Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“தற்காப்பு கலையை தீவிரமாக நேசித்தேன்”

“தற்காப்பு கலையை தீவிரமாக நேசித்தேன்”
  • பிறந்த வருஷம்: 1962

  • பிறந்த நாடு: அமெரிக்கா

  • என்னைப் பற்றி: தற்காப்பு கலைகள்தான் எனக்கு வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது

என் கடந்த கால வாழ்க்கை

 என்னோடு சேர்ந்து பயிற்சி செய்தவருடைய மூக்கில் தெரியாத்தனமாகக் குத்திவிட்டேன். அடி ரொம்பப் பலமாகப் பட்டுவிட்டது. இப்படி நடக்கும் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. என் மனதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அதனால், இனியும் இந்தக் கலையில் ஈடுபட வேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். பல வருஷங்களாக நான் ஆசையோடு கற்றுக்கொண்ட தற்காப்பு கலைகளை இந்த ஒரு தப்புக்காக விட்டுவிட வேண்டும் என்று ஏன் நினைத்தேன்? அதைப் பற்றி சொல்வதற்கு முன்பு தற்காப்பு கலையில் நான் எப்படிக் காலடி எடுத்து வைத்தேன் என்பதை முதலில் சொல்கிறேன்.

 அமெரிக்காவில் நியுயார்க்கில் இருக்கிற பஃபஃபலோ என்ற இடத்துக்குப் பக்கத்தில் நான் வளர்ந்தேன். நாங்கள் குடும்பமாக ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். கத்தோலிக்க மதத்தில் ஊறிப்போய் இருந்தோம். நான் படித்ததுகூட கத்தோலிக்கப் பள்ளிகளில்தான். சர்ச்சில் பாதிரியாருக்கு உதவியாளராக இருந்தேன். நானும் என் அக்காவும் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் என் அப்பா-அம்மாவின் ஆசை. அதனால், ஸ்போர்ட்சில் கலந்துகொள்வதற்கும் பார்ட்-டைம் வேலை செய்வதற்கும்கூட அவர்கள் எனக்கு அனுமதி கொடுத்தார்கள். அதேசமயத்தில் ஸ்கூலிலும் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். அதனால், அவர்கள் சொன்ன மாதிரியே நான் செய்தேன். இப்படி, சின்ன வயதிலிருந்தே எல்லாவற்றையும் சரியாகச் செய்ய நான் கற்றுக்கொண்டேன்.

 எனக்கு 17 வயது இருக்கும்போது தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஒருநாளைக்கு 3 மணிநேரம் என வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சி செய்தேன். இப்படிப் பல வருஷங்களாகச் செய்துகொண்டிருந்தேன். தற்காப்பு கலையில் இருக்கும் நுணுக்கங்களை மனதிலேயே நான் பழகிப் பார்ப்பேன். அதில் முன்னேறுவதற்கு நிறைய வீடியோக்களையும் பார்ப்பேன். ஒரு வாரத்தில் இதற்கே பல மணிநேரத்தைச் செலவு செய்வேன். கண்ணைக் கட்டிக்கொண்டு, ஆயுதங்களோடு பயிற்சி செய்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும். செங்கல்லையும் பலகையையும் ஒரே அடியில் உடைத்துவிடுவேன். போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய கோப்பைகளை ஜெயித்திருக்கிறேன். சிறந்த போட்டியாளர் என்ற பெயரும் எடுத்திருக்கிறேன். போகப் போக தற்காப்பு கலையே என்னுடைய வாழ்க்கையாக ஆகிவிட்டது.

 வாழ்க்கையில் நான் ஜெயித்துவிட்டதாக நினைத்தேன். நல்ல ரேங்க்கோடு வெற்றிகரமாகக் கல்லூரிப் படிப்பை முடித்தேன். ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை செய்தேன். நான் வேலை செய்த இடத்தில் எனக்கு நிறைய சலுகைகள் கிடைத்தன. எனக்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது. எனக்கு ஒரு காதலியும் இருந்தாள். பார்ப்பவர்களுக்கு என்னுடைய வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நான் அப்படி இல்லை. ஏனென்றால், வாழ்க்கையைப் பற்றி என் மனதில் நிறைய கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.

பைபிள் என் வாழ்க்கையையே மாற்றியது

 என் மனதிலிருந்த கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வதற்காக வாரத்தில் இரண்டு தடவை சர்ச்சுக்குப் போனேன். அதோடு, உதவிக்காகக் கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தேன். ஒருநாள் என் நண்பனோடு பேசிக்கொண்டிருந்தது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. நான் அவனிடம், “இந்த உலகத்துல நிறைய பிரச்சினையும் அநியாயம் அக்கிரமமும்தான் நடக்குது. இப்படி ஒரு உலகத்துல வாழ்றதுல ஏதாவது அர்த்தம் இருக்குதா?” என்று கேட்டேன். அவனுடைய மனதிலும் இப்படிப்பட்ட கேள்விகள் இருந்ததாகவும் பைபிளிலிருந்து திருப்தியான பதிலைக் கண்டுபிடித்ததாகவும் அவன் என்னிடம் சொன்னான். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் a என்ற புத்தகத்தை என்னிடம் அவன் கொடுத்துவிட்டு, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிப்பு படிப்பதாக சொன்னான். மற்ற மதப் புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று நான் நினைத்ததால் ஆரம்பத்தில் அதை வாசிக்கத் தயங்கினேன். ஆனாலும், என் மனதில் இருந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதால், யெகோவாவின் சாட்சிகள் சொல்கிற பதில் நம்புவதுபோல் இருக்கிறதா என பார்க்கலாம் என்று நினைத்தேன்.

 பைபிளில் இருக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வதற்காகத்தான் மனிதர்களைக் கடவுள் படைத்தார் என்பதையும் கடவுளுடைய அந்த நோக்கம் மாறவே இல்லை என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். (ஆதியாகமம் 1:28) என்னிடம் இருந்த கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளிலேயே கடவுளுடைய பெயர் யெகோவா என்று போடப்பட்டிருப்பதைப் பார்த்தபோது நான் அசந்துபோய்விட்டேன். (சங்கீதம் 83:18) இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தை செய்தபோதெல்லாம் இந்தப் பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என்றுதான் நான் ஜெபம் செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. (மத்தேயு 6:9) அதோடு, இப்போதைக்குக் கடவுள் ஏன் கஷ்டத்தையெல்லாம் விட்டுவைத்திருக்கிறார் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களும் என் மனதுக்கு ரொம்பத் திருப்தியாக இருந்தது. எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் இருந்தது.

 முதல் தடவை யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போனபோது எனக்குக் கிடைத்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. எல்லாரும் என்னிடம் அன்பாகப் பேசினார்கள். என்னுடைய பெயர் என்ன என்று கேட்டார்கள். அன்று ஒரு விசேஷப் பொதுப்பேச்சு கொடுத்தார்கள். எப்படிப்பட்ட ஜெபங்களைக் கடவுள் கேட்கிறார் என்ற தலைப்பில் பேசினார்கள். அந்தப் பேச்சின் தலைப்பு எனக்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால், உதவிக்காக நான் அடிக்கடி கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தேன். அடுத்ததாக நான் இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கூட்டங்களில் சொல்லும் வசனங்களை, சின்ன பிள்ளைகள்கூட தங்களுடைய பைபிளில் எடுப்பதைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆரம்பத்தில் எனக்கு வசனங்களைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை. யெகோவாவின் சாட்சிகள்தான் எனக்கு உதவி செய்தார்கள்.

 யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் பைபிள் உண்மைகளைச் சொல்லிக்கொடுக்கும் விதம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. கூட்டங்களுக்குப் போய்விட்டு வந்தாலே எனக்குப் புதுத்தெம்பு கிடைத்த மாதிரி இருக்கும். ஏனென்றால், அங்கு நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். அதற்கு பிறகு ஒரு யெகோவாவின் சாட்சி எனக்கு பைபிள் படிப்பு எடுக்க ஆரம்பித்தார்.

 யெகோவாவின் சாட்சிகள், நான் சர்ச்சில் பார்த்த ஆட்களைப்போல் இல்லை. ரொம்ப வித்தியாசமாக இருந்தார்கள். அவர்கள் ரொம்ப ஒற்றுமையாக இருந்தார்கள். கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ ரொம்ப முயற்சி எடுத்தார்கள். உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு அடையாளமாக இருக்கும் அன்பை ஒருவர்மேல் ஒருவர் இவர்கள் காட்டுவதை நான் பார்த்தேன். அதனால், இவர்கள்தான் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்பதை நான் உறுதியாக நம்பினேன்.—யோவான் 13:35.

 பைபிளைப் படிக்கப் படிக்க அதன்படி நடப்பதற்கு நான் நிறைய மாற்றங்களைச் செய்தேன். ஆனாலும் தற்காப்பு கலைகளை மட்டும் என்னால் விடவே முடியாது என்று நினைத்தேன். பயிற்சி எடுப்பது, போட்டிகளில் கலந்துகொள்வது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால், அதைப் பற்றி எனக்கு பைபிள் படிப்பு எடுத்தவரிடம் சொன்னேன். அதற்கு அவர் என்னிடம், “கவலப்படாதீங்க! தொடர்ந்து பைபிள் படிப்பு படிச்சிட்டே இருங்க. ஒருநாள் நீங்க சரியான முடிவ எடுப்பீங்கனு எனக்கு தெரியும்” என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர் சொன்ன மாதிரியே பைபிளைப் படிக்கப் படிக்க யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமானது.

 என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, ஆரம்பத்தில் நான் சொன்ன சம்பவம்தான். என்னோடு சேர்ந்து பயிற்சி செய்தவரைத் தெரியாத்தனமாக நான் மூக்கில் குத்திவிட்டேன். அந்த சம்பவம் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. தற்காப்பு கலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டு என்னால் எப்படி இயேசுவுடைய சீஷராக இருக்க முடியும் என்று நான் யோசித்தேன். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் “போர் செய்ய இனி . . . கற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று ஏசாயா 2:3, 4-ல் நான் படித்திருக்கிறேன். அதோடு, நமக்கு அநியாயம் நடந்தாலும் நாம் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று இயேசு சொன்னதுகூட எனக்கு ஞாபகம் இருந்தது. (மத்தேயு 26:52) அதனால், உயிருக்கு உயிராக நேசித்த தற்காப்பு கலையை நான் விட்டுவிட்டேன்.

 அதற்குப் பிறகு பைபிள் சொல்வது மாதிரி ‘கடவுள்பக்தி காட்டுவதைக் குறிக்கோளாக வைத்து எனக்கு நானே பயிற்சி கொடுக்க’ ஆரம்பித்தேன். (1 தீமோத்தேயு 4:7) இவ்வளவு நாளாக தற்காப்பு கலைக்காக நான் செலவு செய்த நேரத்தையும் சக்தியையும் யெகோவாவுக்காகக் கொடுத்தேன். அவரிடம் நெருங்கிப்போவதற்கும், அவருக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்தினேன். பைபிளிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் என் காதலிக்குப் பிடிக்காததால் நாங்கள் பிரிந்துவிட்டோம். ஜனவரி 24, 1987-ல் நான் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனேன். சீக்கிரத்திலேயே முழுநேரமாக நான் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுக்க என்னுடைய நேரத்தை செலவு செய்தேன். அன்று முதல் யெகோவாவுக்கு முழுநேரமாக சேவை செய்துகொண்டிருக்கிறேன். அமெரிக்காவில் நியுயார்க்கில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தில் கொஞ்சக் காலமாக சேவை செய்துகொண்டிருக்கிறேன்.

எனக்குக் கிடைத்த பலன்கள்

 கடவுளைப் பற்றிய உண்மைகளை நான் தெரிந்துகொண்டதால் என் மனதில் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்போது நான் வாழ்கிற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு அருமையான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதனால், நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இப்போதும் நான் உடற்பயிற்சி செய்கிறேன். ஆனால் அதை நான் முக்கியமாக நினைப்பதில்லை. யெகோவாவுக்கு சேவை செய்வதைத்தான் வாழ்க்கையில் முதல் இடத்தில் வைத்திருக்கிறேன்.

 தற்காப்பு கலையில் ஈடுபட்ட வரைக்கும் என்னைச் சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதில் நான் ரொம்பக் கவனமாக இருந்தேன். என்னை யாராவது தாக்க வந்தால் அவர்களிடமிருந்து என்னை எப்படித் தற்காத்துக்கொள்வது என்பதையே யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போதும் என்னை சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று நான் கவனமாகப் பார்க்கிறேன். ஆனால் என்னைத் தற்காத்துக்கொள்வதற்காக இல்லை. அவர்களுக்கு பைபிளில் இருக்கும் விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பதற்காக. தாராள குணத்தைக் காட்டுவதற்கும் என்னுடைய அழகான மனைவி பிரெண்டாவுக்கு நல்ல கணவராக இருப்பதற்கும் பைபிள் எனக்கு உதவியிருக்கிறது.

 நான் தற்காப்பு கலையை தீவிரமாக நேசித்தேன். ஆனால் இப்போது யெகோவாவுக்கு சேவை செய்வதில் தீவிரமாக இருக்கிறேன். பைபிள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை: “உடற்பயிற்சி ஓரளவுக்கு நன்மை தரும்; ஆனால், கடவுள்பக்தி எல்லா விதத்திலும் நன்மை தரும். ஏனென்றால், இந்தக் காலத்திலும் இனிவரும் காலத்திலும் வாழ்வு பெறுவோம் என்ற வாக்குறுதியை அது தருகிறது.”—1 தீமோத்தேயு 4:8.

a இந்தப் புத்தகம் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சடிக்கப்படுவதில்லை.