Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 3

மனவலிமையை வளர்த்துக்கொள்வது

மனவலிமையை வளர்த்துக்கொள்வது

மனவலிமை என்றால் என்ன?

மனவலிமையோடு இருப்பவர் தடைகளையும் ஏமாற்றங்களையும் கண்டு துவண்டுபோகாமல், உடனடியாக அதிலிருந்து மீண்டுவருவார். அனுபவத்தின் மூலமாகத்தான் இப்படிப்பட்ட மனவலிமையை வளர்த்துக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, தட்டுத்தடுமாறாமலும் கீழே விழாமலும் ஒரு பிள்ளையால் நடப்பதற்குக் கற்றுக்கொள்ள முடியாது. அதேபோலத்தான், தோல்விகளைச் சந்திக்காமல் யாராலும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.

மனவலிமை ஏன் முக்கியம்?

தோல்வியைச் சந்திக்கும்போது, கஷ்டம் வரும்போது, அல்லது தவறை யாராவது சுட்டிக்காட்டும்போது சில பிள்ளைகள் சோர்ந்துபோகிறார்கள். இன்னும் சில பிள்ளைகள் ஒரேயடியாக உடைந்துபோகிறார்கள். ஆனால், இந்த உண்மைகளைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்:

  • தோல்விகள் இல்லாத வாழ்க்கையே இல்லை.​—யாக்கோபு 3:2.

  • கஷ்டங்களைச் சந்திக்காத மனிதர்களே இல்லை.​—பிரசங்கி 9:11.

  • தவறுகள் சுட்டிக்காட்டப்படாவிட்டால் நாம் முன்னேற வாய்ப்பே இல்லை.​—நீதிமொழிகள் 9:9.

உங்கள் பிள்ளைக்கு மனவலிமை இருந்தால், வாழ்க்கையில் வரும் எப்படிப்பட்ட சவாலையும் அவனால் தன்னம்பிக்கையோடு சமாளிக்க முடியும்.

மனவலிமையைக் கற்றுக்கொடுப்பது எப்படி?

தோல்வியைச் சந்திக்கும்போது...

பைபிள் ஆலோசனை: “நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்.”​—நீதிமொழிகள் 24:16.

பிரச்சினைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க உங்கள் பிள்ளைக்கு உதவி செய்யுங்கள். ஒருவேளை, அவன் பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வான்? “என்னால எதையுமே உருப்படியா செய்ய முடியாது” என்று நினைத்து வாழ்க்கையை வெறுத்துவிடுவானா?

எப்படி முன்னேறலாம் என்று யோசிக்க வைப்பதன் மூலம், மனவலிமையை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். அப்போதுதான், அவன் துவண்டுபோகாமல் பிரச்சினையைத் துணிந்து சந்திப்பான்.

அதேசமயத்தில், பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று நீங்களே உங்கள் பிள்ளையிடம் சொல்லாதீர்கள். அதை அவனே யோசித்துப் பார்ப்பதற்கு உதவுங்கள். ஒருவேளை, “டீச்சர் சொல்லிக்கொடுக்கற பாடத்த இன்னும் நல்லா புரிஞ்சுக்க நீ என்ன செய்யலாம்?” என்று நீங்கள் கேட்கலாம்.

கஷ்டங்கள் வரும்போது...

பைபிள் ஆலோசனை: “நாளைக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாது.”​—யாக்கோபு 4:14.

வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று பணக்காரராக இருப்பவர் நாளைக்கு ஏழையாகிவிடலாம்; இன்று ஆரோக்கியமாக இருப்பவர் நாளைக்குப் படுத்த படுக்கையாகிவிடலாம். “வேகமாக ஓடுகிறவர்கள் எல்லா சமயத்திலும் முதலில் வருவதில்லை, பலசாலிகள் எல்லா சமயத்திலும் போரில் ஜெயிப்பதில்லை” என்று பைபிள் சொல்கிறது. “ஏனென்றால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கின்றன.”​—பிரசங்கி 9:11.

ஒரு அம்மாவாக அல்லது அப்பாவாக, உங்கள் பிள்ளையை நீங்கள் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க நினைப்பது நியாயம்தான். ஆனால், வாழ்க்கையில் எந்தப் பிரச்சினைகளுமே வராதபடி உங்கள் பிள்ளையை உங்களால் பாதுகாக்க முடியாது என்பதுதான் உண்மை.

பெரியவர்களுக்கு வரும் பிரச்சினைகளெல்லாம் பிள்ளைகளுக்கு வராமல் இருக்கலாம். உதாரணத்துக்கு, வேலை இல்லாத பிரச்சினையோ பணப் பிரச்சினையோ அவர்களுக்கு வராமல் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு மற்ற கஷ்டங்கள் வரத்தான் செய்கின்றன. ஒருவேளை, ஃப்ரெண்டு பிரிந்துவிட்டதை நினைத்து அல்லது குடும்பத்தில் இருக்கும் ஒருவர் இறந்துவிட்டதை நினைத்து அவர்கள் வேதனைப்படலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம். *

தவறுகளை யாராவது சுட்டிக்காட்டும்போது...

பைபிள் ஆலோசனை: ‘ஆலோசனையைக் கேள், . . . அப்போதுதான் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாக ஆவாய்.’—நீதிமொழிகள் 19:20.

உங்கள் பிள்ளையின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவர்கள் வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். அவனைத் திருத்த வேண்டுமென்ற அக்கறையில்தான் அவர்கள் அந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தவறை யாராவது சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக்கொள்ள பிள்ளைக்குக் கற்றுக்கொடுங்கள். அப்போதுதான், நீங்களும் சரி, உங்கள் பிள்ளையும் சரி, வேண்டாத பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். ஜான் சொல்கிறார்: “பிள்ளைங்க தப்பு செய்யறப்பெல்லாம் அவங்கள விட்டுக்கொடுக்காம பேசிட்டு இருந்தா அவங்க திருந்தவே மாட்டாங்க. அடுத்தடுத்து நிறைய பிரச்சினைகள்ல மாட்டிக்குவாங்க. அந்த ஒவ்வொரு பிரச்சினைல இருந்தும் அவங்கள காப்பாத்தறதே உங்க வேலையாயிடும். அப்புறம் என்ன, உங்களுக்கும் சரி, உங்க பிள்ளைக்கும் சரி வாழ்க்கையே வெறுத்துடும்.”

மற்றவர்கள் சுட்டிக்காட்டும் தவறைத் திருத்திக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்? பள்ளியிலோ மற்ற இடங்களிலோ யாராவது அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டினால், “அவங்க அப்படி செஞ்சிருக்க கூடாது” என்று சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக, உங்கள் பிள்ளையிடம் இப்படியெல்லாம் கேளுங்கள்:

  • “அவங்க ஏன் உன்னோட தப்ப சுட்டிக்காட்டுனதா நெனைக்குற?”

  • “நீ எப்படி உன்னை திருத்திக்கலாம்?”

  • “மறுபடியும் இதே சூழ்நிலை வந்துச்சுன்னா நீ என்ன செய்யப்போற?”

தவறுகளைச் சுட்டிக்காட்டுவது இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் உங்கள் பிள்ளைக்குக் கைகொடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

^ பாரா. 21 அக்டோபர் 2012, விழித்தெழு! பத்திரிகையில், “பிஞ்சுகளின் துயர்துடைக்க...” என்ற கட்டுரையைப் பாருங்கள்.