை ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட்டிருப்பீர்கள்; அதற்காக நிச்சயம் திட்டமிட்டிருப்பீர்கள். காதலித்த சமயத்தில் இருவரும் மனம்விட்டு பேச நேரம் ஒதுக்கியிருப்பீர்கள், அது உங்களுக்குச் சந்தோஷத்தை அளித்திருக்கும். திருமணத்திற்குப்பின், நீங்கள் ஏன் அதேபோல் செய்யக் கூடாது? நீங்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுவது, உங்களுக்குள் இருக்கும் இறுக்கத்தை இளக்கி நெருக்கத்தைக் கூட்டும். எதிர்பாராத பிரச்சினைகளைச் சமாளிக்க தைரியத்தையும் அளிக்கும். —பைபிள் நியமம்: நீதிமொழிகள் 5:18.

உங்கள் உணர்வுகளை மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் துணையின் சொல்லோ செயலோ உங்களைப் புண்படுத்தியிருந்தால் அவரை மன்னிக்க முயற்சி செய்யுங்கள். ஆனால், கோபித்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாகப் பேசாமல் இருந்துவிடாதீர்கள். உங்கள் உணர்ச்சிகளைப்பற்றி உங்கள் துணையிடம் சாந்தமாகப் பேசுங்கள்; முடிந்தால் அந்த நாளே அதைப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.—பைபிள் நியமம்: எபேசியர் 4:26.

உங்கள் துணையின் சொல்லோ செயலோ உங்களைப் புண்படுத்தியிருந்தால் அவரை மன்னிக்க முயற்சி செய்யுங்கள்

உங்களுடைய உணர்ச்சிகளையும் துணையின் உள்நோக்கத்தையும் புரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலும், புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் இருவருமே நடந்திருக்க மாட்டீர்கள். இதை எடுத்துச் சொல்லி உங்கள் துணையிடம் மனதார மன்னிப்பு கேளுங்கள். ஒருவரையொருவர் புண்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதைப்பற்றி இருவருமே கலந்து பேசுங்கள். பைபிளிலுள்ள இந்த அறிவுரையைப் பின்பற்றி, “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; . . . ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்.”—எபேசியர் 4:32.

எதார்த்தமாக எதிர்பாருங்கள். திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு வாழ்க்கையில் “உபத்திரவங்கள் வரும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:28) அப்படிப் பிரச்சினைகள் வரும்போது, திருமணம் செய்துகொண்டதே தவறு என்பதாக முடிவுகட்டி விடாதீர்கள். மாறாக, இருவராகச் சேர்ந்து பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். “ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்.”— கொலோசெயர் 3:13. ▪ (g14-E 03)