Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

சங்கீதம் 37:4—“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு”.

சங்கீதம் 37:4—“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு”.

 “யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படு. அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்.”—சங்கீதம் 37:4, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”—சங்கீதம் 37:4, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.

சங்கீதம் 37:4-ன் அர்த்தம்

 கடவுளை வணங்குகிறவர்கள் அவருடன் ஒரு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று சங்கீதக்காரன் சொன்னார். யெகோவாவிடம் அப்படிப்பட்ட ஒரு நெருக்கத்தில் இருக்கிறவர்கள், தங்களுடைய நியாயமான ஆசைகளை கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார் என்று உறுதியாக இருக்கலாம். a

 “யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படு.” இந்த வார்த்தைகள், “கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்,” “ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்,” “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு” என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உண்மைக் கடவுளை வணங்குவதில் மட்டும்தான் ஒருவருக்கு அளவில்லாத சந்தோஷம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம். (சங்கீதம் 37:4) எப்படிச் சொல்லலாம்?

 கடவுளுடைய யோசனைகள்தான் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கடவுளை வணங்குகிறவர்கள் பைபிளைப் படிக்கும்போது அவர் யோசிக்கிற மாதிரியே யோசிக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் கடவுளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்கள், அவருக்குக் கீழ்ப்படிவதுதான் சரி என்றும் நினைக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல மனசாட்சியும் இருக்கிறது, வாழ்க்கையில் வரும் நிறைய படுகுழிகளை தவிர்க்கவும் முடிகிறது. (நீதிமொழிகள் 3:5, 6) உதாரணத்துக்கு, அநியாயமாக நடக்கிறவர்கள் செல்வச்செழிப்பாக வாழ்வதைப் பார்த்து அவர்கள் கோபத்தில் கொதித்தெழுவதோ பொறாமையில் பொங்குவதோ கிடையாது. (சங்கீதம் 37:1, 7-9) கடவுள் சீக்கிரத்தில் எல்லா அநியாயத்துக்கும் முடிவுகட்டுவார், கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்கிற மக்களுக்கு அதற்கான நல்ல பலனைக் கொடுப்பார் என்று தெரிந்துகொள்வதால் கடவுளுடைய மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். (சங்கீதம் 37:34) அதுமட்டுமல்ல, தங்களுடைய பரலோக அப்பாவின் அங்கீகாரம் இருக்கிறது என்று தெரிந்துகொள்வது அவர்களுக்கு அளவில்லா சந்தோஷத்தைக் கொடுக்கிறது.—சங்கீதம் 5:12; நீதிமொழிகள் 27:11.

 “உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்.” இந்த வார்த்தைகள் இப்படியும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன: “உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்,” அல்லது “அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.” நாம் எதைக் கேட்டாலும் யெகோவா கொடுப்பார் என்று சொல்ல முடியாது. ஒரு நல்ல அப்பா-அம்மா மாதிரி, தன்னுடைய பிள்ளைகளுக்கு எது நல்லது என்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அதோடு, நம்முடைய ஜெபங்கள் மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கை முறையும் அவருடைய சட்டங்களுக்கு இசைவாகவும் அவருடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியும் இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 28:9; யாக்கோபு 4:3; 1 யோவான் 5:14) நாம் அப்படிச் செய்தால், ‘ஜெபத்தை கேட்கிறவர்’ நம்முடைய ஜெபத்தையும் கேட்பார் என்று உறுதியாக நம்பலாம். —சங்கீதம் 65:2; மத்தேயு 21:22.

சங்கீதம் 37:4-ன் பின்னணி

 சங்கீதம் 37-ஐ பூர்வ இஸ்ரவேலை ஆட்சி செய்த தாவீது ராஜா எழுதினார். இந்த சங்கீதத்தை, எபிரெய எழுத்துக்களின் அகர வரிசையில் முதல் எழுத்துக்கள் வருகிற மாதிரி அவர் எழுதினார். b

 தாவீது தன்னுடைய வாழ்க்கையில் நிறைய அநியாயங்களை சந்தித்தார். சவுல் ராஜா ஒரு நாயைப் போல் அவரை வேட்டையாடினார். மற்றவர்களும் அவரை கொல்ல நினைத்தார்கள். (2 சாமுவேல் 22:1) ஆனால் தாவீது யெகோவாவை முழுமையாக நம்பினார். கெட்டவர்களை யெகோவா முழுமையாக அழித்துவிடுவார் என்று தாவீது தெரிந்து வைத்திருந்தார். (சங்கீதம் 37:10, 11) கெட்டவர்கள் ‘பசும்புல்லைப் போல’ செழிப்பாக இருப்பதுபோல் தெரிந்தாலும் ஒருநாள் “வாடி வதங்கி” ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.—சங்கீதம் 37:2, 20, 35, 36.

 கடவுள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களுக்கும் அதை அலட்சியம் செய்கிறவர்களுக்கும் வருகிற பின்விளைவுகளை சங்கீதம் 37 நன்றாக வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. (சங்கீதம் 37, 16, 17, 21, 22, 27, 28) அதனால் ஞானமாக நடப்பதற்கும் கடவுள் அங்கீகரிக்கிற நபர்களாக இருப்பதற்கும் இந்த சங்கீதம் நமக்கு உதவி செய்கிறது.

 சங்கீதம் புத்தகத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

a எபிரெய மொழியில் இருக்கிற கடவுளுடைய பெயர் தமிழில் யெகோவா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில பைபிள் மொழிபெயர்ப்புகள் அவருடைய பெயருக்கு பதிலாக கர்த்தர் என்று ஏன் மொழிபெயர்த்திருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

b இந்தப் பாடல் முறையில் முதல் வசனமோ அல்லது பல வசனங்களோ எபிரெய அகர வரிசையில் முதல் எழுத்திலிருந்து தொடங்கும். அதற்கு பின்பு வருகிற பல வசனங்கள் இரண்டாவது எழுத்திலிருந்து தொடங்கும். இதே மாதிரி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்த சங்கீதத்தை மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு இந்த முறை உதவியாக இருந்திருக்கும்.