Skip to content

ஆர்ப்பாட்டம் செய்த பாதிரிகளும் அமைதியாக இருந்த சாட்சிகளும்

ஆர்ப்பாட்டம் செய்த பாதிரிகளும் அமைதியாக இருந்த சாட்சிகளும்

 ஆர்த்தர் என்பவர் ஆர்மீனியாவில் வட்டார கண்காணியாக சேவை செய்கிறார். வட்டார கண்காணிகள், யெகோவாவின் சாட்சிகளின் சபைகளை சந்திப்பார்கள். அப்படி ஆர்மீனியாவில் இருந்த ஒரு சபையை அவர் சந்தித்தபோது, அங்கிருந்தவர்கள் இன்னமும் பொது ஊழியம் செய்ய ஆரம்பிக்காததை கவனித்தார். பொது ஊழியம் என்பது பைபிள் சம்பந்தப்பட்ட பிரசுரங்களை வீல் ஸ்டாண்டில் வைத்து செய்யப்படும் ஒரு ஊழிய முறை. அந்த சபையில் இருந்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஆர்த்தரும் அவருடைய மனைவி ஆனாவும் ஜிரே என்ற இன்னொரு சாட்சியும் சேர்ந்து ஒரு சின்ன ஊரில், நிறைய பேர் நடந்துபோகும் இடத்தில் வீல் ஸ்டாண்டை வைத்து பொது ஊழியம் செய்தார்கள்.

 அந்த வழியாக போனவர்கள் வீல் ஸ்டாண்டை பார்த்தார்கள்; பிரசுரங்களையும் ஆர்வமாக எடுத்துக்கொண்டார்கள். ஆனால் சீக்கிரத்திலேயே, எதிர்ப்பவர்களின் கண்ணில் அந்த வீல் ஸ்டாண்டு பட்டது. இரண்டு பாதிரிகள் வீல் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் வந்தார்கள். ஒருவர் அதை திடீரென்று எட்டி உதைத்தார். அவர் ஆர்த்தரின் முகத்தில் அறைந்தார்; அதில் ஆர்த்தரின் கண்ணாடி கீழே விழுந்தது. ஆர்த்தரும் மற்றவர்களும் அந்த பாதிரியை சாந்தப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்கள் அடங்கவே இல்லை. அந்த பாதிரிகள் வீல் ஸ்டாண்டை காலால் மிதித்துப்போட்டார்கள். பிரசுரங்களை நாலாபக்கமும் வீசினார்கள். சாட்சிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டினார்கள். பிறகு, பயங்கரமாக மிரட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டு போனார்கள்.

 ஆர்த்தரும் ஆனாவும் ஜிரேவும் அங்கே இருந்த ஒரு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்கள். நடந்த விஷயங்களை சொன்ன பிறகு அங்கிருந்த போலீஸ்காரர்களிடமும் மற்றவர்களிடமும் பைபிளில் இருக்கிற விஷயங்களை பற்றி பேசினார்கள். இந்த மூன்று பேரையும் உயர் அதிகாரியிடம் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆரம்பத்தில், அவர் இந்த புகாரை பற்றி நிறைய விஷயங்கள் கேட்டார். ஆனால், வாட்டசாட்டமாக இருந்த ஆர்த்தர் அந்த பாதிரியை திருப்பி அடிக்கவில்லை என்பதை அவர் தெரிந்துகொண்டதும் கேஸை பற்றி கேட்பதை விட்டுவிட்டு, யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை பற்றி கேட்டார். இப்படியே, அவரிடம் 4 மணிநேரம் பேசினார்கள்! ஆர்த்தரும் மற்ற இரண்டு பேரும் சொன்ன விஷயங்களை கேட்டு அவர் ரொம்ப ஆச்சரியப்பட்டார். “இப்படியும் ஒரு மதம் இருக்கிறதா? நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் எனக்கும் உங்கள் மதத்தில் சேர வேண்டும் போல் இருக்கிறதே!” என்று சொன்னார்.

ஆர்த்தரும் ஆனாவும்

 அடுத்த நாள், ஆர்த்தர் மறுபடியும் பொது ஊழியம் செய்தார். அப்போது, முந்தின நாள் நடந்த சம்பவங்களை பார்த்த ஒருவர் ஆர்த்தரிடம் வந்துபேசினார். ஆர்த்தர் நிதானமாக இருந்ததையும் பதிலுக்கு எதுவும் செய்யாததையும் அவர் ரொம்பவே பாராட்டினார். அந்த பாதிரிகள் செய்த காரியத்தால் அவர்கள்மேல் இருந்த மரியாதையே போய்விட்டது என்று சொல்லியிருக்கிறார்.

 அன்று சாயங்காலமே ஆர்த்தரை அந்த உயர் அதிகாரி மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டார். ஆனால், அவரிடம் கேஸை பற்றி கேட்காமல் பைபிளை பற்றி நிறைய கேள்விகளை கேட்டார். இவர்கள் பேசியதை இன்னும் இரண்டு போலீஸ்காரர்களும் கேட்டார்கள்.

 அடுத்த நாள், ஆர்த்தர் மறுபடியும் அந்த உயர் அதிகாரியை பார்த்தார். இந்த சமயத்தில், நம்முடைய சில வீடியோக்களை அவரிடம் காட்டினார். அந்த உயர் அதிகாரி மற்ற போலீஸ்காரர்களையும் கூப்பிட்டு அந்த வீடியோக்களை பார்க்க சொன்னார்.

 அந்த பாதிரிகள் ரொம்ப மோசமாக நடந்துகொண்டதால் நிறைய போலீஸ் அதிகாரிகளிடம் ஒரு சிறந்த சாட்சியை நம்மால் கொடுக்க முடிந்தது. இதனால், யெகோவாவின் சாட்சிகளை பற்றி அவர்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது.