Skip to content

செக்ஸைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?

செக்ஸைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?

பைபிளின் பதில்

 செக்ஸைப் பற்றி பிள்ளைகளுக்கு யார் சொல்லித்தர வேண்டும்? அந்த பொறுப்பு பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. நிறைய பெற்றோர்களுக்குப் பின்வரும் ஆலோசனைகள் ரொம்ப உதவியிருக்கின்றன:

  •   சங்கடப்படாதீர்கள். செக்ஸ் மற்றும் பிறப்புறுப்புகள் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பைபிள் வெளிப்படையாகச் சொல்கிறது. இந்த விஷயங்களைப் பற்றி ‘பிள்ளைகளுக்குச்’ சொல்லித்தர வேண்டும் என்று கடவுள் இஸ்ரவேலர்களுக்குச் சொல்லியிருந்தார். (உபாகமம் 31:12; லேவியராகமம் 15:2, 16-19) செக்ஸ் மற்றும் பிறப்புறுப்புகள் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசும்போது, அவையெல்லாம் அசிங்கமானது என்பதுபோல் பேசாதீர்கள். கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

  •   கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொடுங்கள். உங்கள் பிள்ளை பருவ வயதை அடைவற்கு முன்பே செக்ஸைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். ஆனால் ஒரே சமயத்தில் எல்லாத் தகவல்களையும் சொல்லாதீர்கள். பிள்ளைகள் புரிந்துகொள்ளும் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொடுங்கள்.—1 கொரிந்தியர் 13:11.

  •   ஒழுக்க நெறிகளைச் சொல்லிக்கொடுங்கள். செக்ஸைப் பற்றி பிள்ளைகளுக்குப் பள்ளிகளிலும் கற்றுத்தரலாம். இருந்தாலும், பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெற்றோர்கள் உடல்ரீதியான விஷயங்களை மட்டுமல்ல, பிள்ளைகளுடைய நடத்தை எப்படி இருக்க வேண்டும், இந்த விஷயத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும்.—நீதிமொழிகள் 5:​1-​23.

  •   பிள்ளைகள் சொல்வதைக் காதுக்கொடுத்து கேளுங்கள். பிள்ளைகள் செக்ஸைப் பற்றி கேள்விகள் கேட்கும்போது உணர்ச்சிவசப்படாதீர்கள்; அவர்களைப் பற்றி தவறாக நினைக்காதீர்கள். அதற்கு பதிலாக, “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும்” இருங்கள்.—யாக்கோபு 1:19.

காமவெறியர்களிடமிருந்து உங்கள் பிள்ளைகளை எப்படி பாதுகாக்கலாம்

ஒருவர் உங்கள் பிள்ளைக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தால், அந்த சமயத்தில் தன்னைத் தற்காத்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுங்கள்.

  •   முதலில் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர் எப்படியெல்லாம் நடந்துகொள்வார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.​— நீதிமொழிகள் 18:15; இளைஞர் கேட்கும் கேள்விகள்​—பலன்தரும் பதில்கள், பகுதி 1 என்ற ஆங்கில புத்தகத்தில் அதிகாரம் 32-ஐ பாருங்கள்.

  •   உங்கள் பிள்ளைகளை எப்போதும் உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் நம்பகமானவரா இல்லையா என்று தெரிந்துகொள்ளாமல் பிள்ளையைக் கவனித்துக்கொள்ள அந்த நபரை அனுமதிக்காதீர்கள். அதோடு, பிள்ளையை ‘தன் இஷ்டத்திற்கு விட்டுவிடாதீர்கள்.’—நீதிமொழிகள் 29:15.

  •   கீழ்ப்படிதலைப் பற்றி சமநிலையான கண்ணோட்டதை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும். (கொலோசெயர் 3:20) பெரியவர்கள் யார் என்ன சொன்னாலும் அதற்கு எப்போதுமே கீழ்ப்படிய வேண்டும் என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால், தவறாக நடந்துக்கொள்பவர்களிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. “கடவுள் தப்புனு சொல்ற ஒரு விஷயத்த யாராவது உங்கள செய்ய சொன்னா நீங்க அத செய்யவே கூடாது” என்று கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டும்.—அப்போஸ்தலர் 5:​29.

  •   எளிய தற்காப்பு முறைகளைக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் யாராவது ஒருவர் தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்தால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள். சின்ன சின்ன செயல்களை நடித்துக்காட்டுங்கள். அப்போது பிள்ளைகள் உடனடியாக, “தொடாத! நான் காட்டி கொடுத்துடுவேன்!” என்று தைரியமாகச் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து வேகமாக வருவார்கள். ‘பிள்ளைகளுக்குத் திரும்பத் திரும்பச்’ சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருங்கள். ஏனென்றால் பிள்ளைகள் சீக்கிரத்தில் மறந்துவிடுவார்கள்.—உபாகமம் 6:7, கன்ட்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.