Skip to content

யாருடைய கைவண்ணம்?

கடல் வெள்ளரியின் தோல்—ஓர் அதிசயம்!

கடல் வெள்ளரியின் தோல்—ஓர் அதிசயம்!

 கடல் வெள்ளரி என்பது கடல் படுகைகளிலும் பவளப்பாறைகளிலும் வாழ்கிற ஒரு விலங்கு. அதனுடைய உடல் கரடுமுரடாகவோ மேடு பள்ளமாகவோ அல்லது ஊசி ஊசியாகவோகூட இருக்கும். கண்மூடி கண் திறப்பதற்குள் அதனுடைய உடல் மெழுகுபோல் மிருதுவாகவும் ஆகும், பலகைபோல் கடினமாகவும் ஆகும். இந்த அதிசய திறமை இருப்பதால், கடல் வெள்ளரிகளால் வளைந்து நெளிந்து சந்து பொந்துகளுக்குள் போகவும் முடியும், அப்படிப் போன பிறகு தன்னை விறைப்பாக்கிக்கொள்ளவும் முடியும். அதனால், வேறெந்த விலங்கினாலும் அதை வெளியே இழுக்க முடியாது. இந்த அதிசய திறமையின் ரகசியமே அதன் தோலில்தான் இருக்கிறது!

 யோசித்துப் பாருங்கள்: கடல் வெள்ளரியின் தோல் மூன்று விதமாக மாறும். விறைப்பாக, ஓரளவு மிருதுவாக, அல்லது ரொம்பவே மிருதுவாக மாறும். இப்படி மாறுவதற்கு கடல் வெள்ளரி தன் தோலில் இருக்கும் இழைகளை இணைக்கும் அல்லது பிரிக்கும். அதற்காக, விறைப்பாக்கும் புரதங்களையோ மிருதுவாக்கும் புரதங்களையோ அது பயன்படுத்தும்.

 விறைப்பாக்கும் புரதங்கள், தோலிலுள்ள இழைகளுக்கு இடையில் சின்னச் சின்னப் பாலங்களை அல்லது சங்கிலிகளை உருவாக்கும். இதனால் அதன் தோல் மிகவும் கடினமாக மாறும். மிருதுவாக்கும் புரதங்கள், இணைந்திருக்கும் இழைகளைப் பிரித்துவிடும். இதனால் அதன் தோல் மிருதுவாகும். சொல்லப்போனால், கடல் வெள்ளரியின் தோல் ரொம்பவே மிருதுவாகும்போது, மெழுகு உருகுவதுபோல் தெரியும்.

 கடல் வெள்ளரியின் தோலைப் போலவே சில பொருட்களை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் மூளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் எலக்ட்ரோடுகள். அந்த எலக்ட்ரோடுகள் விறைப்பாக இருந்தால்தான் அதை சரியான இடத்தில் வைக்க முடியும். அதேசமயத்தில், அவை மிருதுவாக இருந்தால்தான் அறுவை சிகிச்சையை நல்லபடியாக செய்து முடிக்க முடியும்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடல் வெள்ளரியின் அதிசயமான தோல் தானாகவே வந்திருக்குமா? அல்லது, அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா?