Skip to content

கடவுள் ஏன் சில ஜெபங்களைக் கேட்பதில்லை?

கடவுள் ஏன் சில ஜெபங்களைக் கேட்பதில்லை?

பைபிள் தரும் பதில்

 கடவுள் சில ஜெபங்களுக்குப் பதில் தருவதில்லை. அவர் ஒரு நபருடைய ஜெபத்தைக் கேட்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று கவனியுங்கள்:

1. அந்த ஜெபம் கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக இருப்பது

 ஒரு ஜெபம் தன்னுடைய சித்தத்திற்கு எதிராக, அல்லது பைபிளிலுள்ள தன்னுடைய சட்டதிட்டங்களுக்கு எதிராக, இருந்தால், கடவுள் அந்த ஜெபத்தைக் கேட்க மாட்டார். (1 யோவான் 5:14) உதாரணத்திற்கு, நாம் பேராசை பிடித்தவர்களாக இருக்கக் கூடாதென்று பைபிள் சொல்கிறது. சூதாட்டம் பேராசையைத் தூண்டிவிடுகிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) அதனால், லாட்டரியில் ஜெயிக்க வேண்டுமென நீங்கள் ஜெபம் செய்தால், அந்த ஜெபத்தைக் கடவுள் கேட்க மாட்டார். நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் ஓடிவந்து உதவ கடவுள் ஒன்றும் ஜீபூம்பா பூதம் போன்றவர் அல்ல. சொல்லப்போனால், அவர் அப்படி இல்லாததற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்; ஒருவேளை அவர் அப்படி இருந்திருந்தால், மற்றவர்கள் அவரிடம் என்னவெல்லாம் செய்யச் சொல்லிக் கேட்பார்களோ என்று நீங்கள் பயந்து பயந்துதான் இருந்திருக்க வேண்டும்.—யாக்கோபு 4:3.

2. ஜெபம் செய்கிறவர் கீழ்ப்படியாதவராக இருப்பது

 தன்னுடைய கோபத்தைத் தூண்டும் காரியங்களைச் செய்கிறவர்களுடைய ஜெபங்களைக் கடவுள் கேட்பதில்லை. உதாரணமாக, தன்னை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு தனக்குக் கீழ்ப்படியாத சிலரிடம் கடவுள் இப்படிச் சொன்னார்: “உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. அதனால், . . . நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும் நான் கேட்க மாட்டேன்.” (ஏசாயா 1:15) ஆனால், அவர்கள் தங்களுடைய வழிகளை மாற்றிக்கொண்டு, கடவுளோடு தங்களுக்கு இருந்த ‘பிரச்சினையைச் சரிசெய்திருந்தால்,’ கடவுள் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு பதிலளித்திருப்பார்.—ஏசாயா 1:18.