Skip to content

இயேசுவின் வாழ்க்கை பற்றிய பைபிள் பதிவு துல்லியமானதா?

இயேசுவின் வாழ்க்கை பற்றிய பைபிள் பதிவு துல்லியமானதா?

பைபிள் தரும் பதில்

 இயேசுவின் வாழ்க்கை பற்றிய தன்னுடைய பதிவில் பைபிள் எழுத்தாளரான லூக்கா இப்படிச் சொன்னார்: ‘எல்லா விஷயங்களையும் ஆரம்பத்திலிருந்தே நான் துல்லியமாக ஆராய்ந்திருக்கிறேன்.’—லூக்கா 1:3.

 சுவிசேஷ புத்தகங்களில், அதாவது இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் எழுதிய புத்தகங்களில், உள்ள அவருடைய வாழ்க்கைப் பதிவுகள் நான்காம் நூற்றாண்டு வாக்கில் மாற்றப்பட்டதாகச் சிலர் சொல்கிறார்கள்.

 ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், யோவான் சுவிசேஷ சுருளின் மிக முக்கியமான ஒரு துண்டுப்பகுதி எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது பப்பைரஸ் ரைலண்ட்ஸ் 457 (P52) என்று அழைக்கப்படுகிறது; இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் இருக்கிற ஜான் ரைலண்ட்ஸ் நூலகத்தில் அது பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. நவீன பைபிள்களில் உள்ள யோவான் 18:31-33, 37, 38 ஆகிய வசனங்கள் அதில் இருக்கின்றன.

 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மிகமிகப் பழமையான கையெழுத்துப் பிரதியின் துண்டுப்பகுதி அதுதான். கி.பி. சுமார் 125-ல், அதாவது மூலப்பதிவு எழுதி முடிக்கப்பட்டு சுமார் கால் நூற்றாண்டுக்குள், அது எழுதப்பட்டதாக நிறைய அறிஞர்கள் நம்புகிறார்கள். இந்தத் துண்டுப்பகுதியில் உள்ள வசனமும், பிற்பாடு வந்த கையெழுத்துப் பிரதிகளில் உள்ள வசனமும் கிட்டத்தட்ட அச்சு அசலாக இருக்கின்றன.