Skip to content

செக்ஸ் வைத்துக்கொள்வதை பைபிள் தடை செய்கிறதா?

செக்ஸ் வைத்துக்கொள்வதை பைபிள் தடை செய்கிறதா?

பைபிள் தரும் பதில்

 செக்ஸ் வைத்துக்கொள்வதை பைபிள் தடை செய்வதில்லை. அதற்கு பதிலாக, திருமணமானவர்களுக்குக் கடவுள் தந்திருக்கும் பரிசு அது என்று பைபிள் சொல்கிறது. கடவுள் “ஆணையும் பெண்ணையும்” படைத்தார்; தன்னுடைய படைப்பு “மிகவும் நன்றாக” இருந்தது என்று சொன்னார். (ஆதியாகமம் 1:27, 31) அதோடு, அவர்களைத் திருமண பந்தத்தில் இணைத்து வைத்து, “அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்” என்றும் சொன்னார். (ஆதியாகமம் 2:24) செக்ஸ் வைத்துக்கொள்வதும் உணர்ச்சி ரீதியில் நெருக்கமாக இருப்பதும் திருமண பந்தத்தில் உட்பட்டிருக்கிறது.

 திருமண பந்தத்தில் கணவர்கள் அனுபவிக்கிற இன்பத்தைப் பற்றி பைபிள் இப்படி விவரிக்கிறது: “இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு . . . அவளுடைய மார்புகள் எப்போதும் உன்னை மகிழ்விக்கட்டும். அவளுடைய அன்பில் நீ மயங்கியிரு.” (நீதிமொழிகள் 5:18, 19) மனைவிகளும் செக்ஸை அனுபவித்து மகிழ வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். “கணவர்களும் மனைவிகளும் தங்களுடைய பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 7:3, காட்ஸ் வர்ட் பைபிள்.

செக்ஸ்—வரையறைகள் என்ன?

 திருமணமானவர்கள் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டுமென்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார்; அதைத்தான் எபிரெயர் 13:4 இப்படிச் சொல்கிறது: “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள். ஏனென்றால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களையும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்.” தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும், தங்களுடைய திருமண உறுதிமொழியைக் கடைசிவரை காத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய ஆசைகளைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாய் இருப்பதற்குப் பதிலாக, “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்ற பைபிள் நியமத்தைக் கடைப்பிடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைய வேண்டும்.—அப்போஸ்தலர் 20:35.