Skip to content

‘பரலோக அரசாங்கத்தின் சாவிகள்’ என்பது என்ன?

‘பரலோக அரசாங்கத்தின் சாவிகள்’ என்பது என்ன?

பைபிள் தரும் பதில்

 ‘பரலோக அரசாங்கத்தின் சாவிகள்’ சிலசமயம் ‘பரலோக அரசாங்கத்துக்கான சாவிகள்’ என்று அழைக்கப்படுகிறது. மக்கள் “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவதற்கு” வழிதிறந்து வைப்பதற்கான அதிகாரத்தை அது குறிக்கிறது. (மத்தேயு 16:19; த நியு அமெரிக்கன் பைபிள்; அப்போஸ்தலர் 14:22) a “பரலோக அரசாங்கத்தின் சாவிகளை” இயேசு பேதுருவுக்குக் கொடுத்தார். பேதுருவுக்கு ஒரு முக்கியமான அதிகாரம் கொடுக்கப்பட்டது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. என்ன அதிகாரம் கொடுக்கப்பட்டது? விசுவாசமுள்ளவர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்று பரலோக அரசாங்கத்துக்குள் போகிற பாக்கியத்தை எப்படி அனுபவிக்க முடியுமென்ற விவரத்தை வெளிப்படுத்துவதற்கான அதிகாரமே அது.

அந்தச் சாவிகள் யார் யாருக்காகப் பயன்படுத்தப்பட்டன?

 பேதுரு கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, பரலோக அரசாங்கத்துக்குள் போவதற்கான வழியை மூன்று தொகுதியினருக்குத் திறந்துவிட்டார்.

  1.   யூதர்கள், யூத மதத்துக்கு மாறியவர்கள். இயேசு இறந்து சில நாட்கள் கழித்து, பேதுரு கிறிஸ்தவர்களாக மாறிய ஏராளமான யூதர்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசினார்; பரலோக அரசாங்கத்தில் ராஜாவாக ஆட்சி செய்ய கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இயேசுதான் என்பதை ஏற்றுக்கொள்ளும்படி அப்போது அவர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை அவர் விளக்கினார். இப்படி, பரலோக அரசாங்கத்துக்குள் நுழைவதற்கான வழியை அவர் திறந்துவிட்டார்; ஆயிரக்கணக்கானோர் ‘அவர் சொன்னதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.’—அப்போஸ்தலர் 2:38-41.

  2.   சமாரியர்கள். பேதுரு பிற்பாடு சமாரியர்களிடம் அனுப்பப்பட்டார். b அவர் அப்போஸ்தலன் யோவானோடு சேர்ந்து “கடவுளுடைய சக்தி சமாரியர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று ஜெபம் செய்தார்.” அப்போதுதான், பரலோக அரசாங்கத்தின் சாவியை இரண்டாவது முறை பயன்படுத்தினார். (அப்போஸ்தலர் 8:14-17) இதனால், பரலோக அரசாங்கத்துக்குள் நுழைவதற்கான வழி சமாரியர்களுக்குத் திறக்கப்பட்டது.

  3.   யூதர் அல்லாதவர்கள். இயேசு இறந்து மூன்றரை வருஷங்களுக்குப் பிறகு, கடவுள் ஒரு விஷயத்தை பேதுருவுக்கு வெளிப்படுத்தினார்; அதாவது, பரலோக அரசாங்கத்துக்குள் போவதற்கான வாய்ப்பு யூதர் அல்லாதவர்களுக்கும் (வேறு தேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும்) கிடைக்குமென்ற விஷயத்தை வெளிப்படுத்தினார். இப்படி, பேதுரு யூதர் அல்லாதவர்களிடம் பிரசங்கித்து மூன்றாவது சாவியைப் பயன்படுத்தினார்; இதனால், கடவுளுடைய சக்தி அவர்களுக்குக் கிடைப்பதற்கும், அவர்கள் கிறிஸ்தவர்களாகி, பரலோக அரசாங்கத்துக்குள் போவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கும் வழியைத் திறந்துவிட்டார்.—அப்போஸ்தலர் 10:30-35, 44, 45.

‘பரலோக அரசாங்கத்துக்குள் போவது’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?

 ‘பரலோக அரசாங்கத்துக்குள் போகிறவர்கள்’ இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள். ஆம், ‘சிம்மாசனங்களில் உட்கார்ந்து’ “ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்” என்று பைபிள் முன்னறிவித்தது.—லூக்கா 22:29, 30; வெளிப்படுத்துதல் 5:9, 10.

பரலோக அரசாங்கத்தின் சாவிகளைப் பற்றிய தவறான கருத்துகள்

 தவறான கருத்து: யாரெல்லாம் பரலோகத்துக்குள் போகலாம் என்று பேதுருதான் முடிவுசெய்கிறார்.

 உண்மை: பேதுரு அல்ல, ஆனால் கிறிஸ்து இயேசுதான் ‘உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 4:1, 8; யோவான் 5:22) சொல்லப்போனால், கடவுள் ‘உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இயேசுவை நீதிபதியாக நியமித்தார்’ என்று பேதுருவே எழுதினார்.—அப்போஸ்தலர் 10:34, 42.

 தவறான கருத்து: பரலோக அரசாங்கத்தின் சாவிகளை எந்தெந்த சமயங்களில் பயன்படுத்த வேண்டுமென்ற பேதுருவின் முடிவுக்காகப் பரலோகம் காத்திருந்தது.

 உண்மை: இயேசு பரலோக அரசாங்கத்தின் சாவிகளைப் பற்றிப் பேசும்போது, பேதுருவிடம் இப்படிச் சொன்னார்: “பரலோக அரசாங்கத்தின் சாவிகளை நான் உனக்குத் தருவேன்; பூமியில் நீ பூட்டுவதெல்லாம் பரலோகத்தில் பூட்டப்படும், பூமியில் நீ திறப்பதெல்லாம் பரலோகத்தில் திறக்கப்படும்.” (மத்தேயு 16:19, த நியு அமெரிக்கன் பைபிள்) பேதுரு என்ன முடிவுசெய்கிறாரோ அதுதான் பரலோகத்திலும் முடிவுசெய்யப்படும் என்று சிலர் இந்த வசனத்தைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்; ஆனால், பரலோகத்தில் முடிவுசெய்யப்படுவதற்கு முன்பு அல்ல, அங்கு முடிவுசெய்யப்பட்ட பின்போ பேதுரு தன் முடிவுகளை எடுத்தார் என்பதை மூல கிரேக்க வினைச்சொற்கள் காட்டுகின்றன. c

 பரலோக அரசாங்கத்தின் சாவிகளைப் பயன்படுத்திய சமயங்களில், பேதுரு பரலோகத்துக்குக் கட்டுப்பட்டு நடந்தார் என்பதை பைபிளிலுள்ள வேறு வசனங்கள் காட்டுகின்றன. உதாரணத்துக்கு, மூன்றாவது சாவியைப் பயன்படுத்திய சமயத்தில் கடவுள் என்னென்ன அறிவுரைகள் கொடுத்தாரோ அவற்றின்படியே அவர் செய்தார். —அப்போஸ்தலர் 10:19, 20.

a பைபிள் சிலசமயம், “சாவி” என்ற வார்த்தையை அதிகாரத்துக்கும் பொறுப்புக்கும் அடையாளமாகப் பயன்படுத்துகிறது.—ஏசாயா 22:20-22; வெளிப்படுத்துதல் 3:7, 8.

b சமாரியர்களுடைய மதத்துக்கும் யூத மதத்துக்கும் வித்தியாசங்கள் இருந்தன. ஆனால், மோசேயின் திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட போதனைகளும் பழக்கங்களும் சமாரியர்களுடைய மதத்தில் சேர்க்கப்பட்டிருந்தன.

c பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில் மத்தேயு 16:19-ஐயும் அதற்கான அடிக்குறிப்பையும் பாருங்கள்.