Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பைபிள் காலங்களில் வருஷங்களையும் மாதங்களையும் எப்படிக் கணக்கிட்டார்கள்?

வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்திலிருந்த எபிரெயர்கள் எப்போது உழவு செய்யவும் விதை விதைக்கவும் ஆரம்பித்தார்களோ அப்போதுதான் அவர்களுக்கு புது வருஷம் ஆரம்பித்தது. நம்முடைய காலண்டரின்படி, அது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வரும்.

ஒரு சந்திர நாள்காட்டியில் 12 மாதங்கள் இருக்கும். ஒவ்வொரு மாதத்திலும் 29 அல்லது 30 நாட்கள் இருக்கும். அப்படிப் பார்க்கும்போது சூரிய நாள்காட்டியைவிடக் குறைவான நாட்கள்தான் சந்திர நாள்காட்டியில் இருக்கும். இந்த இரண்டு நாள்காட்டிக்கும் இடையில் இருக்கிற வித்தியாசத்தை எப்படிச் சரிசெய்தார்கள்? சந்திர நாள்காட்டியில் ஒருசில நாட்களைச் சேர்ப்பதன் மூலமாகவோ அவ்வப்போது (ஒருவேளை, புது வருஷத்துக்கு முன்பு) ஒரு மாதத்தைச் சேர்ப்பதன் மூலமாகவோ இந்த வித்தியாசத்தைச் சரிசெய்தார்கள். இப்படிச் செய்ததால், விதை விதைக்கிற பருவங்களை அல்லது அறுவடை செய்கிற பருவங்களை அந்த நாள்காட்டி சரியாகக் காட்டியது.

ஆனால், மோசேயின் நாட்களில் ஆபிப் அல்லது நிசான் மாதம்தான் வருஷத்தின் முதல் மாதமாக இருக்க வேண்டும் என்று யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தார். (யாத். 12:2; 13:4) அது நம் காலண்டரில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரும். நிசான் மாதத்தில் இஸ்ரவேலர்கள் ஒரு பண்டிகையைக் கொண்டாட வேண்டியிருந்தது. அந்தப் பண்டிகையில் பார்லியின் முதல் விளைச்சலை யெகோவாவுக்குச் செலுத்த வேண்டியிருந்தது.—யாத். 23:15, 16.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களின் சரித்திரம், (கி.மு. 175முதல் கி.பி. 135வரை) என்ற ஆங்கில புத்தகத்தில் ஏமில் ஷூரர் என்ற அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “நாட்களைச் சேர்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வதற்கு ரொம்ப எளிமையான முறை இருந்தது. பஸ்கா பண்டிகையை நிசான் மாதத்தில் வந்த பவுர்ணமி அன்றுதான் (நிசான் 14) கொண்டாட வேண்டியிருந்தது. வசந்த காலத்தில், இரவும் பகலும் சமமாக வருகிற ஒரு நாளுக்கு அடுத்து வருகிற பவுர்ணமி அன்றுதான் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டியிருந்தது. . . . ஒருவேளை பஸ்காவின் தேதி இந்தப் பவுர்ணமிக்கு முன்பாகவே வருகிறது என்று தெரிய வந்தால், யூதர்கள் நிசான் மாதத்துக்கு முன்பாக [13-ஆவதாக] ஒரு மாதத்தைச் சேர்த்துக்கொண்டார்கள்.”

இதே முறையில்தான் யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் மரண நினைவு நாள் தேதியை முடிவு செய்கிறார்கள். அது எபிரெயர்களின் காலண்டரின்படி வசந்த காலத்தில் நிசான் 14-ஆம் தேதி வருகிறது. உலகம் முழுவதும் இருக்கிற எல்லா சபைகளுக்கும் இந்தத் தேதி முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. *

ஒரு மாதம் முடிந்து அடுத்த மாதம் பிறந்துவிட்டது என்று எபிரெயர்கள் எப்படித் தெரிந்துகொண்டார்கள்? இன்றைக்கு நாம் எல்லாரும் நம் வீட்டில் இருக்கிற காலண்டரையோ அல்லது போனில் இருக்கிற காலண்டரையோ பார்த்து சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், அந்தக் காலத்தில் இதைத் தெரிந்துகொள்வது அவ்வளவு சுலபம் கிடையாது.

பெருவெள்ளம் வந்த காலப்பகுதியில் ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள் இருந்தன. (ஆதி. 7:11, 24; 8:3, 4) ஆனால், அதற்குப் பின்பு வந்த எபிரெயர்களின் காலண்டரில் அப்படி இருக்கவில்லை. எபிரெயர்களின் காலண்டரில் முதலாம் பிறை கண்ணுக்குத் தெரிந்த நாளிலிருந்துதான் ஒரு புது மாதம் தொடங்கியது. இந்தப் பிறை அதற்கு முந்தைய மாதத்திலிருந்து 29 நாட்கள் கழித்தோ அல்லது 30 நாட்கள் கழித்தோ வந்தது.

ஒரு தடவை தாவீதும் யோனத்தானும், “நாளைக்கு மாதப் பிறப்பு” என்று பேசிக்கொண்டார்கள். (1 சா. 20:5, 18) அப்படியென்றால், கி.மு. 11-ஆம் நூற்றாண்டிலேயே மாதங்களை முன்கூட்டியே கணக்கிட்டார்கள் என்று தெரிந்துகொள்கிறோம். ஆனால், ஒரு புது மாதம் பிறந்துவிட்டது என்று இஸ்ரவேலர்கள் எப்படித் தெரிந்துகொண்டார்கள்? இது சம்பந்தமாக மிஷ்னாவில் ஒருசில தகவல்கள் இருக்கின்றன. இது யூதர்களின் பாரம்பரியங்களும் வாய்மொழி சட்டங்களும் அடங்கிய ஒரு தொகுப்பு. யூதர்கள் பாபிலோனிலிருந்து விடுதலையாகி வந்த பின்பு அவர்களுடைய நியாயசங்கம்தான், அதாவது யூத உயர்நீதிமன்றம்தான், இதை முடிவு செய்ததாக மிஷ்னா சொல்கிறது. அவர்களுடைய பண்டிகைகள் கொண்டாடப்பட்ட ஏழு மாதங்களிலும், ஒவ்வொரு மாதத்தின் 30-வது நாளில் இந்த உயர்நீதிமன்றம் கூடியது. அடுத்த மாதம் எப்போது தொடங்குகிறது என்று அந்த நீதிமன்றம்தான் முடிவு செய்தது. ஆனால் எதை வைத்து நீதிமன்றம் முடிவு செய்தது?

எருசலேமைச் சுற்றிலும் உயரமான இடங்களில் ஆட்கள் நிறுத்தப்பட்டார்கள். முதலாம் பிறை தெரிகிறதா என்று ராத்திரி நேரங்களில் அவர்கள் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அப்படித் தெரிந்தவுடனே அவர்கள் உயர் நீதிமன்றத்துக்கு சொல்லிவிடுவார்கள். முதலாம் பிறை தெரிந்துவிட்டது என்பதற்குப் போதுமான சாட்சிகள் நீதிமன்றத்துக்கு கிடைத்ததும் புது மாதம் பிறந்துவிட்டது என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்துவிடும். ஒருவேளை, மேகங்களாலோ பனிமூட்டத்தாலோ முதலாம் பிறையை அந்த ஆட்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றால் என்ன நடக்கும்? ‘இந்த மாதம் முப்பது நாளோடு முடிகிறது, புது மாதம் அடுத்த நாள் தொடங்குகிறது’ என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்துவிடும்.

உயர் நீதிமன்றத்தின் முடிவு எப்படி எல்லா ஜனங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது என்று மிஷ்னா சொல்கிறது. புது மாதம் தொடங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாக எருசலேமுக்குப் பக்கத்தில் இருந்த ஒலிவ மலையின் உச்சியில் ஒரு தீ பந்தத்தைக் கொளுத்தி வைத்தார்கள். இஸ்ரவேலில் இருந்த மற்ற உயரமான பகுதிகளிலும் நெருப்பு மூட்டி வைப்பதன் மூலமாக இந்தச் செய்தியைப் பரப்பினார்கள். பின்பு வந்த காலங்களில், தூதுவர்கள் எல்லா இடங்களுக்கும் போய் இந்தச் செய்தியைச் சொன்னார்கள். இப்படி, எருசலேமிலும் மற்ற இடங்களிலும் வாழ்ந்த யூதர்கள் புது மாதம் தொடங்கியதைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். அதனால், எல்லாருமே பருவகால பண்டிகைகளை ஒரே சமயத்தில் கொண்டாட முடிந்தது.

எபிரெயர்களின் மாதங்களும் பண்டிகைகளும் பருவகாலங்களும் எப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்வதற்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிற அட்டவணை உங்களுக்கு உதவி செய்யும்.

^ பிப்ரவரி 1, 1991 காவற்கோபுரத்தில் பக்கம் 25-ஐப் பாருங்கள்.