Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கு பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியுமா?

கடவுளுக்கு பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியுமா?

பைபிள் ஒருசிலரை மிகவும் புகழ்ந்து பேசுகிறது. அப்படிப்பட்ட ஆட்களைப் பற்றி படிக்கும்போது, ‘என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது, ரொம்ப கஷ்டம்! என்கிட்ட நிறைய குறை இருக்கு... நான் அடிக்கடி தப்பு பண்ணிடுறேன்...’ என்று சொல்லிக்கொண்டு உங்களையே நொந்துகொள்கிறீர்களா?

யோபு “மாசற்றவரும் நேர்மையானவருமாய்” இருந்தார். —யோபு 1:1, பொ. மொ.

யோபு “மாசற்றவரும் நேர்மையானவருமாய்” இருந்தார் என்று கடவுள் சொன்னார். (யோபு 1:1, பொது மொழிபெயர்ப்பு) லோத்து என்பவர் ஒரு “நீதிமான்” என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 2:8) தாவீது, கடவுளுடைய “பார்வைக்குச் செம்மையானதையே” செய்தார் என்று பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 14:8) இருந்தாலும் இவர்களுடைய வாழ்க்கையை நாம் புரட்டிப் பார்க்கும்போது, மூன்று விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம்: (1) இவர்களும் வாழ்க்கையில் தவறு செய்தார்கள், (2) இவர்களிடமிருந்து நாம் நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் (3) நாம் தவறு செய்யும் இயல்புடையவர்களாக இருந்தாலும் கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ முடியும்.

அவர்கள் தவறு செய்தார்கள்

“நெறிகெட்டவர்களைக் கண்டு மிகுந்த வேதனையடைந்த நீதிமானாகிய லோத்துவைக் [கடவுள்] காப்பாற்றினார்.”—2 பேதுரு 2:7

யோபு தன்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அதெல்லாம் அநியாயம் என்று நினைத்தார். கடவுளுக்கு உண்மையாக இருக்கிறோமா இல்லையா என்றெல்லாம் கடவுள் பார்ப்பதில்லை என்று தவறாக நினைத்தார். (யோபு 9:20-22) தான் எந்த தப்பும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பினார். அதனால் அவர் பேசியதை கேட்ட நண்பர்கள், அவர் கடவுளைவிட தன்னை அதிக நீதிமானாக காட்டிக்கொண்டார் என்று நினைத்தார்கள்.—யோபு 32:1, 2; 35:1, 2.

லோத்து, ஒரு முக்கியமான தருணத்தில் தீர்மானம் எடுக்க தயங்கினார். சோதோம் கொமோரா நகரத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்த்தபோது லோத்துவின் “நீதியான உள்ளம் வாட்டிவதைக்கப்பட்டது.” (2 பேதுரு 2:8) கடவுள் அந்த நகரத்தை அழிக்கப்போவதாக சொன்னார். ஆனால், லோத்துவும் அவருடைய குடும்பமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார். இதை கேட்டவுடன் லோத்து, அவசர அவசரமாக ஊரைவிட்டு தப்பி ஓடியிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அந்த முக்கியமான நேரத்தில் தாமதித்துக் கொண்டிருந்தார். அவர்களை காப்பாற்றுவதற்காக கடவுள் அனுப்பிய தேவதூதர்கள், கடைசியில் லோத்துவையும் அவருடைய குடும்பத்தையும் கையைப் பிடித்து, ஊரை விட்டு வெளியே இழுத்துவர வேண்டியிருந்தது.—ஆதியாகமம் 19:15, 16.

தாவீது ‘கடவுளுடைய பார்வைக்குச் செம்மையானதையே செய்து, தன் முழு இருதயத்தோடும் கடவுளைப் பின்பற்றினார்’—1 இராஜாக்கள் 14:8.

தாவிது ஒருமுறை சுயக்கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொண்டார். இன்னொருவருடைய மனைவியோடு தவறான உறவில் ஈடுபட்டார். அதுமட்டுமல்ல, செய்த தவறை மறைப்பதற்கு அந்த பெண்ணுடைய கணவரையும் கொலை செய்தார். (2 சாமுவேல் 11-வது அதிகாரம்) “தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது” என்று பைபிள் சொல்கிறது.—2 சாமுவேல் 11:27.

யோபு, லோத்து, தாவீது, என்ற மூன்று பேரும் தவறு செய்தார்கள், அதுவும் அவர்கள் செய்த சில தவறுகள் படுமோசமானவை. ஆனால், அவர்கள் எல்லாரும் கடவுளுக்கு பிரியமாக நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள், செய்த தவறுக்காக மனம் வருந்தினார்கள், தங்களை திருத்திக் கொண்டார்கள். அதனால், கடவுள் அவர்களை ஏற்றுக்கொண்டார். இவர்கள் தமக்கு உண்மையோடு வாழ்ந்தாக பைபிளில் கடவுள் சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

நாம் எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். (ரோமர் 3:23) அதனால், நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்காக மனம் வருந்த வேண்டும்; நம்மை திருத்திக்கொள்வதற்கு முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

யோபு, லோத்து, தாவீது என்பவர்கள் எப்படி தங்களுடைய தவறுகளை சரி செய்தார்கள்? கடவுள் யோபுவின் மனதை பார்த்தார். யோபு கடவுளுக்கு உண்மையாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். அவர் செய்த தவறை கடவுள் அவருக்கு புரிய வைத்த பிறகு, அவர் மிகவும் வருத்தப்பட்டார், தன்னுடைய எண்ணங்களை சரி செய்தார். (யோபு 42:6) கடவுள் வெறுத்த விஷயங்களை லோத்துவும் வெறுத்தார். அதனால்தான், சோதோம் கொமோரா நகரத்தில் இருக்கிறவர்கள் செய்த தவறுகளை பார்த்து லோத்து மிகவும் வருத்தப்பட்டார். அவர் அவசர அவசரமாக கிளம்பாமல், தாமதித்தது தவறுதான், இருந்தாலும் அவர் கடவுள் சொன்னபடி அந்த ஊரை விட்டு ஓடிப்போனார், அதுவும் அவர் விட்டுவந்த பொருட்களை திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போனார், கடவுளுக்கு கீழ்ப்படிந்தார். தாவீது கடவுளுடைய சட்டங்களை மீறி ஒரு பெரிய பாவத்தை செய்திருந்தாலும், அவர் அதற்காக மனதார வருத்தப்பட்டார், தன்னை மன்னிக்கும்படி கடவுளிடம் கெஞ்சி கேட்டார்.—சங்கீதம் 51.

கடவுள் மனிதர்களுடைய வரம்புகளை அறிந்திருப்பதால்தான் இந்த மூன்று பேரையும் நல்லவர்களாக பார்த்தார். ‘நம்முடைய உருவம் இன்னதென்று கடவுள் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.’ (சங்கீதம் 103:14) கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?

‘நம்முடைய உருவம் இன்னதென்று கடவுள் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.’—சங்கீதம் 103:14.

கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ்வது எப்படி?

தாவீது தன்னுடைய மகன் சாலொமோனுக்கு இந்த அறிவுரையைக் கொடுத்தார்: ‘என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடு [முழு இருதயத்தோடு, NW] சேவி.’ (1 நாளாகமம் 28:9) கடவுளை சந்தோஷப்படுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. முழு இருதயம் என்பது எதைக் குறிக்கிறது? முழு இருதயத்தோடு சேவை செய்யும் ஒருவர் கடவுளை நேசிப்பார், கடவுளுக்கு பிடித்த விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொண்டு, அதை மனதார செய்வார். அவர் சிலசமயம் தவறுகள் செய்யலாம். இருந்தாலும், கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் உறுதியோடு இருப்பார், தவறு செய்ததை உணரும்போது, தன்னை திருத்திக்கொள்வார். மேலே சொல்லப்பட்ட மூன்று பேரும் கடவுளை நேசித்தார்கள், அவர் சொல்வதை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதனால்தான் யோபுவை ‘மாசற்றவர்’ என்றும், லோத்துவை “நீதிமான்” என்றும், தாவீது “செம்மையானதையே” (அதாவது, நல்லதையே) செய்தவர் என்றும் கடவுள் சொன்னார். அவர்கள் தவறு செய்திருந்தாலும் தங்களை திருத்திக்கொண்டு, கடவுளுக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டார்கள்.

முழு இருதயத்தோடு சேவை செய்யும் ஒருவர், கடவுளுக்கு பிடித்த விஷயங்களை தெரிந்துகொண்டு, அதை மனதார செய்வார்

நம்முடைய மனதில் ஏதாவது கெட்ட எண்ணங்கள் வந்தாலோ, நாம் தவறாக பேசினாலோ, மோசமாக நடந்துகொண்டாலோ, மனம் தளர்ந்துவிட வேண்டிய அவசியம் இல்லை. யோபு, லோத்து, தாவீது போன்றவர்களைப் பற்றி யோசித்து பார்க்கலாம். நம்மால் தவறே செய்யாமல் இருக்க முடியாது என்பது கடவுளுக்கு தெரியும். ஆனால், நாம் அவரை நேசிக்க வேண்டும், அவருக்கு கீழ்ப்படிவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இவர்களைப் போலவே, நமக்கும் முழு இருதயம் இருந்தால், நிச்சயம் கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ முடியும். ▪ (w15-E 07/01)