Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனநலம் மேம்பட . . .

மனநலம் மேம்பட . . .

கோபம், பொறாமை போன்ற மோசமான குணங்களைத் தவிர்த்துவிட்டு, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும்படி பைபிள் நமக்குச் சொல்கிறது.

கோபம்

பைபிள் ஆலோசனை: “பலசாலியைவிட சட்டெனக் கோபப்படாதவனே மேலானவன்.”—நீதிமொழிகள் 16:32.

இதன் அர்த்தம் என்ன? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது நமக்குத்தான் நல்லது. சில சமயங்களில், நமக்குக் கோபம் வருவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், கோபத்தை அடக்காமல் விட்டுவிடுவது ரொம்பவே ஆபத்தானது. கோபத்தில் நிறைய பேர் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையாவது பேசிவிடுகிறார்கள், யோசிக்காமல் எதையாவது செய்துவிடுகிறார்கள்; பிறகு, அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்? கோபம் உங்களை அடக்குவதற்கு முன்னால், கோபத்தை நீங்கள் அடக்குங்கள். கோபத்தில் பொங்கியெழுவது, பலத்துக்கு அடையாளம் என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது பலவீனத்துக்கு அடையாளம். “கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன், மதில் இடிந்த நகரம்போல் இருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 25:28) சரி, கோபத்தை அடக்க என்ன செய்யலாம்? படபடவென்று பொரிந்து தள்ளுவதற்கு முன்னால், என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வது நல்லது. “விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும்.” (நீதிமொழிகள் 19:11) ஒரு பிரச்சினை வரும்போது, அது சம்பந்தமான எல்லா விஷயங்களையும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படிச் செய்யும்போது, நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

நன்றியுணர்வு

பைபிள் ஆலோசனை: “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்.”—கொலோசெயர் 3:15.

இதன் அர்த்தம் என்ன? நன்றியோடு இருக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். பயங்கரமான இழப்புகளைச் சந்தித்தவர்கள்கூட இது உண்மை என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். இழந்ததை நினைத்து வருத்தப்படாமல், தங்களிடம் இருப்பவற்றுக்காக நன்றி காட்டியதுதான், சோகத்திலிருந்து மீண்டு வர உதவியது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்? ஒவ்வொரு நாளும், நீங்கள் எவற்றுக்காக நன்றியோடு இருக்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் போடுங்கள். பெரிய பெரிய விஷயங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சின்னச் சின்ன விஷயங்களாக இருந்தாலே போதும். அழகான சூரிய உதயம், அன்பான ஒருவரோடு பேசி மகிழ்ந்த தருணம் போன்றவற்றை அதில் சேர்க்கலாம். வாழ்வதற்கு இன்னொரு நாள் கிடைத்திருப்பதையும் பட்டியலில் சேர்க்கலாம். வாழ்க்கை நமக்கு பரிசளிக்கிற நல்ல விஷயங்களைக் கொஞ்சம் கவனித்து, அவற்றுக்காக நன்றியோடு இருந்தால்... மனநலம் மேம்படும்!

இன்னும் முக்கியமாக, உங்கள் குடும்பத்தாருக்காகவும் நண்பர்களுக்காகவும் ஏன் நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். மற்றவர்களிடம் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் பிடித்திருந்தால், அதை அவர்களிடம் நேரிலோ, லெட்டரிலோ, இ-மெயிலிலோ, மெசேஜிலோ சொல்லுங்கள். அப்போதுதான் உறவுகள் உறுதியாகும். கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.—அப்போஸ்தலர் 20:35.

இன்னும் சில பைபிள் ஆலோசனைகள்

உங்களுக்குத் தெரிந்த மொழியில் பைபிளின் ஆடியோ பதிவை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். jw.org வெப்சைட்டில் கிட்டத்தட்ட 40 மொழிகளில் அவை கிடைக்கின்றன

வாக்குவாதங்கள் வெடித்தால் ஒதுங்கிவிடுங்கள்.

“சண்டையை ஆரம்பிப்பது அணையைத் திறந்துவிடுவதுபோல் இருக்கிறது. வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடு.”​—நீதிமொழிகள் 17:14.

எதிர்காலத்தைப் பற்றி தேவையில்லாமல் கவலைப்படாதீர்கள்.

“நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்.”​—மத்தேயு 6:34.

உணர்ச்சிவசப்படாமல், எதையும் யோசித்து செய்யுங்கள்.

“யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும், பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்.”​—நீதிமொழிகள் 2:11.