Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

மன்னாவையும் காடையையும் தவிர இஸ்ரவேலர்களுக்கு வனாந்தரத்தில் வேறு ஏதாவது சாப்பிட கிடைத்திருக்குமா?

இஸ்ரவேலர்கள் 40 வருஷம் வனாந்தரத்தில் இருந்தபோது, அவர்கள் பெரும்பாலும் மன்னாவைத்தான் சாப்பிட்டார்கள். (யாத். 16:35) யெகோவா அவர்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் காடையையும் கொடுத்தார். (யாத். 16:12, 13; எண். 11:31) அதுமட்டுமல்ல, அவர்களுக்கு வேறுசில உணவும் கிடைத்தன.

உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் ‘தங்குவதற்காக’ யெகோவா அவர்களை சில இடங்களுக்குக் கூட்டிக்கொண்டு போனார்; அங்கே அவர்களுக்குத் தேவையான தண்ணீரும் சாப்பாடும் கிடைத்தன. (எண். 10:33) அந்த மாதிரி இடங்களில் ஒன்றுதான் ஏலிமிலிருந்த பாலைவனச்சோலை. “அங்கே 12 நீரூற்றுகளும் 70 பேரீச்ச மரங்களும் இருந்தன.” (யாத். 15:27) பிலான்ட்ஸ் ஆஃப் தி பைபிள் என்ற புத்தகம், பேரீச்ச மரங்களைப் பற்றி இப்படிச் சொல்கிறது: “அவை வித்தியாசமான இடங்களில் வளரும், . . . பாலைவனங்களில் தங்கியிருக்கிற லட்சக்கணக்கானவர்கள் உணவுக்காக அந்த மரங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். அவை அவர்களுக்கு எண்ணெயையும் தங்குவதற்கான இடத்தையும்கூட தருகின்றன.”

இன்று ஃபேரன் என்று அழைக்கப்படுகிற ஒரு பெரிய பாலைவனச்சோலையில்கூட இஸ்ரவேலர்கள் அன்று தங்கியிருக்கலாம். இது, ஃபேரன் பள்ளத்தாக்கின் ஒரு பாகம். a இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி, அதாவது காட்டாற்றுப் பள்ளத்தாக்கைப் பற்றி, டிஸ்கவரிங் தி வர்ல்ட் ஆஃப் தி பைபிள் என்ற புத்தகம் இப்படிச் சொல்கிறது: “இந்தப் பள்ளத்தாக்கு 130 கிலோமீட்டர் நீளம். சீனாய் பகுதியில் இருக்கிற ரொம்ப நீளமான, அழகான, பிரபலமான காட்டாற்றுப் பள்ளத்தாக்குகளில் இதுவும் ஒன்று. இந்தப் பள்ளத்தாக்கு ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர் தள்ளி ஃபேரன் பாலைவனச்சோலை இருக்கிறது. அந்தச் சோலை, 4.8 கிலோமீட்டர் நீளம்; கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2000 அடி உயரம். இது பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும். ஆயிரக்கணக்கான பேரீச்ச மரங்களும் இருக்கின்றன. இது சீனாய் பகுதியின் ஏதேன் தோட்டம்! இங்கே அவ்வளவு பேரீச்ச மரங்கள் இருப்பதால், அந்தக் காலத்திலிருந்தே நிறைய பேர் இங்கே குடியேறியிருக்கிறார்கள்.”

ஃபேரன் பாலைவனச்சோலையில் பேரீச்ச மரங்கள்

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கிளம்பியபோது, பிசைந்த மாவையும் மாவு பிசையும் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். ஒருவேளை, தானியங்களையும் எண்ணெயையும்கூட அவர்கள் எடுத்துக்கொண்டு வந்திருக்கலாம். உண்மைதான், இவையெல்லாம் சீக்கிரத்திலேயே தீர்ந்துபோயிருக்கும். ஆனால், அவர்கள் ‘ஏகப்பட்ட ஆடுமாடுகளையும் மற்ற கால்நடைகளையும்கூட’ கொண்டு வந்தார்கள். (யாத். 12:34-39) வனாந்தரத்தில் நிலைமை ரொம்ப மோசமாக இருந்ததால் நிறைய மிருகங்கள் இறந்துபோயிருக்கும். அதுமட்டுமல்ல, வளர்த்த மிருகங்களை அவர்களே அடித்துச் சாப்பிட்டிருக்கலாம்; சிலவற்றைப் பலி கொடுத்திருக்கலாம். ஏன், பொய்த் தெய்வங்களுக்குக்கூடப் பலி கொடுத்திருக்கலாம். b (அப். 7:39-43) ஒருசமயம் இஸ்ரவேலர்கள் யெகோவாமேல் விசுவாசம் வைக்காதபோது அவர் அவர்களிடம், “உங்கள் மகன்கள் தங்களுடைய மந்தைகளை 40 வருஷங்களுக்கு இந்த வனாந்தரத்தில் மேய்க்க வேண்டியிருக்கும்” என்று சொன்னார். (எண். 14:33) அப்படியென்றால், இஸ்ரவேலர்கள் மிருகங்களை வளர்த்து அவற்றைப் பராமரித்தார்கள் என்று தெரிகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அவர்களுடைய மந்தைகளிலிருந்து பாலும் இறைச்சியும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று தெரிகிறது. ஆனால், இதெல்லாம் 40 வருஷங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காது, அதுவும் கிட்டத்தட்ட 30 லட்சம் பேருக்கு! c

மிருகங்களுக்குச் சாப்பாடும் தண்ணீரும் எங்கிருந்து கிடைத்திருக்கும்? d அந்தச் சமயத்தில் வனாந்தரத்தில் நல்ல மழை பெய்திருக்கும். நிறைய செடிகொடிகள் வளர்ந்திருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது. வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1 இப்படிச் சொல்கிறது: 3,500 வருஷங்களுக்கு முன்பு, “அரேபியாவில் இப்போது இருப்பதைவிட ரொம்ப அதிகமாகவே தண்ணீர் இருந்திருக்கும். இன்று வறண்டுபோயிருக்கும் ஆழமான காட்டாற்றுப் பள்ளத்தாக்குகள் அன்று ஆற்றுப் படுகைகளாக இருந்தன. ஒருகாலத்தில், இங்கே தண்ணீர் ஆறுகளாகப் பாய்ந்தோடும் அளவுக்கு மழை பெய்திருக்கும் என்பதை இவையெல்லாம் காட்டுகின்றன.” இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த வனாந்தரம் வெறிச்சோடிப்போன, பயங்கரமான ஒரு இடமாகத்தான் இருந்திருக்கும். (உபா. 8:14-16) யெகோவா அவர்களுக்கு அற்புதமாகத் தண்ணீர் தரவில்லை என்றால் இஸ்ரவேலர்களும் இறந்துபோயிருப்பார்கள், அவர்களுடைய மிருகங்களும் செத்துப்போயிருக்கும்.—யாத். 15:22-25; 17:1-6; எண். 20:2, 11.

‘மனுஷன் உணவால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் உயிர்வாழ்வான் என்பதை [இஸ்ரவேலர்களுக்கு] புரிய வைப்பதற்காகத்தான்’ யெகோவா அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்தார் என்று மோசே சொன்னார்.—உபா. 8:3.

a ஆகஸ்ட் 1, 1992 காவற்கோபுரத்தில் பக். 24-25-ஐப் பாருங்கள்.

b இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது இரண்டு சந்தர்ப்பங்களில் மிருகங்களை யெகோவாவுக்குப் பலி கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. முதல் சந்தர்ப்பம், குருமார்கள் நியமிக்கப்பட்டபோது; இரண்டாவது சந்தர்ப்பம், பஸ்கா பண்டிகையின்போது! இந்த இரண்டு சம்பவங்களுமே கி.மு. 1512-ல் நடந்தன. அதாவது, இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கிளம்பிய இரண்டாவது வருஷத்தில் நடந்தன.—லேவி. 8:14–9:24; எண். 9:1-5.

c வனாந்தரத்தில் 40 வருஷங்களின் முடிவில், இஸ்ரவேலர்கள் தாங்கள் செய்த போர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மிருகங்களைச் சூறையாடினார்கள். (எண். 31:32-34) இருந்தாலும், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போகும்வரை அவர்கள் மன்னாவைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.—யோசு. 5:10-12.

d மிருகங்கள் மன்னாவைச் சாப்பிடவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. ஏனென்றால், மன்னாவை எடுக்கும்போது ஒவ்வொரு நபராலும் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுதான் எடுக்க வேண்டும் என்று யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொல்லியிருந்தார்; மிருகங்களைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.—யாத். 16:15, 16.