Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | நோவா

குடும்பமாக “காப்பற்றப்பட்டார்”

குடும்பமாக “காப்பற்றப்பட்டார்”

வானம் பிளந்து மழை ‘ஜோ’வென்று கொட்டத் தொடங்குகிறது. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் ஒருவரையொருவர் அணைத்தபடி நெருக்கமாக அமர்ந்திருக்கிறார்கள். உங்கள் மனத்திரையில் இந்தக் காட்சியைக் கொஞ்சம் பாருங்கள். ஒரு விளக்கு கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது. அதன் ஒளியில் அவர்களுடைய உருவம் தெரிகிறது, அவர்களுடைய கண்கள் அச்சத்தில் அகலமாக விரிந்திருக்கிறது. பேழையின் கூரைமீது கொட்டித்தள்ளுகிற மழையின் பேரிரைச்சலும், பேழையை மோதியடிக்கிற வெள்ளத்தின் சத்தமும் அவர்களுடைய காதைப் பிளக்கிறது.

நோவா தன் ஆருயிர் மனைவியைப் பார்க்கிறார், அன்பு மகன்களையும் மருமகள்களையும் பார்க்கிறார். தன் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்கள் இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில் தன்னோடு பாதுகாப்பாக இருப்பதைக் கண்டு நிம்மதியடைகிறார். அவருடைய இருதயம் நன்றியால் பொங்கிவழிகிறது. அவர்கள் எல்லோரும் சுகபத்திரமாக இருக்கிற அச்சமயத்தில், யெகோவாவுக்கு நன்றி சொல்லி உரக்க ஜெபம் செய்கிறார். வெளியே கேட்கும் பேரிரைச்சலையும் மீறி அவருடைய குரல் தெளிவாகக் கேட்கிறது.

நோவா விசுவாசத்தில் வல்லவராகத் திகழ்ந்தார். சொல்லப்போனால், அவருடைய விசுவாசத்தைப் பார்த்துதான் யெகோவா தேவன் அவரைக் குடும்பமாகக் காப்பாற்ற மனம் தூண்டப்பட்டார். (எபிரெயர் 11:7) ஆனால், மழை கொட்டத் தொடங்கிய பின்பும் அவர்கள் தொடர்ந்து விசுவாசம் காட்ட வேண்டியிருந்ததா? ஆம், சந்தேகமே இல்லை! இன்னும் எத்தனையோ சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்த அவர்களுக்கு நிச்சயமாகவே விசுவாசம் தேவைப்பட்டது. கொந்தளிப்பான காலங்களில் வாழ்கிற நமக்கும்கூட விசுவாசம் தேவைப்படுகிறது. எனவே, நோவா காட்டிய விசுவாசத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

“நாற்பது நாள் இரவும் பகலும்”

பேழைக்கு வெளியே, “நாற்பது நாள் இரவும் பகலும்” அடைமழை ஆக்ரோஷமாகக் கொட்டிக்கொண்டிருந்தது. (ஆதியாகமம் 7:4, 11, 12) நீரின் மட்டம் உயர்ந்துகொண்டே போனது. தன் கடவுளாகிய யெகோவா பொல்லாதவர்களைத் துடைத்தழிக்கிற அதே வேளையில் நீதிமான்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதை நோவாவினால் கண்டுணர முடிந்தது.

தேவதூதர்களுக்கிடையே ஆரம்பமான ஒரு கலகத்திற்கு அந்த ஜலப்பிரளயம் முற்றுப்புள்ளி வைத்தது. ஜலப்பிரளயம் வருவதற்குப் பல்லாண்டுகள்முன், சாத்தானின் சுயநலப் போக்கினால் தூண்டப்பட்ட ஏராளமான தூதர்கள் பரலோகத்தில் ‘தங்களுக்கு ஏற்ற ஒரு குடியிருப்பை’ விட்டுவிட்டு பூமிக்கு வந்து பெண்களோடு உறவுகொண்டார்கள். விளைவு? அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் நெஃபிலிம் என்றழைக்கப்பட்ட ராட்சதர்களானார்கள். (யூதா 6; ஆதியாகமம் 6:4) தன் திட்டத்திற்கேற்ப அந்தக் கலகம் தொடருவதைப் பார்க்கப் பார்க்க சாத்தானுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்திருக்கும்; காரணம், யெகோவாவின் பூமிக்குரிய படைப்பிலேயே மணிமகுடமாய்த் திகழ்ந்த மனிதகுலத்தை அந்தக் கலகம் மாசுபடுத்தியது.

ஜலப்பிரளயத்தினால் பூமியில் நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டே போனபோது, அந்தக் கலகக்கார தூதர்கள் தங்களுடைய மனித உடலை விட்டுவிட்டு பரலோகத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். அதன்பின் அவர்களால் மனித உடலெடுக்க முடியாமல்போனது. ஜலப்பிரளயத்தில் அவர்களுடைய மனைவிமார்களும் பிள்ளைகளும் மற்றெல்லா மனிதர்களோடு சேர்ந்து ஜலசமாதி ஆனார்கள்.

யெகோவா ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே, ஏனோக்கின் காலத்திலிருந்தே, தேவபக்தியற்ற பொல்லாத ஆட்களை அழிக்கப்போவதாக மக்களை எச்சரித்துவந்திருந்தார். (ஆதியாகமம் 5:24; யூதா 14, 15) ஆனால், அச்சமயத்திலிருந்தே அவர்கள் மேலும் மேலும் மோசமானவர்களாகி, பூமியை நாசமாக்கி, வன்முறையால் நிரப்பிக்கொண்டு வந்திருந்தார்கள். இப்போது அவர்கள் இந்தப் பெருவெள்ளத்தில் செத்துக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் சந்தோஷப்பட்டார்களா?

இல்லை, சந்தோஷப்படவில்லை! அவர்களுடைய இரக்கமுள்ள கடவுளும் சந்தோஷப்படவில்லை. (எசேக்கியேல் 33:11) எவ்வளவு பேரைக் காப்பாற்ற முடியுமோ அவ்வளவு பேரைக் காப்பாற்ற கடவுள் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அழிவைக் குறித்து ஏனோக்கின் மூலம் எச்சரிப்பு விடுத்திருந்தார், ஒரு பிரமாண்டமான பேழையைக் கட்டும்படி நோவாவுக்குக் கட்டளை கொடுத்திருந்தார். அதன்படியே, நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் அந்த மாபெரும் கட்டுமானப் பணியில் பல பத்தாண்டுகள் கடினமாக உழைத்துவந்திருந்தார்கள், அதுவும் அனைவருமே பார்க்கும் விதத்தில் அந்த வேலையைச் செய்துவந்திருந்தார்கள். ‘நீதியைப் பிரசங்கிக்கும்படியும்’ நோவாவுக்கு யெகோவா கட்டளையிட்டிருந்தார். (2 பேதுரு 2:5) ஏனோக்கைப் போலவே நோவாவும், உலகத்திற்கு வரவிருந்த நியாயத்தீர்ப்பைப் பற்றி மக்களுக்கு எச்சரிப்பு விடுத்தார். அதற்கு அவர்கள் கவனம் செலுத்தினார்களா? இதையெல்லாம் பரலோகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த இயேசு பிற்பாடு பூமிக்கு வந்தபோது இப்படிச் சொன்னார்: ‘பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை.’—மத்தேயு 24:39.

யெகோவா பேழையின் கதவை அடைத்தபின், 40 நாட்கள் நோவாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எப்படி இருந்திருக்குமெனச் சற்று கற்பனை செய்துபாருங்கள். அல்லும் பகலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்தபோது, அந்த எட்டுப் பேரும் அன்றாட வேலைகளில் ஈடுபட்டுவந்திருப்பார்கள்; ஆம், ஒருவருக்கொருவர் பணிவிடை செய்வது, தங்கள் ‘வீட்டை’ பராமரிப்பது, தங்களோடிருந்த மிருகங்களைக் கவனித்துக்கொள்வது எனப் பல வேலைகளில் ஈடுபட்டுவந்திருப்பார்கள். ஒருநாள், அந்த மகா பெரிய பேழை திடீரென ஒரு குலுங்கு குலுங்கி, அசைய ஆரம்பித்தது. பின்பு, நகரத் தொடங்கியது! உயர உயர எழும்பிக்கொண்டிருந்த தண்ணீரில் ஊஞ்சலாடியபடி பேழையும் உயர உயரச் சென்றது. கடைசியில், “அது பூமிக்குமேல் மிதந்தது.” (ஆதியாகமம் 7:17) சர்வ வல்ல கடவுளான யெகோவாவின் வல்லமைக்கு எப்பேர்ப்பட்ட அத்தாட்சி!

நோவாவின் இருதயத்தில் நிச்சயமாகவே நன்றி பெருக்கெடுத்திருக்கும்—தன்னையும் தன் குடும்பத்தையும் யெகோவா காப்பாற்றியதை நினைத்து மட்டுமல்ல, மக்களுக்கு எச்சரிப்பு கொடுப்பதற்காக யெகோவா தன்னைப் பயன்படுத்தியதை நினைத்தும்கூட! ஆனால், பல ஆண்டுகள் தான் கடினமாக உழைத்ததெல்லாம் வீணாகிவிட்டதுபோல் அவருக்கு அச்சமயத்தில் தோன்றியிருக்கலாம், காரணம் மக்கள் அவருடைய செய்திக்குச் செவிசாய்க்கவே இல்லை! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்—நோவாவுக்குச் சகோதரர்கள், சகோதரிகள், அவர்களுடைய பிள்ளைகள் என நிறையச் சொந்தக்காரர்கள் இருந்திருக்கலாம்; என்றாலும், அவர்களில் ஒருவர்கூட அவருடைய பேச்சைக் கேட்டு பேழைக்குள் வரவில்லை. (ஆதியாகமம் 5:30) இப்போது, பேழைக்குள் தஞ்சம் புகுந்திருந்த எட்டுப் பேரும் வருடக்கணக்காக மக்களுக்கு எச்சரிப்பு விடுத்தது பற்றியும், அவர்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் எடுத்தது பற்றியும் நினைத்துப் பார்த்து நிச்சயமாகவே ஆறுதலடைந்திருப்பார்கள்.

நோவாவின் நாட்களிலிருந்தே யெகோவா மாறவில்லை. (மல்கியா 3:6) நம்முடைய நாட்கள் ‘நோவாவின் நாட்களை’ போலவே இருக்குமென இயேசு கிறிஸ்துவும் விளக்கினார். (மத்தேயு 24:37) நாம் வாழும் காலம் கொடிய காலம், பெரிய பிரச்சினைகள் நிறைந்த காலம்; பொல்லாத இவ்வுலகம் அழியும்போது அந்தப் பிரச்சினைகளெல்லாம் முடிவுக்கு வரும். நோவாவைப் போலவே இன்று கடவுளுடைய மக்கள் ஓர் எச்சரிப்பின் செய்தியை அறிவித்துவருகிறார்கள். அந்தச் செய்திக்கு நீங்கள் செவிசாய்ப்பீர்களா? உயிர்காக்கும் அந்தச் செய்தியை நீங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், அதை மற்றவர்களிடம் தெரிவிக்கிற வேலையில் பங்குகொள்வீர்களா? இவ்விஷயத்தில், நோவாவும் அவரது குடும்பத்தாரும் நம் அனைவருக்குமே அருமையான முன்மாதிரிகள்.

“வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்”

கொந்தளிக்கும் சமுத்திரத்தில் பேழை இப்படியும் அப்படியுமாக அசைந்தாடிச் சென்றது; அப்போது, அதன் மரக்கட்டைகள் எழுப்பிய ‘க்ரீச்’ சத்தமும், அவை ஒன்றோடொன்று உராய்கிற சத்தமும் பேழைக்குள் இருந்தவர்களின் காதுகளில் நிச்சயம் விழுந்திருக்கும். பெரிய அலைகள் பேழையை மோதித்தள்ளிவிடுமோ பேழை உடைந்துவிடுமோ என்றெல்லாம் நோவா அப்போது பயந்தாரா? இல்லை. இப்படிப்பட்ட பயமெல்லாம் இன்றைய சந்தேகவாதிகளுக்கு வேண்டுமானால் வரலாம், ஆனால் நோவா ஒரு சந்தேகவாதியாக இல்லை. “விசுவாசத்தினால்தான் நோவா . . . ஒரு பேழையைக் கட்டினார்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:7) எதில் அவர் விசுவாசம் வைத்திருந்தார்? நோவாவையும் அவரோடு இருந்தவர்களையும் ஜலப்பிரளயத்தில் பத்திரமாய்ப் பாதுகாக்கப்போவதாக யெகோவா செய்திருந்த ஒப்பந்தத்தில் விசுவாசம் வைத்திருந்தார். (ஆதியாகமம் 6:18, 19) இந்தப் பிரபஞ்சத்தையும், பூமியையும், எல்லா உயிரினங்களையும் படைத்தவரால் ஒரு பேழையைப் பத்திரமாகப் பாதுகாக்க முடியாதா என்ன? நிச்சயமாக முடியும்! யெகோவா தம்முடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்பதில் நோவா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை, அவரும் அவருடைய குடும்பத்தாரும் “வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.”—1 பேதுரு 3:20.

40 நாட்கள் இரவும் பகலும் கடந்தபின், அடைமழை ஒருவழியாக அடங்கியது. நம்முடைய நாள்காட்டியின்படி, கி.மு. 2370 டிசம்பர் வாக்கில் அது நிகழ்ந்திருக்கலாம். என்றாலும், நோவாவின் குடும்பத்தாருடைய திகில் பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பூமியெங்கும் தண்ணீர் மயமாகக் காட்சியளித்த அந்தச் சமயத்தில், உயிரினங்களைச் சுமந்திருந்த அந்தப் பேழை மாத்திரம் தன்னந்தனியாக... உயர்ந்த மலைகளுக்கும் பல அடி மேலாக... மிதந்துகொண்டிருந்தது. (ஆதியாகமம் 7:19, 20) அந்தச் சமயத்தில், நோவா தன் மூன்று மகன்களான சேம், காம், யாப்பேத் ஆகியோரோடு சேர்ந்து பேழைக்குள் இருக்கும் மிருகங்களுக்கு உணவளிப்பது, அவற்றைச் சுத்தப்படுத்துவது, ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது போன்ற கடினமான வேலைகளில் ஈடுபட்டிருப்பார். அந்தக் காட்டு மிருகங்களையெல்லாம் பேழைக்குள் சாதுவாக நுழைய வைத்த கடவுளால், ஜலப்பிரளயக் காலம் முழுவதிலும் அவற்றை அதேபோல் சாதுவாக வைத்திருக்க முடிந்தது என்பதில் சந்தேகமே இல்லை. a

ஜலப்பிரளய விவரங்களையெல்லாம் நோவா தனிப்பட்ட விதத்தில் கவனமாகப் பதிவுசெய்து வைத்தார். மழை எப்போது ஆரம்பித்தது, எப்போது நின்றது என்று அந்தப் பதிவு சொல்கிறது. அதோடு, 150 நாட்களுக்குத் தண்ணீர் பூமியெங்கும் நிறைந்திருந்தது என்றும் சொல்கிறது. அதன்பின், கடைசியில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. பின்பு, ஒருநாள் (இன்றைய துருக்கியில் அமைந்துள்ள) “அரராத் என்னும் மலைகளின்மேல்” பேழை மெதுமெதுவாக வந்து தங்கியது. அது கி.மு. 2369 ஏப்ரல் மாதமாக இருந்திருக்கும். அதன்பின், 73 நாட்களுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில், மலைகளின் உச்சி தென்பட்டது. மூன்று மாதம் கழித்து, செப்டம்பரில், பேழையின் கூரையிலிருந்து ஒரு சிறுபகுதியை எடுத்துப்பார்க்க நோவா தீர்மானித்தார். அதை ஒருவழியாகக் கஷ்டப்பட்டு எடுத்தபோது, வெளிச்சமும் வெளிக்காற்றும் குபீரென்று உள்ளே வந்தன. அவருக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கிறதா, வசிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறதா என்றெல்லாம் நோவா பார்க்க ஆரம்பித்தார். அச்சமயத்தில், ஒரு காகத்தை வெளியே விட்டார்; அது கொஞ்ச நாட்களுக்குப் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது; அது திரும்பி வந்தபோதெல்லாம் பேழையின் கூரைமேல் அமர்ந்திருக்கலாம். பின்பு நோவா, ஒரு புறாவை வெளியே விட்டார். அதுவும் திரும்பி வந்தது; ஆனால், சிறிது நாட்களுக்குப்பின் கூடுகட்ட இடம் கிடைத்ததும் அது திரும்பி வரவில்லை.—ஆதியாகமம் 7:24–8:13.

படுபயங்கரமான சூழ்நிலையில்கூட நோவா குடும்ப வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை

நோவா அன்றாட வேலைகளில் ஈடுபட்டுவந்திருந்தாலும், ஆன்மீகக் காரியங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. முழு குடும்பமும் ஒன்றுசேர்ந்து தவறாமல் ஜெபம் செய்வதையும், தங்கள் உயிரைக் காத்த பரலோகத் தகப்பனைப் பற்றி விசுவாசம் பொங்கப் பேசுவதையும் நம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் முக்கியத் தீர்மானங்களை எடுக்கும்போது நோவா யெகோவாமீதே சார்ந்திருந்தார். ‘பூமி காய்ந்திருந்ததை’ பார்த்த பின்பும்கூட, அதாவது ஒரு வருடத்திற்கும் மேலாகப் பேழையில் இருந்த பின்பும்கூட, பேழையின் கதவை நோவா திறந்துவிடவில்லை. (ஆதியாகமம் 8:14) ஆம், அவர் திறக்கவே இல்லை, யெகோவா சொல்லும்வரை காத்திருந்தார்!

விசுவாசமிக்க அந்த மனிதரிடமிருந்து குடும்பத் தலைவர்கள் நிறையக் கற்றுக்கொள்ளலாம். அவர் சுறுசுறுப்பானவராக, பொறுமையானவராக, எல்லாவற்றையும் ஒழுங்காய்ச் செய்பவராக, தன் வீட்டாரைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்பவராக இருந்தார். மிக முக்கியமாக, எல்லா விஷயங்களிலும் யெகோவாவின் சித்தத்திற்கே முதலிடம் கொடுத்தார். இப்படி, அனைத்து காரியங்களிலும் நோவாவின் விசுவாசத்தை நாம் பின்பற்றினால், நம் அன்பானவர்களுக்குப் பற்பல நன்மைகளைப் பெற்றுத்தருவோம்.

“பேழையை விட்டுப் புறப்படுங்கள்”

இறுதியில், நோவாவுக்கு யெகோவாவிடமிருந்து கட்டளை வந்தது. “நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்” என்று அவர் கட்டளையிட்டார். கீழ்ப்படிதலோடு நோவா தன் குடும்பத்துடன் வெளியே வந்தார், அவர்களைத் தொடர்ந்து எல்லா மிருகங்களும் வெளியே வந்தன. எப்படி? அடித்துப்பிடித்து, முட்டிமோதி, நெருக்கித்தள்ளியா? இல்லவே இல்லை! ஒழுங்கான முறையில் “ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன” என்று பதிவு சொல்கிறது. (ஆதியாகமம் 8:15-19) வெளியே வந்த நோவாவையும் அவரது குடும்பத்தாரையும் சுத்தமான மலைக்காற்று சந்தோஷமாக வரவேற்றது; சுத்தமாக்கப்பட்ட பூமி, அரராத் மலைகளின் உச்சியிலிருந்து அவர்களுடைய கண்களுக்கு விருந்து படைத்தது. நெஃபிலிம்கள் இல்லை, வன்முறை இல்லை, கலகக்காரத் தூதர்கள் இல்லை, பொல்லாத ஆட்கள் எவரும் இல்லை! b புதியதோர் சகாப்தம் மலர மனிதகுலத்திற்கு ஒரு வாய்ப்பு திறந்தது.

பேழையைவிட்டு வெளியே வந்த நோவாவுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது தெரிந்திருந்தது. ஆம், வழிபாட்டுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு பலிபீடத்தைக் கட்டினார், ‘எவ்வேழு ஜோடியாக’ பேழைக்குள் கொண்டுவரப்பட்ட சுத்தமான மிருகங்களில் சிலவற்றை யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தினார். (ஆதியாகமம் 7:2; 8:20) நோவா இவ்வாறு வழிபட்டது யெகோவாவுக்குப் பிடித்திருந்ததா?

ஆம். “சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார்” என்று பைபிள் சொல்கிறது. வன்முறையால் நிறைந்திருந்த உலகத்தைப் பார்த்து வேதனைப்பட்ட கடவுள்... விசுவாசமிக்க இந்தக் குடும்பத்தாரைப் பார்த்தபோது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! என்றாலும், தம் சித்தத்தைச் செய்யத் திடத்தீர்மானமாய் இருந்த அவர்களிடம் அவர் பரிபூரணத்தை எதிர்பார்க்கவில்லை. அதே வசனம் இப்படித் தொடர்கிறது: “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.” (ஆதியாகமம் 8:21) மனிதகுலத்தின்மீது யெகோவா மேலும் எப்படிப் பொறுமையையும் கரிசனையையும் காட்டினார் என்பதை இப்போது சிந்திப்போம்.

பூமியின்மேல் தாம் விதித்த சாபத்தை யெகோவா நீக்கினார். ஆதாம் ஏவாள் கீழ்ப்படியாமல்போன சமயத்தில், அவர் அந்தச் சாபத்தை விதித்திருந்தார்; இதனால் பூமியில் பயிர்செய்வது மிகமிகக் கடினமாக ஆனது. நோவாவின் தகப்பனான லாமேக்கு, நோவா என்ற பெயரைத் தன் மகனுக்குச் சூட்டியிருந்தார். (அந்தப் பெயர், “இளைப்பாறுதல்” அல்லது “ஆறுதல்” என்ற அர்த்தத்தைத் தரலாம்.) கடவுள் விதித்த சாபத்திலிருந்து நோவா மனிதகுலத்தை விடுவித்து ஆறுதலளிப்பார் என்று லாமேக்கு முன்னறிவித்திருந்தார். அந்தத் தீர்க்கதரிசனம் தன்னில் நிறைவேறப்போவதையும் தன் முயற்சிகளுக்குப் பிரதிபலனாக பூமி நல்ல விளைச்சலைத் தரப்போவதையும் நினைத்தபோது நோவா சந்தோஷத்தில் பூரித்திருப்பார். சீக்கிரத்திலேயே அவர் ஒரு விவசாயி ஆனதில் ஆச்சரியமே இல்லை.—ஆதியாகமம் 3:17, 18; 5:28, 29; 9:20.

நோவாவும் அவரது குடும்பத்தாரும் பேழையைவிட்டு வெளியே வந்து, சுத்தமாக்கப்பட்ட பூமியில் கால் பதித்தார்கள்

யெகோவா தாம் விதித்த சாபத்தை நீக்கியதோடு... கொலை செய்யக் கூடாது, இரத்தத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது போன்ற தெளிவான, எளிமையான, வாழ்க்கைக்குத் தேவையான சில சட்டங்களை நோவாவின் சந்ததிக்குக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, தாம் இனி இந்தப் பூமியை ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்த மனிதகுலத்தோடு ஓர் ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்திற்கு அடையாளமாக, கண்ணைக் கவரும் இயற்கை நிகழ்வு ஒன்றை—வானவில்லை—முதன்முதலாக வானில் தோன்றச் செய்தார். இந்நாள்வரை நாம் பார்க்கிற ஒவ்வொரு வானவில்லும் யெகோவா கொடுத்த அன்பான, ஆறுதலான வாக்குறுதியை நமக்கு நினைப்பூட்டுகிறது.—ஆதியாகமம் 9:1-17.

நோவாவின் கதை வெறும் கட்டுக்கதையென்றால், அன்று வந்த வானவில்தான் முதலும் கடைசியுமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அவ்வாறு இல்லை. அப்படியானால், நோவா பூமியில் நிஜமாகவே வாழ்ந்த நபர், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டவர். மனிதர்களுக்கு நீண்ட ஆயுள் இருந்த அந்தக் காலத்தில், நோவா மேலும் 350 வருடங்கள் வாழ்ந்து பல கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒருசமயம் அவர் ஒரு பெரிய தவறு செய்தார்—குடித்து வெறித்தார். அந்தத் தவறை அதிகரிக்கும் விதத்தில் அவருடைய பேரனாகிய கானான் அதைவிடப் பெரிய பாவம் ஒன்றைச் செய்தான். இதன் விளைவாக, அவனுடைய குடும்பத்தினர் பல பிரச்சினைகளை எதிர்ப்பட்டார்கள். நிம்ரோதின் நாட்களில் தன் சந்ததி உருவ வழிபாட்டிலும் வன்முறையிலும் ஈடுபட்டதையெல்லாம் பார்த்து நோவா ரொம்பவே மனமொடிந்துபோனார். என்றாலும், விசுவாசத்தில் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்த தன் மகன் சேமைப் பார்த்து மனம் குளிர்ந்துபோனார்.—ஆதியாகமம் 9:21-28; 10:8-11; 11:1-11.

எத்தகைய பிரச்சினைகளை எதிர்ப்பட்டாலும், நோவாவைப் போலவே விசுவாசத்தில் நாம் உறுதியாயிருக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் உண்மைக் கடவுளைப் புறக்கணித்தாலோ அல்லது அவருக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டாலோகூட நோவாவைப் போலவே விசுவாசப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். விசுவாசத்தில் சகித்து நிலைத்திருப்பவர்களை யெகோவா பொக்கிஷமாய்ப் போற்றுகிறார். இப்படி ‘முடிவுவரை சகித்திருப்பவர்கள்’ இயேசு கிறிஸ்து சொன்னதுபோல் நிச்சயம் ‘மீட்புப் பெறுவார்கள்’!—மத்தேயு 24:13. ▪ (w13-E 08/01)

a அந்த மிருகங்களின் உணவுத் தேவையைக் குறைப்பதற்காகக் கடவுள் அவற்றை குளிர்கால உறக்க நிலைக்குக் கொண்டுவந்திருக்கலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். கடவுள் அப்படிச் செய்தாரோ இல்லையோ, பேழைக்குள் இருக்கிற எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பதாக அவர் கொடுத்த வாக்குறுதியை அவர் நிச்சயமாகவே காப்பாற்றினார்.

b ஏதேன் தோட்டமும் சுவடு தெரியாமல் போயிருந்தது, ஒருவேளை அது பெருவெள்ளத்தில் அழிந்திருக்கலாம். அப்படியானால், நுழைவாயிலைக் காத்துவந்த கேருபீன்கள் திரும்பவும் பரலோகத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும்—தங்கள் 1,600 வருடகால நியமிப்பை முடித்துவிட்டு!—ஆதியாகமம் 3:22-24.