Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆசைப்பட்டது கிடைத்தது

ஆசைப்பட்டது கிடைத்தது

இந்தோனேஷியாவில் இருக்கும் சாங்கிர் பெசார் என்ற ஒரு சின்ன தீவில் மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். இந்தத் தீவில் இருக்கிற எல்லாரும் இவர்களை ஊழியக்காரர்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால், இவர்கள் பைபிளைப் பற்றி எல்லாருக்கும் சொல்லி கொடுத்தார்கள். ஆனால், சில வருஷங்களுக்கு முன்பு நீங்கள் அந்த தீவுக்கு போயிருந்தால், இவர்கள் கடற்கரையில் வேறொரு வேலை செய்வதையும் கவனித்திருப்பீர்கள்.

வடக்கு இந்தோனேஷியாவில் இருக்கும் சாங்கிர் பெசார் தீவு

முதலில், கடற்கரைக்குப் போய் அங்கே இருக்கிற கற்களை எடுப்பார்கள். பிறகு, ஒரு சின்ன மணையில் உட்கார்ந்து அந்தக் கற்களை சுத்தியல் வைத்து உடைப்பார்கள். சில கற்கள் கால்பந்து அளவுக்குப் பெரியதாக இருக்கும்; அவற்றை சின்ன முட்டை அளவுக்கு உடைத்தெடுப்பார்கள். உடைத்த கற்களை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு தங்களுடைய வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போவார்கள். வீட்டுக்குப் போவதற்குப் படிக்கட்டில் ஏறிப் போக வேண்டியிருந்தது. அங்கே போய், அந்த கற்களையெல்லாம் ஒரு பெரிய மூட்டையாக கட்டி, அவற்றை ஒரு ட்ரக்கில் ஏற்றி அனுப்புவதற்குத் தயாராக வைப்பார்கள். இந்தக் கற்கள் ரோடு போடுவதற்குப் பயன்படுத்தப்படும்.

கடற்கரையில் ஹூல்டா கற்களை சேகரிக்கிறார்

இந்த மூன்று சகோதரிகளில் ஒருவர்தான் ஹூல்டா. மற்றவர்களைவிட இவர் இந்த வேலையை அதிகமாக செய்தார். பொதுவாக, இந்த வேலையில் கிடைத்தப் பணத்தை வைத்து குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்வார். ஆனால் இப்போது, வேறொரு விஷயத்துக்காக பணத்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்தார். JW லைப்ரரி ஆப்பை பயன்படுத்த ஒரு டேப்லெட்டை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதில் இருக்கிற வீடியோக்களையும் மற்ற விஷயங்களையும் பயன்படுத்தி ஊழியத்தை இன்னும் நன்றாக செய்ய முடியும் என்றும் பைபிளை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்றும் ஹூல்டா நினைத்தார்.

எப்போதும் செய்வதைவிட ஒவ்வொரு நாள் காலையிலும் 2 மணி நேரம் அதிகமாக ஹூல்டா வேலை செய்தார். ஒன்றரை மாதத்துக்கு இப்படி செய்தார். ஒரு சின்ன ட்ரக்கை நிரப்பும் அளவுக்குக் கற்களை உடைத்து சேகரித்து வைத்திருந்தார். இப்படி, டேப்லெட்டை வாங்குவதற்குத் தேவையான பணத்தைச் சேர்த்தார்.

கையில் டேப்லெட்டை வைத்திருக்கும் ஹூல்டா

“கற்களை உடைத்து உடைத்து நான் ரொம்பவே சோர்ந்துபோய் இருந்தேன். என் கைகளெல்லாம் புண்ணாக இருந்தன. ஆனாலும், டேப்லெட்டை வாங்கியவுடன் நான் பட்ட கஷ்டமெல்லாம் மறந்தே போனது. ஏனென்றால், இப்போது என்னால் ஊழியத்தை நன்றாக செய்ய முடிகிறது. கூட்டங்களுக்கும் சுலபமாக தயாரிக்க முடிகிறது” என்கிறார் ஹுல்டா. கோவிட்-19 ஆரம்பித்த சமயத்தில் ஊழியம்... கூட்டம்... என் எல்லாமே வீடியோ கான்ஃபரன்சிங் வழியாக நடந்ததால், கையில் டேப்லெட் இருந்தது ரொம்பவே நல்லதாக போனது என்று அவர் சொல்கிறார். ஹுல்டாவின் ஆசை நிறைவேறியதை நினைக்கும்போது நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது.