Skip to content

தசமபாகம் செலுத்துவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

தசமபாகம் செலுத்துவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் தரும் பதில்

 அன்று வாழ்ந்த இஸ்ரவேலர்கள் உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காகத் தங்களுடைய வருடாந்தர வருமானத்தில் தசமபாகத்தை, a அதாவது பத்திலொரு பாகத்தை, காணிக்கையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. “வருஷா வருஷம் உங்களுடைய நிலத்தில் விளைகிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை [“தசமபாகத்தை,” தமிழ் O.V. (BSI) பைபிள்] நீங்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்” என்று கடவுள் அவர்களிடம் சொன்னார்.—உபாகமம் 14:22.

 தசமபாகம் செலுத்த வேண்டும் என்பது, மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின் (நியாயப்பிரமாணத்தின்) பாகமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்தச் சட்டத்தின்கீழ் இல்லை. அதனால், அவர்கள் தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. (கொலோசெயர் 2:13, 14) இருந்தாலும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் ‘வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் இதயத்தில் தீர்மானித்தபடியே [காணிக்கைகளை] கொடுக்க வேண்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது.—2 கொரிந்தியர் 9:7.

 பைபிளில் சொல்லப்படும் தசமபாகம்—“பழைய ஏற்பாடு”

 பைபிளில் பழைய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்படும் பகுதியில்தான் தசமபாகத்தைப் பற்றி நிறைய தடவை சொல்லப்பட்டிருக்கிறது. அவை பெரும்பாலும், இஸ்ரவேலர்களுக்காகக் கடவுள் திருச்சட்டத்தைக் கொடுத்த பிறகு நடந்த சம்பவங்கள். இரண்டு சம்பவங்கள் மட்டும் அதற்கு முன்பு நடந்தவை.

திருச்சட்டம் கொடுக்கப்பட்டதற்கு முன்பு

 தசமபாகம் கொடுத்ததாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் நபர் ஆபிராம் (ஆபிரகாம்). (ஆதியாகமம் 14:18-20; எபிரெயர் 7:4) சாலேமின் ராஜாவாகவும் குருவாகவும் இருந்தவருக்கு ஆபிராம் ஒரு தடவை தசமபாகம் செலுத்தியதாகத் தெரிகிறது. அவரோ அவருடைய பிள்ளைகளோ வேறு சந்தர்ப்பங்களில் தசமபாகம் செலுத்தியதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை.

 தசமபாகம் செலுத்தியதாக பைபிள் சொல்லும் இரண்டாவது நபர் ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபு. கடவுள் தன்னை ஆசீர்வதித்தால், தனக்குக் கிடைக்கும் “எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை” கடவுளுக்குக் கொடுப்பதாக அவர் நேர்ந்துகொண்டார். (ஆதியாகமம் 28:20-22) சில பைபிள் அறிஞர்களின்படி, அநேகமாக யாக்கோபு தன்னிடம் இருந்த மிருகங்களைப் பலியாகக் கொடுத்ததன் மூலம் அந்தத் தசமபாகத்தைச் செலுத்தியிருக்கலாம். தான் நேர்ந்துகொண்டதை அவர் செலுத்தியபோதிலும், அப்படிப்பட்ட தசமபாகத்தை செலுத்தும்படி தன்னுடைய குடும்பத்தாரிடம் அவர் சொல்லவில்லை.

திருச்சட்டத்தின்கீழ்

 உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காகத் தசமபாகம் செலுத்தும்படி இஸ்ரவேலர்களுக்கு சொல்லப்பட்டது.

  •   முழுநேரமாகக் கடவுளுக்கு சேவை செய்த குருமார்களுக்கும் மற்ற லேவியர்களுக்கும் தசமபாகம் உதவியாக இருந்தது. ஏனென்றால், பயிர்செய்ய அவர்களுக்கு சொந்த நிலம் இருக்கவில்லை. (எண்ணாகமம் 18:20, 21) குருமார்களாக இல்லாத லேவியர்கள் மக்களிடமிருந்து தசமபாகத்தை வாங்கி, “அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை,” அதாவது மிகச் சிறந்த பாகத்தை, குருமார்களுக்குக் கொடுத்தார்கள்.—எண்ணாகமம் 18:26-29.

  •   இன்னொரு (இரண்டாவது) வருடாந்தர தசமபாகத்தையும் இஸ்ரவேலர்கள் செலுத்த வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. அந்தத் தசமபாகம் லேவியவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மக்களுக்கும் உதவியாக இருந்தது. (உபாகமம் 14:22, 23) இஸ்வேலர்கள் விசேஷப் பண்டிகைகளுக்காக இந்தத் தசமபாகத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். குறிப்பிட்ட சில வருஷங்களில் அது ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.—உபாகமம் 14:28, 29; 26:12.

 தசமபாகத்தை எப்படிக் கணக்கிட்டார்கள்? வருடாந்தர விளைச்சலில் பத்திலொரு பாகத்தை இஸ்ரவேலர்கள் ஒதுக்கி வைத்தார்கள். (லேவியராகமம் 27:30) இந்தத் தசமபாகத்தைப் பணமாக அவர்கள் செலுத்த விரும்பினால், 20 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டியிருந்தது. (லேவியராகமம் 27:31) “மாடுகளிலும் ஆடுகளிலும் பத்தில் ஒன்றை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும்” என்றும் அவர்களுக்கு சொல்லப்பட்டது.—லேவியராகமம் 27:32.

 இஸ்ரவேலர்கள் தங்களுடைய மந்தையை எண்ணியபோது ஒவ்வொரு பத்தாவது விலங்கையும் தசமபாகமாக ஒதுக்கி வைத்தார்கள். அவற்றைப் பரிசோதித்துப் பார்க்கவோ மாற்றவோ கூடாது என்று திருச்சட்டம் சொன்னது. கால்நடைகளுக்குப் பதிலாகப் பணத்தைத் தசமபாகமாகக் கொடுக்கக் கூடாது என்றும் திருச்சட்டம் சொன்னது. (லேவியராகமம் 27:32, 33) ஆனால், வருடாந்தர பண்டிகைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது தசமபாகத்தைப் பணமாகக் கொடுக்க இஸ்ரவேலர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பண்டிகைகளுக்காக ரொம்பத் தூரம் பயணம் செய்தபோது அது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.—உபாகமம் 14:25, 26.

 இஸ்ரவேலர்கள் எப்போதெல்லாம் தசமபாகம் கொடுத்தார்கள்? ஒவ்வொரு வருஷமும் இஸ்ரவேலர்கள் தசமபாகத்தைக் கொடுத்தார்கள். (உபாகமம் 14:22) ஆனால், ஒவ்வொரு ஏழாவது வருஷமும் அவர்கள் அதைக் கொடுக்கவில்லை. ஏனென்றால், அது ஓய்வு வருஷமாக இருந்தது. அந்த வருஷத்தில் இஸ்ரவேலர்கள் எதையும் பயிர் செய்யவில்லை. (லேவியராகமம் 25:4, 5) அவர்களுக்கு விளைச்சலே இருக்காது என்பதால் அந்த வருஷ அறுவடைக்காலத்தில் அவர்களிடம் எந்தத் தசமபாகமும் வசூலிக்கப்படவில்லை. ஒவ்வொரு மூன்றாவது வருஷமும் ஆறாவது வருஷமும் இஸ்ரவேலர்கள் தங்களுடைய இரண்டாவது தசமபாகத்தை ஏழை எளிய மக்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுத்தார்கள்.—உபாகமம் 14:28, 29.

 தசமபாகத்தை செலுத்தாதவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? எந்தத் தண்டனையைப் பற்றியும் திருச்சட்டம் சொல்லவில்லை. இஸ்ரவேலர்கள் தண்டனைக்குப் பயந்து அல்ல, ஆனால் தசமபாகம் கொடுப்பது சரியானது என்பதைப் புரிந்துகொண்டு அதைச் செய்ய வேண்டியிருந்தது. தசமபாகத்தைக் கொடுத்துவிட்டதை அவர்கள் கடவுளிடம் சொல்லி, அதற்காக அவரிடம் ஆசீர்வாதத்தைக் கேட்க வேண்டியிருந்தது. (உபாகமம் 26:12-15) தசமபாகத்தைக் கொடுக்காமல் வைத்துக்கொள்வது, தன்னிடம் திருடுவதைப் போல் இருந்ததாகக் கடவுள் சொன்னார்.—மல்கியா 3:8, 9.

 தசமபாகம் ஒரு பெரிய சுமையாக இருந்ததா? இல்லை. இஸ்ரவேலர்கள் தசமபாகத்தைக் கொடுத்தால் அவர்கள்மேல் ஆசீர்வாதங்களைப் பொழிவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்தார். அவர்களுக்கு எந்தக் குறையும் இருக்காது என்றும் சொன்னார். (மல்கியா 3:10) இஸ்ரவேலர்கள் தசமபாகத்தைக் கொடுக்காதபோது கஷ்டங்களை அனுபவித்தார்கள். கடவுளுடைய ஆசீர்வாதம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதோடு, தசமபாகம் கிடைக்காததால் குருமார்களும் லேவியர்களும் மற்ற வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. அதனால், கடவுளை வணங்க அவர்களால் மக்களுக்கு உதவ முடியாமல் போனது.—நெகேமியா 13:10; மல்கியா 3:7.

 பைபிளில் சொல்லப்படும் தசமபாகம்—“புதிய ஏற்பாடு”

 இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்திலும் கடவுளை வணங்கியவர்கள் தசமபாகத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இயேசு இறந்த பிறகு அந்த சட்டம் நீக்கப்பட்டது.

இயேசுவின் காலத்தில்

 இயேசு பூமியில் இருந்தபோது இஸ்ரவேலர்கள் தொடர்ந்து தசமபாகத்தைச் செலுத்திவந்ததாக புதிய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்படும் பைபிள் பகுதி காட்டுகிறது. தசமபாகம் செலுத்துவது அவர்களுடைய கடமையாக இருந்ததென்று இயேசு குறிப்பிட்டார். ஆனாலும், தசமபாகத்தை செலுத்துவதில் கறாராக இருந்துவிட்டு, ‘திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயம், இரக்கம், விசுவாசம் ஆகிய மிக முக்கியமான காரியங்களை விட்டுவிட்ட’ மதத் தலைவர்களை இயேசு கண்டனம் செய்தார்.—மத்தேயு 23:23.

இயேசுவின் மரணத்துக்குப் பிறகு

 இயேசுவின் மரணத்துக்குப் பிறகு தசமபாகத்தை செலுத்த அவசியம் இல்லாமல் போய்விட்டது. இயேசுவின் தியாக மரணம் திருச்சட்டத்துக்கு முடிவுகட்டியது. அதனால், ‘பத்திலொரு பாகத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற கட்டளையும்’ முடிவுக்கு வந்தது.—எபிரெயர் 7:5, 18; எபேசியர் 2:13-15; கொலோசெயர் 2:13, 14.

a தசமபாகம் என்பது “ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக ஒருவருடைய வருமானத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் பத்திலொரு பாகத்தைக் குறிக்கிறது. . . . பைபிளைப் பொறுத்தவரையில், தசமபாகம் செலுத்துவது ஒரு மதப் பழக்கம்.”—ஹார்பர்ஸ் பைபிள் அகராதி (ஆங்கிலம்), பக்கம் 765.