Skip to content

யாருடைய கைவண்ணம்?

ஹாக்மீனின் வழுவழுப்பான திரவம்

ஹாக்மீனின் வழுவழுப்பான திரவம்

 ஹாக்மீன் சுரக்கும் வழுவழுப்பான தண்ணீர் போன்ற திரவத்தைப் பற்றி தெரிந்துகொள்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏன் தெரியுமா? இயற்கையிலிருந்து கிடைக்கும் “ரொம்ப மென்மையான எலாஸ்டிக் போன்ற பொருள்களில்,” இந்த மீன் சுரக்கும் திரவமும் ஒன்று என்று கருதப்படுகிறது.

 யோசித்துப்பாருங்கள்: கடலின் அடிப்பரப்பில் வாழும் விலாங்கு போன்ற மீன்வகைதான் இந்த ஹாக்மீன். மற்ற மீன்கள் அதை சாப்பிட வரும்போது, தனக்கு இருக்கும் விசேஷ சுரப்பிகளிலிருந்து வழுவழுப்பான ஒரு திரவத்தை அது வெளியிடுகிறது. அந்தத் திரவம், சளியைப் போன்ற வழுவழுப்பான புரதங்களாலும், நீளமான நூல்களைப் போன்ற ஆயிரக்கணக்கான வேறு சில புரதங்களாலும் ஆனது. இந்தப் புரதங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஹாக்மீனைச் சுற்றி இருக்கும் தண்ணீரைப் பிசுபிசுப்பான திரவமாக மாற்றிவிடுகிறது. ஹாக்மீனைத் தாக்க நெருங்கிவரும் மீனின் செவுள்களை இந்தத் திரவம் அடைத்துவிடுகிறது. அதனால் அந்த மீன் வேகமாக ஹாக்மீனை விட்டு ஓடிவிடுகிறது.

 ஹாக்மீன் சுரக்கும் இந்தத் திரவம் ரொம்பவே வித்தியாசமானது. அதில் இருக்கும் ஒவ்வொரு புரத நூலும், மனித தலைமுடியின் அகலத்தில், நூறில் ஒரு பங்குதான் இருக்கும்; அதேசமயத்தில், நைலானைவிட பத்து மடங்கு உறுதியாக இருக்கும். அந்த மீன் அதன் திரவத்தைக் கடல்நீரில் வெளியிடும்போது, அதில் இருக்கும் புரதங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, ரொம்ப மெல்லிசான முப்பரிமாண சல்லடையைப் போன்ற ஒரு வடிவமாக ஆகிறது. இந்த வடிவத்தால் அதன் எடையைப் போல 26,000 மடங்கு எடையுள்ள தண்ணீரை தனக்குள் வைத்துக்கொள்ள முடியும். சொல்லப்போனால், இந்த திரவம் கிட்டத்தட்ட 100 சதவீதம் தண்ணீரால் ஆனது.

 விஞ்ஞானிகளால் இதேபோன்ற ஒரு திரவத்தை உருவாக்க முடியவில்லை. “இயல்பா சுரக்குற இந்த திரவத்தோட அமைப்பு ரொம்ப சிக்கலானதா இருக்கு” என்று ஒரு ஆராய்ச்சியாளர் சொல்கிறார். இருந்தாலும், சில பாக்டீரீயாக்களைப் பயன்படுத்தி இந்தப் புரத நூல்களைச் செயற்கையாக தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் யோசித்திருக்கிறார்கள். மக்கும் தன்மையுள்ள, குறைந்த எடையுள்ள, கிழிந்துபோகாத, எலாஸ்டிக் போன்ற ஒரு திரவத்தைத் உருவாக்குவதுதான் விஞ்ஞானிகளின் நோக்கம். இந்த செயற்கை புரத நூல்களை வைத்து, தரமான துணிமணிகளையும் டாக்டர்கள் பயன்படுத்தும் பொருள்களையும் தயாரிக்க முடியும். இப்படி, இந்த நூல்களின் பயனை சொல்லிக்கொண்டே போகலாம்!

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மிகவும் சிக்கலான வடிவத்தைக் கொண்ட இந்த ஹாக்மீனின் திரவம் தானாகவே வந்ததா? அல்லது படைக்கப்பட்டதா?