யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 16:1-21

16  பின்பு, பரிசுத்த இடத்திலிருந்து*+ வந்த ஒரு குரல் அந்த ஏழு தேவதூதர்களிடம், “நீங்கள் போய், கடவுளுடைய ஏழு கோபக் கிண்ணங்களிலும் இருப்பதைப் பூமியில் ஊற்றுங்கள்”+ என்று சத்தமாகச் சொல்வதைக் கேட்டேன்.  அதன்படியே, முதலாவது தேவதூதர் புறப்பட்டுப் போய்த் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைப் பூமியில் ஊற்றினார்.+ அப்போது, மூர்க்க மிருகத்தின் அடையாளக் குறியைப் பெற்றிருந்தவர்களும்,+ அதன் உருவத்தை வணங்கியவர்களும்+ மிகக் கொடிய புண்ணால்+ அவதிப்பட்டார்கள்.  பின்பு, இரண்டாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் ஊற்றினார்.+ அப்போது, கடல்நீர் செத்தவனின் இரத்தத்தைப் போலானது.+ கடலில்+ இருந்த எல்லா உயிரினங்களும் செத்துப்போயின.  பின்பு, மூன்றாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றினார்.+ அப்போது, அவையெல்லாம் இரத்தமாயின.+  பின்பு, தண்ணீர்மீது அதிகாரமுள்ள தேவதூதர் இப்படிச் சொல்வதைக் கேட்டேன்: “இருக்கிறவரே, இருந்தவரே,+ உண்மையுள்ளவரே,*+ நீங்கள் நீதியுள்ளவராக இருப்பதால் இந்தத் தீர்ப்புகளைக்+ கொடுத்திருக்கிறீர்கள்.  பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் சிந்தியவர்களுக்கு+ நீங்கள் இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர்கள்.+ அது அவர்களுக்குத் தகுந்ததுதான்.”+  பின்பு, பலிபீடம் இப்படிச் சொல்வதைக் கேட்டேன்: “ஆம், சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவே,*+ உங்களுடைய தீர்ப்புகள்* உண்மையானவை, நீதியானவை.”+  அதன் பின்பு, நான்காவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைச் சூரியன்மேல் ஊற்றினார்.+ அப்போது, மனிதர்களை நெருப்பால் சுட்டுப்பொசுக்கும் அதிகாரம் சூரியனுக்குக் கொடுக்கப்பட்டது.  மனிதர்கள் கடும் வெப்பத்தால் சுட்டுப்பொசுக்கப்பட்டார்கள்; ஆனால், இந்தத் தண்டனைகளின் மேல் அதிகாரமுள்ளவரான கடவுளுடைய பெயரை அவர்கள் நிந்தித்தார்கள், மனம் திருந்தி அவரை மகிமைப்படுத்தவில்லை. 10  பின்பு, ஐந்தாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததை மூர்க்க மிருகத்தின் சிம்மாசனம்மேல் ஊற்றினார். அப்போது, அதன் அரசாங்கத்தை இருட்டு சூழ்ந்துகொண்டது;+ வலி தாங்க முடியாமல் மனிதர்கள் தங்களுடைய நாக்கைக் கடித்துக்கொண்டார்கள். 11  தங்களுக்கு ஏற்பட்ட வலிகளின் காரணமாகவும் புண்களின் காரணமாகவும் பரலோகத்தின் கடவுளை நிந்தித்தார்கள், தங்கள் செயல்களைவிட்டு அவர்கள் மனம் திருந்தவே இல்லை. 12  பின்பு, ஆறாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைப் பெரிய ஆறான யூப்ரடிசில்*+ ஊற்றினார். அப்போது, அதன் தண்ணீர் வற்றிப்போனது.+ அதனால், சூரியன் உதிக்கும்* திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி தயாரானது.+ 13  பின்பு, ராட்சதப் பாம்பின்+ வாயிலிருந்தும், மூர்க்க மிருகத்தின் வாயிலிருந்தும், போலித் தீர்க்கதரிசியின் வாயிலிருந்தும் தவளை போன்ற மூன்று அசுத்தமான செய்திகள் வெளியே வந்ததைப் பார்த்தேன். 14  உண்மையில், அவை அற்புத அடையாளங்கள் செய்கிற+ பேய்களுடைய செய்திகள். அந்தப் பேய்கள் சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில்+ நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்களைக் கூட்டிச்சேர்க்கப் புறப்பட்டுப் போயின.+ 15  “இதோ! நான் ஒரு திருடனைப் போல் வரப்போகிறேன்.+ நிர்வாணமாக நடப்பதையும் வெட்கக்கேடான கோலத்தில் இருப்பதையும் மக்கள் பார்க்காதபடி,+ விழிப்புடன் இருந்து+ தன்னுடைய உடைகளைக் காத்துக்கொள்கிறவன் சந்தோஷமானவன்.” 16  எபிரெய மொழியில் அர்மகெதோன்*+ என்று அழைக்கப்பட்ட இடத்தில் அவை அவர்களைக் கூட்டிச்சேர்த்தன. 17  பின்பு, ஏழாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைக் காற்றில் ஊற்றினார். அப்போது, பரிசுத்த இடத்தில்*+ இருக்கிற சிம்மாசனத்திலிருந்து, “முடிந்துவிட்டது!” என்று ஒரு குரல் சத்தமாகச் சொன்னது. 18  அதோடு, மின்னல்களும் குரல்களும் இடிமுழக்கங்களும் பயங்கர நிலநடுக்கமும் வந்தன. மனிதர்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இவ்வளவு பெரியளவில், இவ்வளவு பயங்கரமான நிலநடுக்கம் வந்ததே இல்லை.+ 19  மகா நகரம்+ மூன்று பாகங்களாகப் பிளவுபட்டது, மற்ற தேசத்து மக்களின் நகரங்கள் வீழ்ந்தன. கடவுள் தன்னுடைய கடும் கோபம் என்ற திராட்சமது நிரம்பிய கிண்ணத்தை+ மகா பாபிலோனுக்குக்+ கொடுக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டார். 20  அதோடு, தீவுகள் எல்லாம் மறைந்து போயின, மலைகளும் காணப்படாமல் போயின.+ 21  பின்பு, வானத்திலிருந்து மிகப் பெரிய ஆலங்கட்டிகள் மனிதர்கள்மேல் விழுந்தன;+ ஒவ்வொரு ஆலங்கட்டியும் சுமார் ஒரு தாலந்து* எடையுள்ளதாக இருந்தது. ஆலங்கட்டியால் உண்டான இந்தத் தண்டனை+ மிகக் கொடியதாக இருந்ததால், மனிதர்கள் கடவுளை நிந்தித்தார்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “ஆலயத்தின் மகா பரிசுத்த அறையிலிருந்து.”
வே.வா., “பற்றுமாறாதவரே.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “நீதித்தீர்ப்புகள்.”
அதாவது, “ஐப்பிராத்தில்.”
வே.வா., “கிழக்கு.”
“மெகிதோ மலை” என்ற அர்த்தமுள்ள எபிரெய வார்த்தையிலிருந்து வந்தது.
அதாவது, “ஆலயத்தின் மகா பரிசுத்த அறையில்.”
ஒரு கிரேக்க தாலந்து 20.4 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா