Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

எத்தியோப்பிய அதிகாரி என்ன மாதிரியான வண்டியில் பயணம் செய்தார்?

புதிய உலக மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘ரதம்’ என்ற வார்த்தை மூல மொழியில் வெவ்வேறு வாகனங்களைக் குறிக்கலாம். (அப். 8:28, 29, 38) எத்தியோப்பிய அதிகாரி பயணம் செய்த வண்டி ராணுவ ரதத்தைவிட அல்லது பந்தயத்துக்காக பயன்படுத்தப்பட்ட ரதத்தைவிட கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏன் அப்படி சொல்கிறோம்? சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.

அவர் ஒரு உயர் அதிகாரியாக இருந்தார்; ரொம்ப தூரம் பயணம் செய்து வந்தார். அவரைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: அவர் ‘எத்தியோப்பியர்களுடைய ராணியின் சொத்துகள் எல்லாவற்றையும் நிர்வகித்தார்.’ (அப். 8:27) அன்று இருந்த எத்தியோப்பியா, இன்று இருக்கும் சூடான் மற்றும் தெற்கு எகிப்தையும் உட்படுத்தியது. ஒருவேளை அந்த அதிகாரி தன்னுடைய பயணம் முழுக்க ஒரே வண்டியை பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதோடு, அது ரொம்ப நீண்ட பயணமாக இருந்ததால் அவர் நிறைய பெட்டி படுக்கைகளையும் வைத்திருக்கலாம். முதல் நூற்றாண்டில், பயணிகள் பொதுவாக நான்கு சக்கரங்கள் இருந்த வண்டிகளில் பயணம் செய்தார்கள். அந்த வண்டிகள் மேலே மூடப்பட்டிருந்தன. “இந்த மாதிரி வண்டிகளைப் பயன்படுத்தியதால், நிறைய பெட்டி படுக்கைகளை வைத்துக்கொண்டும் வசதியாக உட்கார்ந்துகொண்டும் போக முடிந்தது. ரொம்ப தூரம் பயணம் செய்யவும் முடிந்தது” என்று அப்போஸ்தலர் புத்தகத்தைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது.

பிலிப்பு போனபோது அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்தார். பைபிள் பதிவு இப்படி சொல்கிறது: “பிலிப்பு அந்த ரதத்தோடு சேர்ந்து ஓடியபோது, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அந்த அதிகாரி சத்தமாக வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டார்.” (அப். 8:30) அப்படியென்றால், அந்த ரதம் ரொம்ப மெதுவாகத்தான் போயிருக்க வேண்டும். பொதுவாக, பயணத்துக்காகத் தயாரிக்கப்பட்ட வண்டிகள் வேகமாக போகும் விதத்தில் தயாரிக்கப்படவில்லை. அதனால்தான், பிலிப்புவால் அந்த ரதத்தோடு சேர்ந்து ஓட முடிந்தது, அந்த அதிகாரி படித்ததைக் கேட்கவும் முடிந்தது.

எத்தியோப்பிய அதிகாரி “தன்னோடு வந்து உட்காரும்படி பிலிப்புவைக் கேட்டுக்கொண்டார்.” (அப். 8:31) பந்தயத்துக்காக பயன்படுத்தப்பட்ட ரதங்களில் பொதுவாக நின்றுகொண்டுதான் சவாரி செய்வார்கள். ஆனால், பயணத்துக்காகத் தயாரிக்கப்பட்ட வண்டிகள் அப்படியில்லை. வசதியாக உட்கார்ந்துகொண்டு போகும் அளவுக்கு அதில் இடம் இருக்கும். அதனால், அந்த அதிகாரியாலும் பிலிப்புவாலும் வசதியாக உட்கார்ந்து பயணம் செய்ய முடிந்திருக்கும்.

அப்போஸ்தலர் 8-வது அதிகாரத்தில் இருக்கும் பதிவு மற்றும் சரித்திரம் தரும் ஆதாரத்தை வைத்துப் பார்க்கும்போது, அந்த எத்தியோப்பிய அதிகாரி பயணம் செய்த வண்டி போருக்காகவோ பந்தயத்துக்காகவோ பயன்படுத்தப்பட்ட ரதமாக இருந்திருக்காது. அது கொஞ்சம் பெரிய வண்டியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான், நம்முடைய பிரசுரங்களில் சமீபத்தில் வந்த படங்களில் அவர் கொஞ்சம் பெரிய வண்டியில் பயணம் செய்வதுபோல் காட்டப்பட்டிருக்கிறது.