Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 1

நான் யார்?

நான் யார்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

உங்களைப் பற்றியும் உங்களுடைய நம்பிக்கையைப் பற்றியும் நீங்கள் தெரிந்துவைத்திருந்தால், பிரச்சினைகள் வரும்போது உங்களால் சரியான தீர்மானம் எடுக்க முடியும்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: கேரன் பார்ட்டிக்கு வந்து பத்து நிமிடங்கள்கூட ஆகவில்லை. அப்போது, அவளுக்குத் தெரிந்த யாரோ அவளைக் கூப்பிடுவது போல் இருந்தது.

“நீ ஏன் அங்க நின்னுகிட்டு இருக்க?”

கேரனுடைய ஃப்ரெண்ட் ஜெஸிகா இரண்டு பீர் பாட்டில்களைக் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். கேரனுடைய முகத்துக்கு முன்னால் ஒரு பாட்டிலை நீட்டி, “நீ ஒண்ணும் குழந்தை இல்ல, சும்மா ஜாலியா இரு” என்று ஜெஸிகா சொன்னாள்.

வேண்டாம் என்று சொல்லத்தான் கேரனுக்கு ஆசை. ஜெஸிகா அவளுடைய ஃப்ரெண்டாக இருப்பதால் அவளால் அப்படிச் சொல்ல முடியவில்லை. தனக்கு எதிலும் ஈடுபாடு இல்லை என்று ஜெஸிகா நினைத்துவிடக் கூடாது என்று அவள் விரும்புகிறாள். அதோடு, ஜெஸிகா ஒரு நல்ல பெண்ணும்கூட! அவளே குடிக்கிறாள் என்றால், அது அவ்வளவு மோசமானது கிடையாது என்று கேரன் நினைக்கிறாள். ‘இது வெறும் பீர் தானே,’ ‘இது ஒண்ணும் போதைப் பொருள் இல்லையே’ என்று சொல்லிக்கொள்கிறாள்.

நீங்கள் கேரனுடைய இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் சரியான தீர்மானம் எடுப்பதற்கு, நீங்கள் யார் என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். நீங்கள் யார் என்பது, உங்களுடைய தராதரத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் சொல்கிற உங்களுக்குள் இருக்கும் ஓர் உணர்வு. நீங்கள் யார் என்பதைத் தெரிந்திருக்கும்போது மற்றவர்கள் உங்களைக் கட்டுப்படுத்த விட மாட்டீர்கள். வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்வீர்கள்.—1 கொரிந்தியர் 9:26, 27.

இந்தத் திறமையை எப்படி வளர்க்கலாம்? இங்கே இருக்கும் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பது இதற்கு உதவும்.

1 என்னுடைய பலம் என்ன?

உங்களுடைய திறமைகளையும் நல்ல குணங்களையும் பற்றி தெரிந்துவைத்திருந்தால் உங்களுக்கு இன்னும் தைரியம் கிடைக்கும்.

பைபிள் உதாரணம்: “எனக்குப் பேச்சுத்திறன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாகவே அறிவுத்திறன் இல்லாமல் இல்லை” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 11:6) பவுலுக்கு வேதவசனங்கள் நன்றாகத் தெரிந்திருந்ததால், மற்றவர்களிடமிருந்து பிரச்சினை வந்தபோது உறுதியாக இருந்தார். அவர்களுடைய தவறான பேச்சால் அவர் தைரியம் இழந்துவிடவில்லை.—2 கொரிந்தியர் 10:10; 11:5.

உங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு இருக்கும் ஒரு திறமையைப் பற்றி இங்கே எழுதுங்கள்.

உங்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணத்தைப் பற்றி விளக்குங்கள். (உதாரணத்துக்கு, நீங்கள் அக்கறை உள்ளவரா? தாராள குணமுள்ளவரா? நம்பிக்கைக்குரியவரா? நேரம் தவறாதவரா?)

2 என்னுடைய பலவீனம் என்ன?

சங்கிலியில் இருக்கும் ஒரு இணைப்பு பலவீனமாக இருந்தால்கூட அதன் முழு பலமும் குறைந்துவிடும். அதேபோல், உங்களுடைய பலவீனங்கள் உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த விட்டுவிட்டீர்கள் என்றால் நீங்கள் யார் என்பதே தெரியாமல் போய்விடும்.

பைபிள் உதாரணம்: தன்னுடைய பலவீனங்களைப் பற்றி பவுலுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், “கடவுளுடைய சட்டத்தைக் குறித்து என் உள்ளத்தின் ஆழத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், என் மனதின் சட்டத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலுறுப்புகளில் இருப்பதைக் காண்கிறேன்; என் உடலுறுப்புகளில் உள்ள பாவத்தின் சட்டமாகிய அது என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது” என்று பவுல் எழுதினார்.—ரோமர் 7:22, 23.

உங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு இருக்கும் எந்தப் பலவீனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

3 என்னுடைய குறிக்கோள் என்ன?

நீங்கள் காரில் ஏறிவிட்டு பெட்ரோல் தீரும்வரை ஒரே இடத்தைச் சுற்றும்படி டிரைவரிடம் சொல்வீர்களா? அப்படிச் சொல்வது முட்டாள்தனமாக இருக்கும், பணமும் வீணாகும்.

இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? குறிக்கோளோடு வாழும்போது வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வீர்கள்.

பைபிள் உதாரணம்: “நான் இப்போது ஓடுகிறேன், ஆனால் சேரவேண்டிய இடத்தை அறியாதவன்போல் அல்ல” என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 9:26) வாழ்க்கை போகிற போக்கில் போகலாம் என்று நினைக்காமல், பவுல் ஒரு குறிக்கோள் வைத்து அதன்படி வாழ்ந்தார்.—பிலிப்பியர் 3:12-14.

உங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். அடுத்த வருடத்துக்குள் நீங்கள் அடைய விரும்பும் மூன்று குறிக்கோள்களைப் பற்றி இங்கே எழுதுங்கள்.

4 என்னுடைய நம்பிக்கை என்ன?

நீங்கள் யார் என்பதை நன்றாகத் தெரிந்துவைத்திருக்கும்போது, எப்படிப்பட்ட புயல் வந்தாலும் நன்றாக வேர்பிடித்து நிற்கும் மரத்தைப் போல உறுதியாக இருப்பீர்கள்

உறுதியான நம்பிக்கை இல்லையென்றால் உங்களால் ஒரு தீர்மானத்துக்கே வர முடியாது. பச்சோந்தியைப் போல் நண்பர்களுக்குத் தகுந்த மாதிரி நடந்துகொள்வீர்கள். இப்படிச் செய்தால், உங்களுக்கென்று ஒரு அடையாளம் இல்லை என்பதைக் காட்டும்.

உங்கள் நம்பிக்கைகளின்படி செயல்கள் இருக்கும்போது, மற்றவர்கள் என்ன செய்தாலும் சரி, உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்வீர்கள்.

பைபிள் உதாரணம்: தீர்க்கதரிசியான தானியேல், தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த போதிலும் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று தன்னுடைய டீனேஜ் வயதிலேயே ‘தன் இருதயத்தில் தீர்மானம்’ செய்திருந்தார். (தானியேல் 1:8) அப்படிச் செய்வதன் மூலம், அவர் தனக்கு உண்மையாக இருந்தார், தன் நம்பிக்கைகளின்படி வாழ்ந்தார்.

உங்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்களுடைய நம்பிக்கைகள் என்ன? உதாரணத்துக்கு, கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? ஏன் நம்புகிறீர்கள்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நம்புகிறீர்கள்?

கடவுளுடைய ஒழுக்க தராதரங்கள் உங்களுடைய நன்மைக்குத்தான் என்று நம்புகிறீர்களா? ஏன் நம்புகிறீர்கள்?

கடைசியாக, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? காற்று லேசாக அடித்தாலும் கீழே விழுந்துவிடும் இலையைப் போல் இருக்க விரும்புகிறீர்களா, அல்லது சூறாவளி அடித்தாலும் அசையாமல் நிற்கிற மரத்தைப் போல் இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், அந்த மரத்தைப் போல இருப்பீர்கள். அப்போது, நான் யார்? என்ற கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வீர்கள்.