Skip to content

பரிசுத்த ஆவி என்பது என்ன?

பரிசுத்த ஆவி என்பது என்ன?

பைபிள் தரும் பதில்

 பரிசுத்த ஆவி என்பது கடவுளுடைய சக்தியாக, அவருடைய செயல் நடப்பிக்கும் வல்லமையாக இருக்கிறது. (மீகா 3:8, அடிக்குறிப்பு; லூக்கா 1:35) கடவுள் தன் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தன் ஆற்றலை ஒன்றுதிரட்டி, தன்னுடைய சக்தியை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அனுப்புகிறார்.—சங்கீதம் 104:30; 139:7.

 “ஆவி” என நிறைய பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, ரூவக் என்ற எபிரெய வார்த்தையிலிருந்தும், நியூமா என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தும் வருகிறது. இந்த வார்த்தைகள் பெரும்பாலும் கடவுளுடைய சக்தியை, அதாவது பரிசுத்த ஆவியை, குறிக்கின்றன. (ஆதியாகமம் 1:2) என்றாலும், பைபிள் அந்த மூல வார்த்தைகளை வேறுபல அர்த்தங்களிலும் பயன்படுத்துகிறது:

 இந்த மாதிரியான சில விஷயங்களை நம் கண்களால் பார்க்க முடியவில்லையென்றாலும், அவற்றால் ஏற்படும் விளைவுகளை நிச்சயம் பார்க்க முடியும். கடவுளுடைய சக்தியும் அப்படித்தான். அது “காற்றைப் போல் கண்களால் பார்க்க முடியாதது, உருவமற்றது, வலிமைமிக்கது” என்று டபிள்யு. இ. வைனின் ஆன் எக்ஸ்பொசிட்டரி டிக்ஷனரி ஆஃப் நியு டெஸ்டமென்ட் வெர்ட்ஸ் சொல்கிறது.

 கடவுளுடைய சக்தியை, அதாவது பரிசுத்த ஆவியை, கடவுளுடைய ‘கைகள்’ என்றும், ‘விரல்கள்’ என்றும் பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 8:3; 19:1; லூக்கா 11:20, அடிக்குறிப்பு; ஒப்பிடுங்கள்: மத்தேயு 12:28) ஒரு கைத்தொழிலாளி தன் கைகளையும் விரல்களையும் பயன்படுத்தி வேலை செய்வதுபோல, கடவுளும் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக:

பரிசுத்த ஆவி ஒரு நபரல்ல

 கடவுளுடைய ஆவியை, அதாவது சக்தியை, ‘கைகள்,’ ‘விரல்கள்,’ ‘மூச்சுக்காற்று’ என்றெல்லாம் குறிப்பிடுவதன் மூலம், அது ஒரு நபரல்ல என்பதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (யாத்திராகமம் 15:8, 10) ஒரு கைத்தொழிலாளியின் கைகள், அவருடைய மனதோடும் உடலோடும் ஒன்றிணைந்துதான் செயல்படும்; தனியாகச் செயல்படாது. அதுபோலத்தான், பரிசுத்த ஆவியும்; கடவுள் தீர்மானிக்கிறபடிதான் அது செயல்படும். (லூக்கா 11:13) பைபிள், கடவுளுடைய சக்தியைத் தண்ணீருக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறது; விசுவாசம், அறிவு போன்றவற்றோடு சம்பந்தப்படுத்தியும் பேசுகிறது. இந்த ஒப்புமைகளெல்லாம், பரிசுத்த ஆவி ஒரு நபரல்ல என்பதையே காட்டுகின்றன.—ஏசாயா 44:3; அப்போஸ்தலர் 6:5; 2 கொரிந்தியர் 6:6.

 பைபிளில், யெகோவா தேவனுடைய பெயரும், அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடைய பெயரும் இருக்கின்றன; ஆனால், பரிசுத்த ஆவியின் பெயர் இல்லை. (ஏசாயா 42:8; லூக்கா 1:31) கிறிஸ்தவ உயிர்த்தியாகியான ஸ்தேவான் ஒரு பரலோகக் காட்சியைக் கண்டார். அதில், அவர் இரண்டு நபர்களைத்தான் பார்த்தார், மூன்று நபர்களை அல்ல. பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவரோ, கடவுளுடைய சக்தியால் நிறைந்தவராக, வானத்தை உற்றுப் பார்த்து, கடவுளுடைய மகிமையையும் அவருடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதையும் பார்த்தார்.” (அப்போஸ்தலர் 7:55) இந்தத் தரிசனக் காட்சியைப் பார்ப்பதற்குக் கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி, அதாவது பரிசுத்த ஆவி, அவருக்கு உதவியது.

பரிசுத்த ஆவியைப் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: பரிசுத்த ஆவி என்பது ஒரு நபர்; 1 யோவான் 5:7, 8 (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) சொல்கிறபடி, திரித்துவத்தின் பாகம்.

 உண்மை: தமிழ் யூனியன் பைபிள், 1 யோவான் 5:7, 8-ல் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே. . .” இந்த வார்த்தைகளை அப்போஸ்தலன் யோவான் எழுதவில்லை, தமிழ் யூனியன் பைபிள்தான் சேர்த்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; எனவே, அவற்றை பைபிளின் பாகமாகக் கருத முடியாது. பேராசிரியர் ப்ரூஸ் எம். மெட்ஸ்கெர் இப்படி எழுதினார்: “நிச்சயமாகவே இவை போலியான வார்த்தைகள், புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தைகள் இடம்பெறவே கூடாது.”எ டெக்ஸ்சுவல் கமென்ட்ரி ஆன் த கிரீக் நியு டெஸ்டமென்ட்.

 தவறான கருத்து: பரிசுத்த ஆவியை பைபிள் உருவகப்படுத்திப் பேசுவதால், அது ஒரு நபராகத்தான் இருக்க வேண்டும்.

 உண்மை: சில வசனங்களில் பரிசுத்த ஆவி உருவகப்படுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காக, அது ஒரு நபர் என்று அர்த்தமாகிவிடாது முடியாது. ஏனென்றால் ஞானம், மரணம், பாவம் ஆகியவற்றையும்கூட பைபிள் உருவகப்படுத்திப் பேசுகிறது. (நீதிமொழிகள் 1:20; ரோமர் 5:17, 21) உதாரணமாக, ஞானத்திற்கு ‘பிள்ளைகள்’ இருப்பதாகவும், பாவம் ஏமாற்றுவதாகவும், கொன்றுபோடுவதாகவும், பேராசையைப் பற்றி உணர்த்துவதாகவும் பைபிள் வசனங்கள் சொல்கின்றன.—மத்தேயு 11:19, தமிழ் O.V.; லூக்கா 7:35, தமிழ் O.V.; ரோமர் 7:8, 11.

அதுபோலத்தான், அப்போஸ்தலன் யோவான் தன்னுடைய சுவிசேஷப் புத்தகத்தில், இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியபோது பரிசுத்த ஆவியை, அதாவது கடவுளுடைய சக்தியை, உருவகப்படுத்திப் பேசினார்; நம்பகமான அத்தாட்சியை அளிக்கிற, வெளிப்படுத்துகிற, பேசுகிற, கேட்கிற, அறிவிக்கிற, மகிமைப்படுத்துகிற ‘சகாயராக’ (கிரேக்கில், பாராக்லீட்டோஸ்) அதை விவரித்தார். (யோவான் 16:7-15) ஆனால், மற்ற சமயங்களில் நியூமா என்ற பால்வேறுபாடு காட்டாத பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தினார். அதாவது, ஆண்பாலையோ பெண்பாலையோ பயன்படுத்தாமல், “அது” என்ற சுட்டுப்பெயரை அஃறிணையில் பயன்படுத்தினார்.—யோவான் 14:16, 17.

 தவறான கருத்து: பரிசுத்த ஆவியின் பெயரில் ஞானஸ்நானம் என்று சொல்வது, பரிசுத்த ஆவி ஒரு நபர் என்பதைக் காட்டுகிறது.

 உண்மை: பைபிள் சிலசமயம், ‘பெயர்’ என்ற வார்த்தையை அதிகாரம் அல்லது வல்லமை என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. (உபாகமம் 18:5, 19-22; எஸ்தர் 8:10) “சட்டத்தின் பெயரில் ஆணையிடுகிறேன்” என்ற வார்த்தைகளைப் போலத்தான் இதுவும்; சட்டத்தின் பெயரில் என்று சொல்வதால், சட்டம் ஒரு நபர் என அர்த்தமாகிவிடாது. பரிசுத்த ஆவியின் பெயரில், அதாவது கடவுளுடைய சக்தியின் பெயரில், ஞானஸ்நானம் எடுக்கும் ஒரு நபர், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் பரிசுத்த ஆவிக்கு இருக்கிற பங்கையும் அதிகாரத்தையும் புரிந்துகொள்கிறார்.—மத்தேயு 28:19.

 தவறான கருத்து: பரிசுத்த ஆவி ஒரு நபர் என்பதை இயேசுவின் அப்போஸ்தலர்களும் ஆரம்பகால சீஷர்களும் நம்பினார்கள்.

 உண்மை: சரித்திரமோ பைபிளோ அப்படிச் சொல்வதில்லை. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இப்படிக் குறிப்பிடுகிறது: “கி.பி. 381-ல்தான் கான்ஸ்டான்டினோப்பிளின் ஆலோசனைச் சங்கம், பரிசுத்த ஆவி என்பது தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒரு தனிநபர் என்ற விளக்கத்தைக் கொடுத்தது.” அதாவது, கடைசி அப்போஸ்தலர் இறந்து ஏறக்குறைய 250 வருஷங்களுக்குப் பிறகே கொடுத்தது.