Skip to content

தடுப்பூசி வேண்டாம் என்று யெகோவாவின் சாட்சிகள் சொல்கிறார்களா?

தடுப்பூசி வேண்டாம் என்று யெகோவாவின் சாட்சிகள் சொல்கிறார்களா?

 இல்லை. தடுப்பூசி வேண்டாம் என்று யெகோவாவின் சாட்சிகள் சொல்வது கிடையாது. தடுப்பூசி போட்டுக்கொள்வதா வேண்டாமா என்பது ஒருவருடைய தனிப்பட்ட முடிவு என்று அவர்கள் நினைக்கிறார்கள். சொல்லப்போனால், யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.

 யெகோவாவின் சாட்சிகள் தரமான சிகிச்சைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். பெரிய வியாதிகள் வராமல் தடுக்கும் புதுப்புது மருந்துகளையும் சிகிச்சைகளையும் அவர்கள் வரவேற்கிறார்கள். முக்கியமாகத் தொற்றுநோய் பரவும் சமயங்களில், மருத்துவ ஊழியர்களுடைய மனப்பூர்வமான சேவைக்கும் உழைப்புக்கும் நன்றியோடு இருக்கிறார்கள்.

 யெகோவாவின் சாட்சிகள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள். உதாரணத்துக்கு, கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, உள்ளூர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்படி இந்த வெப்சைட் மூலம் மக்களுக்குத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள், அதுவும் நூற்றுக்கணக்கான மொழிகளில்! சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பொது இடங்களில் கூடுவது, தனிமைப்படுத்திக்கொள்வது, கைகளை கழுவுவது, மாஸ்க் போட்டுக்கொள்வது போன்ற விஷயங்களில் அரசாங்கம் போட்டிருக்கும் சட்டங்களை அல்லது கொடுக்கும் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்கும்படி எல்லாருக்கும் சொல்லிவருகிறார்கள்.—ரோமர் 13:1, 2.

 யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் எத்தனையோ வருஷங்களாக இந்த விஷயங்களை வலியுறுத்தியிருக்கின்றன:

  •   மருந்துகளை அல்லது சிகிச்சைகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது அவரவர் எடுக்க வேண்டிய முடிவு.—கலாத்தியர் 6:5.

     “[இந்தப் பத்திரிகை] எந்தவொரு சிகிச்சையையும் பரிந்துரை செய்வது கிடையாது, மருத்துவ ஆலோசனையைக் கொடுப்பதும் கிடையாது. உண்மைத் தகவல்களைத் தருவது மட்டும்தான் எங்கள் நோக்கம். அதையெல்லாம் அலசிப் பார்த்து முடிவு எடுக்கும் பொறுப்பை அந்தந்த வாசகரிடமே விட்டுவிடுகிறோம்.”—விழித்தெழு! (ஆங்கிலம்), பிப்ரவரி 8, 1987.

     “நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தடுப்பூசி போட்டுக்கொள்வதா வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.”—விழித்தெழு! (ஆங்கிலம்), ஆகஸ்ட் 22, 1965.

  •   நாங்கள் உயிரை ரொம்ப உயர்வாக மதிப்பதால் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறோம்.—அப்போஸ்தலர் 17:28.

     “உடல்நலப் பிரச்சினைகள் வரும்போது யெகோவாவின் சாட்சிகள் மருத்துவர்களைப் போய்ப் பார்க்கிறார்கள். அவர்கள் உயிரை நேசிக்கிறார்கள். அதனால், உயிரைப் பாதுகாப்பதற்காக முடிந்தளவு முயற்சி எடுக்கிறார்கள், பைபிள் அறிவுரைகளை மீறாதபடியும் பார்த்துக்கொள்கிறார்கள்.—காவற்கோபுரம் (ஆங்கிலம்), ஜூலை 1, 1975.

     “யெகோவாவின் சாட்சிகள் மருந்துகளையும் மருத்துவ சிகிச்சைகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ரொம்பக் காலத்துக்கு ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். சொல்லப்போனால், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவரான லூக்காவைப் போலவே யெகோவாவின் சாட்சிகளில் சிலர் டாக்டர்களாக இருக்கிறார்கள். . . . மருத்துவ ஊழியர்களுடைய கடின உழைப்பையும் மனப்பூர்வமான சேவையையும் யெகோவாவின் சாட்சிகள் ரொம்பப் பாராட்டுகிறார்கள். உடல்நலம் முன்னேறுவதற்கு அந்த ஊழியர்கள் செய்யும் உதவிகளுக்காக யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப நன்றியோடும் இருக்கிறார்கள்.”—காவற்கோபுரம் (ஆங்கிலம்), பிப்ரவரி 1, 2011.