Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

என் வாழ்க்கை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது

என் வாழ்க்கை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது
  • பிறந்த வருஷம்: 1971

  • பிறந்த நாடு: டோங்கா

  • என்னைப் பற்றி: போதைப்பொருளுக்கு அடிமை, ஜெயில் கைதி

என் கடந்தகால வாழ்க்கை

 பசிபிக்கின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் டோங்கா நாட்டில் கிட்டத்தட்ட 170 தீவுகள் இருக்கின்றன. அந்த நாட்டில்தான் நாங்கள் குடும்பமாக வாழ்ந்துவந்தோம். அங்கே எங்களுக்கு மின்சார வசதி இல்லை, சொந்த வாகனமும் இல்லை. ஆனால், எங்கள் வீட்டில் தண்ணீர் வசதி இருந்தது, சில கோழிகளையும் வளர்த்தோம். பள்ளி விடுமுறையின்போது என் அண்ணனும் தம்பியும் நானும் அப்பாவோடு சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்தோம். எங்களுடைய தோட்டத்தில் விளைந்த வாழைப்பழத்தையும், கருணைக் கிழங்கையும், சேம்புக் கிழங்கையும், மரவள்ளிக் கிழங்கையும் அப்பா விற்றார். அதோடு, சின்னச் சின்ன வேலைகளையும் செய்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றினார். டோங்கா தீவுகளில் இருந்த நிறைய பேரைப் போலவே நாங்களும் பைபிள்மேல் ரொம்ப மதிப்புமரியாதை வைத்திருந்தோம், தவறாமல் சர்ச்சுக்கும் போய்வந்தோம். ஆனாலும், வேறொரு பணக்கார நாட்டுக்குக் குடிமாறிப் போனால்தான் நல்லபடியாக வாழ முடியும் என்று நினைத்தோம்.

 எனக்கு 16 வயது இருக்கும்போது, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்குக் குடும்பமாகக் குடிமாறிப் போக என் மாமா ஏற்பாடு செய்தார். அந்த நாட்டுக் கலாச்சாரம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது! அங்கே எங்களுடைய பணப்பிரச்சினை ஓரளவுக்குத் தீர்ந்தது. ஆனாலும், நாங்கள் குடியிருந்த ஏழ்மையான பகுதியில் ஒரே வன்முறை... குற்றச்செயல்... போதைப்பொருள்! ராத்திரியில் அடிக்கடி துப்பாக்கி சத்தம் கேட்கும். முக்கால்வாசி பேர், ரவுடிக் கும்பல்கள் என்ன செய்வார்களோ என்ற பயத்திலேயே இருந்தார்கள். தற்காப்புக்காக அல்லது சண்டை சச்சரவுகளைத் தீர்ப்பதற்காக நிறைய பேர் துப்பாக்கியும் கையுமாக சுற்றினார்கள். அப்படிப்பட்ட ஒரு சண்டையில் ஒரு துப்பாக்கிக் குண்டு என் நெஞ்சில் பாய்ந்தது, இன்னமும் அது என் உடம்புக்குள்தான் இருக்கிறது.

 நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது, மற்ற பையன்கள் மாதிரியே நடந்துகொள்ள நினைத்தேன். நாளாக நாளாக, வெறித்தனமான பார்ட்டிகள்... பயங்கரமான குடிபோதை... அடிதடி ரகளை... போதைப்பொருள்... என்று ஆகிவிட்டேன். கடைசியில், கொகெயினுக்கு அடிமையாகிவிட்டேன். அதை வாங்குவதற்காகத் திருடவும் ஆரம்பித்தேன். என் குடும்பத்தில் இருந்தவர்கள் தவறாமல் சர்ச்சுக்குப் போய்வந்தாலும், கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க சர்ச்சிலிருந்து எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. வன்முறையில் இறங்கியதற்காக நிறைய தடவை நான் கைது செய்யப்பட்டேன். என் வாழ்க்கை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. கடைசியில், ஜெயிலுக்குள் அடைபட்டுக் கிடந்தேன்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது

 அது 1997-வது வருஷம்! ஒருநாள், நான் பைபிளை வைத்திருந்ததை ஜெயிலில் இருந்த இன்னொரு கைதி பார்த்தார். டோங்கா மக்கள் ரொம்பப் புனிதமாக நினைத்த கிறிஸ்துமஸ் காலம் அது. அவர் என்னிடம், ‘கிறிஸ்து பிறந்தத பத்தி பைபிள் உண்மையிலேயே என்ன சொல்லுதுனு உங்களுக்கு தெரியுமா?’ என்று கேட்டார். ஆனால், அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அதனால், பைபிளிலிருந்த எளிமையான பதிவை அவர் காட்டினார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, கிறிஸ்துமஸ் பாரம்பரியங்களைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதுகூட இல்லை என்று! (மத்தேயு 2:1-12; லூக்கா 2:5-14) அது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. பைபிள் வேறென்ன சொல்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஜெயிலில் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய கூட்டங்களுக்கு அந்தக் கைதி வாராவாரம் போய்க்கொண்டிருந்தார். நானும் அவரோடு போக முடிவு செய்தேன். பைபிளில் இருக்கும் வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பற்றி அவர்கள் கலந்துபேசிக்கொண்டு இருந்தார்கள். எனக்குப் பெரிதாக ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், அவர்கள் பைபிளில் இருப்பதைத்தான் கற்றுத்தருகிறார்கள் என்று புரிந்தது.

 எனக்கு பைபிளைக் கற்றுத்தருவதாக அவர்கள் சொன்னபோது, நான் சந்தோஷத்தோடு சம்மதித்தேன். இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறப்போவதைப் பற்றி பைபிள் சொல்வதை முதல் தடவையாகத் தெரிந்துகொண்டேன். (ஏசாயா 35:5-8) கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டுமென்றால் என் வாழ்க்கையை அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்றாகப் புரிந்தது. கெட்ட பழக்கங்களை விடவில்லை என்றால் யெகோவா தேவன் என்னைப் பூஞ்சோலைக்குள் அனுமதிக்க மாட்டார் என்றும் புரிந்தது. (1 கொரிந்தியர் 6:9, 10) அதனால் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதோடு, சிகரெட்... குடி... போதைப்பொருள்... என எல்லாவற்றையும் விட்டொழிக்க முடிவு செய்தேன்.

 1999-ல், என்னுடைய சிறைத்தண்டனை முடிவதற்கு முன்பு என்னை இன்னொரு ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு வருஷத்துக்கும் மேல் யெகோவாவின் சாட்சிகளோடு எனக்குத் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஆனாலும், தொடர்ந்து மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 2000-ல், இனி நான் அமெரிக்காவில் இருக்க முடியாது என்று அரசாங்கம் சொல்லிவிட்டது. நான் டோங்காவுக்கு அனுப்பப்பட்டேன்.

 டோங்காவுக்குப் போனதும், யெகோவாவின் சாட்சிகளை மும்முரமாகத் தேடிக் கண்டுபிடித்து, மறுபடியும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். படித்த விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. டோங்காவில் இருந்த யெகோவாவின் சாட்சிகளும், அமெரிக்காவில் இருந்த யெகோவாவின் சாட்சிகளைப் போலே எல்லாவற்றையும் பைபிளிலிருந்து சொல்லித்தந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

 என் அப்பா, சர்ச்சில் பெரிய பதவியில் இருந்ததால் அங்கே பிரபலமாக இருந்தார். அதனால், நான் யெகோவாவின் சாட்சிகளோடு பழகுவதைப் பார்த்து என் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தார்கள், கோபப்பட்டார்கள். ஆனால், நான் பைபிளைப் படித்துக் கெட்ட பழக்கங்களை விட்டுத் திருந்துவதைப் பார்த்தபோது என் அப்பாவும் அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள்.

டோங்காவில் இருக்கும் மற்ற ஆண்களைப் போலவே நானும் காவா என்ற பானத்தை அளவில்லாமல் குடித்தேன்

 முக்கியமாக, என் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போயிருந்த ஒரு பழக்கத்தை விடுவது எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. பொதுவாக டோங்காவில் இருக்கும் ஆண்கள், மிளகுச் செடியுடைய வேரிலிருந்து காய்ச்சப்படும் காவா என்ற பானத்தை அளவில்லாமல் குடிப்பார்கள். அந்த பானம் ஒரு விதமான போதை மயக்கத்தை ஏற்படுத்தும். நான் டோங்காவுக்கு வந்த பிறகு, தினமும் ராத்திரி காவா க்ளப்புக்குப் போய், சுயநினைவை இழக்கும்வரை குடிப்பது என் பழக்கமாகிவிட்டது. அதற்கு ஒரு காரணம், பைபிளை மதிக்காதவர்களுடைய சகவாசம்தான். ஆனால், அப்படிப்பட்ட பழக்கங்களை கடவுள் வெறுக்கிறார் என்று யெகோவாவின் சாட்சிகள் எனக்குப் புரிய வைத்தார்கள். கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைப்பதற்காக நான் மாற்றங்களைச் செய்தேன்.

 யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா கூட்டங்களுக்கும் நான் போக ஆரம்பித்தேன். கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்தவர்களோடு பழகியதால், கெட்ட பழக்கங்களை என்னால் விட முடிந்தது. 2002-ல், ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக ஆனேன்.

எனக்குக் கிடைத்த நன்மைகள்

 கடவுள் பொறுமை காட்டியதால்தான் இப்போது நான் நல்லபடியாக வாழ்கிறேன். “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று [யெகோவா] விரும்புகிறார். அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 3:9) அவர் நினைத்திருந்தால், இந்தக் கெட்ட உலகத்தை எப்போதோ அழித்திருக்கலாம். ஆனால், என்னைப் போன்ற ஆட்கள் மனம் திருந்தி அவரிடம் வர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு காலம் பொறுமையாக இருந்திருக்கிறார். இப்போது என் மூலமாகக்கூட மற்றவர்களுக்கு அவர் உதவி செய்வார் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

 யெகோவாவின் உதவியோடு, என் வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் என்னால் கொண்டுவர முடிந்தது. இப்போது, உயிருக்கு ஆபத்தான போதைப்பொருள் பழக்கம் எனக்கு இல்லை, அதை வாங்குவதற்காக நான் திருடுவதும் இல்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவின் நண்பர்களாக ஆவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். என் அருமை மனைவி டியாவை யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில்தான் சந்தித்தேன். இப்போது, எங்களுடைய குட்டிப் பையனோடு நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். சமாதானமான புதிய உலகத்தில் என்றென்றும் வாழப்போகிறோம் என்ற விஷயத்தை பைபிளிலிருந்து எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்கிறோம்.