Skip to content

நாம் சாகப்போகிற நேரம் முன்பே தீர்மானிக்கப்படுகிறதா?

நாம் சாகப்போகிற நேரம் முன்பே தீர்மானிக்கப்படுகிறதா?

பைபிள் தரும் பதில்

 இல்லை, நாம் எப்போது சாவோம் என்பது முன்பே தீர்மானிக்கப்படுவதில்லை. விதி என்ற கோட்பாட்டை பைபிள் ஆதரிப்பது கிடையாது. மரணம் பெரும்பாலும் ‘எதிர்பாராத சம்பவங்களால்தான்’ நேரிடுகிறது என்று அது சொல்கிறது.—பிரசங்கி 9:11.

“இறப்பதற்கு ஒரு நேரம்” இருக்கிறதென பைபிள் சொல்கிறதுதானே?

 ஆம், “பிறப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது, இறப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது. நடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, நட்டதைப் பிடுங்குவதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்று பிரசங்கி 3:2 சொல்கிறது. ஆனால், வாழ்க்கையில் பொதுவாக நடக்கிற சுழற்சிகளைப் பற்றித்தான் இங்கே பேசப்படுகிறது என்பதை இந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது. (பிரசங்கி 3:1-8) குறிப்பிட்ட நேரத்தில்தான் ஒரு செடியை நட வேண்டுமென்று ஒரு விவசாயியைக் கடவுள் எப்படிக் கட்டாயப்படுத்த மாட்டாரோ அப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நேரத்தில்தான் சாக வேண்டும் என்பதை அவர் முன்தீர்மானிப்பது கிடையாது. குறிப்பு என்னவென்றால், படைப்பாளரைப் பற்றி நினைக்க நேரமே இல்லாதளவுக்கு அன்றாடச் செயல்களில் நாம் மூழ்கிப்போய்விடக் கூடாது என்பதுதான்.—பிரசங்கி 3:11; 12:1, 13.

வாழ்நாள் நீட்டிக்கப்படலாம்

 வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவிதங்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், ஞானமான தீர்மானங்களை எடுப்பதன் மூலம் நம்முடைய வாழ்நாளை நம்மால் நீட்டிக்க முடியும். பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஞானமுள்ளவனின் போதனை வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது. மரணத்தின் கண்ணிகளிலிருந்து அது ஒருவனைக் காப்பாற்றுகிறது.” (நீதிமொழிகள் 13:14) இஸ்ரவேலர்கள் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் ‘நீண்ட காலம் வாழ்வார்கள்’ என்று மோசேயும் சொன்னார். (உபாகமம் 6:2) ஆனால், முட்டாள்தனமான அல்லது மோசமான காரியங்களைச் செய்கிறவர்கள் தங்களுடைய வாழ்நாளைக் குறைத்துக்கொள்வார்கள்.—பிரசங்கி 7:17.

 சிலசமயம் நாம் எவ்வளவுதான் ஞானமாக அல்லது கவனமாக நடந்துகொண்டாலும், மரணத்திடமிருந்து நம்மால் தப்பிக்க முடியாது. (ரோமர் 5:12) என்றாலும், இந்த நிலைமை மாறப்போகிறது; ‘இனிமேல் மரணமே இருக்காத’ ஒரு காலம் வரப்போகிறது என்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:4.