Skip to content

உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றி பைபிள் சொல்கிறதா?

உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றி பைபிள் சொல்கிறதா?

பைபிள் தரும் பதில்

 இல்லை. “உத்தரிக்கும் ஸ்தலம்” என்ற வார்த்தை பைபிளில் இல்லை. அதோடு, இறந்தவர்களின் ஆத்துமாக்கள் உத்தரிக்கும் ஸ்தலத்தில் சுத்திகரிக்கப்படுவதாக பைபிள் கற்பிப்பதும் இல்லை. a பாவத்தைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்றும், அது உத்தரிக்கும் ஸ்தலம் என்ற போதனைக்கு எப்படி எதிராக இருக்கிறது என்றும் பார்ப்போம்.

உத்தரிக்கும் ஸ்தலம் என்றால் என்ன?

உத்தரிக்கும் ஸ்தலம் என்பது ஒரு கத்தோலிக்க போதனை. இந்தப் போதனையின்படி, இறந்தவர்கள் தாங்கள் செய்த மன்னிக்க முடியாத பாவத்துக்காக பரிகாரம் தேடி சுத்திகரிக்கப்படுகிற ஒரு நிலையையோ, இடத்தையோ, நிலைமையையோ அது குறிக்கிறது. b “பரலோகத்தின் ஆனந்தத்துக்குள் நுழைவதற்கு” இந்த சுத்திகரிப்பு தேவைப்படுகிறது என்று கேட்டகிஸம் ஆஃப் தி கேத்தலிக் சர்ச் சொல்கிறது.‏ அதோடு, “சுத்திகரிக்கும் நெருப்பைப் பற்றி . . . சர்ச் பாரம்பரியம்தான் கற்பிக்கிறது” என்றும் கேட்டகிஸம் சொல்கிறது. இதைத்தான் இந்தக் கட்டுரையில் இருக்கும் படம் காட்டுகிறது. ஆனாலும், இது ஒரு பைபிள் போதனை கிடையாது.

  •   பாவத்திலிருந்து ஒருவரை சுத்தப்படுத்துவது இயேசுவின் இரத்தத்தின்மேல் வைக்கும் விசுவாசம்தான், உத்தரிக்கும் ஸ்தலம் என்ற இடத்தில் இருக்கிற அந்தக் காலப்பகுதி அல்ல. கடவுளுடைய “மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்” என்றும் “கிறிஸ்து . . . தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்”என்றும் பைபிள் சொல்கிறது. (1 யோவான் 1:7; வெளிப்படுத்துதல் [திருவெளிப்பாடு] 1:5, பொது மொழிபெயர்ப்பு) இயேசு, “பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்.”—மத்தேயு 20:28, பொ. மொ.

  •   இறந்தவர்கள் ஒன்றும் தெரியாத நிலைமையில் இருக்கிறார்கள். “உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்; ஆனால், இறந்தோரோ எதையும் அறியார்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 9:5 பொ. மொ.) இறந்தவர்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது, அதனால் உத்தரிக்கும் ஸ்தலம் என்று சொல்லப்படுகிற ஒரு இடத்தில் நெருப்பால் அவர்களை சுத்தப்படுத்த முடியாது.

  •   இறந்த பிறகு யாருமே தண்டிக்கப்படுவது கிடையாது. “பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு” என்றும் “இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர்” என்றும் பைபிள் சொல்கிறது. (ரோமர் [உரோமையர்] 6:​723, பொ. மொ.) பாவத்துக்கு தண்டனை மரணம்தான், வேறெதுவும் கிடையாது.

a “இதைப் பற்றி சுவிசேஷங்களில் ஒரு வார்த்தைகூட இல்லை” என்று ஆர்ஃபியஸ்: மதங்களின் ஒரு பொது சரித்திரம் என்ற புத்தகம் சொல்கிறது. அதேபோல், நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றிய கத்தோலிக்க கோட்பாடு பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் அல்ல, பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.”—இரண்டாம் பதிப்பு, தொகுப்பு 11, பக்கம் 825.

b நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா, இரண்டாம் பதிப்பு, தொகுப்பு 11, பக்கம் 824-ஐ பாருங்கள்.

c லிம்போ என்பது கிரேக்க புராணத்தின்படி குழந்தைகளின் ஆத்துமாக்கள் போவதாக நம்பப்படுகிற இடம்.