Skip to content

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | யோனத்தான்

‘யெகோவாவை யாராலும் தடுக்க முடியாது’

‘யெகோவாவை யாராலும் தடுக்க முடியாது’

மலைமேல் ஒரு புறக்காவல் படை. சுற்றிலும் வறண்ட பகுதி, கரடுமுரடான நிலப்பரப்பு. அதையே பார்த்து அலுத்துப்போயிருக்கிறார்கள் பெலிஸ்திய வீரர்கள். திடீரென்று கீழே பார்த்தால், ஒரு சுவாரஸ்யமான காட்சி! எதிர்ப்பக்கத்தில் இரண்டு இஸ்ரவேலர்கள் நிற்கிறார்கள்! அவர்களைப் பார்த்து பெலிஸ்திய வீரர்கள் பயந்துபோகிறார்களா? இல்லவே இல்லை. அவர்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ரொம்பக் காலமாகவே இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களின் கொத்தடிமைகள் போலத்தானே இருக்கிறார்கள்! விவசாயக் கருவிகளைத் தீட்டக்கூட வழியில்லாமல் பெலிஸ்தியர்களின் தயவைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! அப்படியிருக்கும்போது, இஸ்ரவேல் வீரர்களிடம் என்ன ஆயுதம் இருந்துவிடப்போகிறது? அதுவும் வந்திருப்பது இரண்டே பேர்! ஒருவேளை அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தால்கூட, அவர்களால் அப்படியென்ன பெரிதாகச் செய்துவிட முடியும்? அதனால் பெலிஸ்திய வீரர்கள் ஏளனமாக, “மேலே ஏறி வாருங்கள், உங்களுக்குச் சரியான பாடம் புகட்டுகிறோம்!” என்று கத்துகிறார்கள்.—1 சாமுவேல் 13:19-23; 14:11, 12.

பாடம் புகட்டத்தான்போகிறார்கள்... ஆனால் பெலிஸ்தியர்கள் அல்ல, இஸ்ரவேலர்கள்! அந்த இரண்டு இஸ்ரவேலர்களும் வேகமாக இறங்கி ஓடி, மறுபக்கத்துக்குப் போய், பெலிஸ்தியர்கள் இருந்த மலைமேல் ஏற ஆரம்பிக்கிறார்கள். மலை ரொம்பவே செங்குத்தாக இருக்கிறது. ஆனாலும், சளைக்காமல் தங்கள் கை கால்களால் ஊர்ந்து மேலே ஏறி, புறக்காவல் படையை நெருங்குகிறார்கள். (1 சாமுவேல் 14:13) இப்போதுதான் பெலிஸ்தியர்கள் கவனிக்கிறார்கள்... முன்னால் வருகிறவரிடம் ஆயுதங்கள் இருக்கின்றன, அவருடைய ஆயுதங்களைச் சுமக்கிறவன் அவருக்குப் பின்னால் வருகிறான். ஒரேவொரு வீரனை மட்டும் கூட்டிக்கொண்டு வந்து ஒரு படையையே அவர் வீழ்த்தப் பார்க்கிறாரா? அவர் என்ன பைத்தியமா?

இல்லவே இல்லை. கடவுள்மேல் அபார நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் அவர்! அவருடைய பெயர்தான் யோனத்தான். விறுவிறுப்பான அவருடைய கதையிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்கள் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இன்று நாம் யாரோடும் போர் செய்வதில்லை என்பது உண்மைதான். ஆனால், யோனத்தானிடம் கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, தைரியம் காட்டுவதில்... உண்மையாக இருப்பதில்... சுயநலம் இல்லாமல் நடந்துகொள்வதில்... அவர் அருமையான உதாரணம்! உண்மையான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட குணங்கள்தான் நமக்குத் தேவை.—ஏசாயா 2:4; மத்தேயு 26:51, 52.

உண்மையாக இருந்த மகன், தைரியம்படைத்த வீரர்

யோனத்தான் எதற்காக அந்தப் புறக்காவல் படையைத் தாக்கப் போனார் என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலின் மூத்த மகன்தான் யோனத்தான். சவுல் ஒரு ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டபோது, யோனத்தானுக்கு 20 வயது இருந்திருக்கலாம், ஒருவேளை அதற்கு அதிகமாகக்கூட இருந்திருக்கலாம். அப்பாவோடு அவர் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்று தெரிகிறது. அவருடைய அப்பாவும் அவரிடம் எதையும் மறைக்காமல் பேசியதாகத் தெரிகிறது. தன்னுடைய அப்பா உயரமானவர், அழகானவர், வீரதீரர், முக்கியமாக விசுவாசத்துக்கும் மனத்தாழ்மைக்கும் பேர்போனவர் என்றெல்லாம் யோனத்தானுக்குத் தெரியும். யெகோவா ஏன் தன்னுடைய அப்பாவை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருந்தார் என்றும் அவருக்குத் தெரியும். சவுலைப் போல அந்தத் தேசத்தில் யாருமே இல்லை என்று சாமுவேல் தீர்க்கதரிசிகூட சொல்லியிருந்தார்.—1 சாமுவேல் 9:1, 2, 21; 10:20-24; 20:2.

தன்னுடைய அப்பாவின் தலைமையில் யெகோவாவின் எதிரிகளுக்கு விரோதமாகப் போர் செய்வதை நினைத்து யோனத்தான் பெருமைப்பட்டிருப்பார். அந்தப் போர்கள், தேசப்பற்றின் காரணமாக இன்று நடக்கும் போர்களைப் போல இருக்கவில்லை. அன்று யெகோவா இஸ்ரவேலைத் தன்னுடைய தேசமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்; பொய் தெய்வங்களை வணங்கிய மற்ற தேசத்து மக்கள் இஸ்ரவேலர்களை எப்போதும் தாக்கிக்கொண்டே இருந்தார்கள். உதாரணத்துக்கு, தாகோனையும் மற்ற பொய் தெய்வங்களையும் வணங்கிய பெலிஸ்தியர்கள் யெகோவாவின் மக்களை அடக்கி ஒடுக்கவும் ஒழித்துக்கட்டவும் அடிக்கடி முயற்சி செய்தார்கள்.

அதனால், யோனத்தானைப் போன்ற விசுவாசமுள்ள ஆட்களுக்கு, போர் செய்வது யெகோவாவுக்குச் செய்யும் சேவையாக இருந்தது. யோனத்தான் எடுத்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார். சவுல் இஸ்ரவேலின் ராஜாவாக ஆன கொஞ்சக் காலத்தில், 1,000 வீரர்களுக்குத் தலைமைதாங்க தன்னுடைய மகன் யோனத்தானை நியமித்தார். கெபாவிலிருந்த பெலிஸ்திய காவல்படையைத் தாக்க யோனத்தான் அந்த வீரர்களைக் கூட்டிக்கொண்டு போனார். அவர்களிடம் போதிய ஆயுதங்கள் இருக்கவில்லை; ஆனாலும், யெகோவாவின் உதவியோடு யோனத்தான் அந்தப் போரில் ஜெயித்தார். உடனே, பெலிஸ்தியர்கள் பெரிய படையைத் திரட்டிக்கொண்டு வந்தார்கள். அதைக் கேள்விப்பட்ட சவுலின் வீரர்கள் கதிகலங்கிப்போனார்கள். சிலர் ஓடி ஒளிந்துகொண்டார்கள். இன்னும் சிலர் எதிரிகளோடுகூட சேர்ந்துகொண்டார்கள்! ஆனால், யோனத்தான் தன்னுடைய தைரியத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை.—1 சாமுவேல் 13:2-7; 14:21.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நாள் வந்தது. யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமப்பவனை மட்டும் கூட்டிக்கொண்டு ரகசியமாகக் கிளம்பினார். மிக்மாசில் இருந்த பெலிஸ்திய புறக்காவல் படையை அவர்கள் நெருங்கியபோது, ஆயுதங்களைச் சுமப்பவனிடம் யோனத்தான் தன்னுடைய திட்டத்தைச் சொன்னார். “நாம் அந்தப் பக்கம் போய், அவர்கள் கண்ணில் படுகிற மாதிரி நிற்கலாம். அவர்கள் நம்மிடம், . . . ‘சண்டைக்கு வாருங்கள்!’ என்று சொன்னால், நாம் ஏறிப்போகலாம். அவர்களை யெகோவா நம் கையில் கொடுப்பார் என்பதற்கு இதுதான் அடையாளம்” என்று சொன்னார். ஆயுதங்களைச் சுமப்பவன் அதற்கு ஒத்துக்கொண்டான். “யெகோவா நினைத்தால், அவருடைய ஜனங்களைக் கொஞ்சம் பேரை வைத்தும் காப்பாற்ற முடியும் நிறைய பேரை வைத்தும் காப்பாற்ற முடியும். அவரை யாராலும் தடுக்க முடியாது” என்று யோனத்தான் நம்பிக்கையோடு சொன்ன வார்த்தைகள் அவனுடைய மனதைத் தொட்டிருக்கலாம். (1 சாமுவேல் 14:6-10) யோனத்தான் ஏன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசினார்?

யோனத்தான் தன்னுடைய கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். எதிரிகளின் எண்ணிக்கை ரொம்பவே அதிகமாக இருந்த சந்தர்ப்பங்களில்கூட யெகோவா தன் மக்களுக்கு வெற்றி தந்திருக்கிறாரே! சிலசமயங்களில், ஒரேவொரு நபரைப் பயன்படுத்திக்கூட வெற்றி தந்திருக்கிறாரே! (நியாயாதிபதிகள் 3:31; 4:1-23; 16:23-30) அதனால், கடவுளுடைய ஊழியர்களின் எண்ணிக்கையோ பலமோ ஆயுதங்களோ அல்ல, அவர்களுடைய விசுவாசம்தான் வெற்றியைத் தேடித்தரும் என்பது யோனத்தானுக்குத் தெரிந்திருந்தது. அந்த விசுவாசம் இருந்ததால்தான், எதிரிகளைத் தாக்குவதா வேண்டாமா என்பதை யெகோவாவே முடிவு செய்யும்படி யோனத்தான் விட்டுவிட்டார். அவர் எதிர்பார்த்த அடையாளத்தை யெகோவா காட்டியதும், அவர் துணிந்து களத்தில் இறங்கினார்.

யோனத்தானின் விசுவாசத்தில் பளிச்சிடும் இரண்டு அம்சங்களைக் கவனியுங்கள். முதலாவதாக, தன் கடவுளாகிய யெகோவாமேல் அவருக்கு அதிக பயபக்தி இருந்தது. தான் நினைத்ததைச் செய்து முடிக்க யெகோவா மனிதர்களைச் சார்ந்திருப்பதில்லை என்றாலும், தனக்குச் சேவை செய்கிற உண்மையுள்ள மனிதர்களை ஆசீர்வதிப்பதில் அவர் சந்தோஷப்படுகிறார் என்ற நம்பிக்கை யோனத்தானுக்கு இருந்தது. (2 நாளாகமம் 16:9) இரண்டாவதாக, ஒன்றைச் செய்வதற்கு முன்பு, அதைச் செய்யலாமா வேண்டாமா என்று அவர் யெகோவாவிடம் கேட்டு உறுதி செய்துகொண்டார். இன்று நாமும், ஒன்றைச் செய்யலாமா வேண்டாமா என்று யெகோவாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பலாம்; ஆனால், ஏதாவது அடையாளங்கள் மூலம் யெகோவா தன் முடிவைச் சொல்ல வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஏனென்றால், அவருடைய விருப்பம் என்னவென்று நாம் தெரிந்துகொள்ள அவருடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட முழு பைபிளையும் அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16, 17) அதனால், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு பைபிளைக் கவனமாக அலசிப் பார்க்கிறோமா? அப்படிச் செய்தால், யோனத்தானைப் போல் நாமும், நம்முடைய விருப்பத்தைவிட கடவுளுடைய விருப்பத்தைத்தான் முக்கியமாக நினைக்கிறோம் என்பதைக் காட்டுவோம்.

யோனத்தானும் அவருடைய ஆயுதங்களைச் சுமப்பவனும் அந்தப் புறக்காவல் படையைத் தாக்குவதற்குச் செங்குத்தான மலைமேல் ஏறினார்கள். அவர்கள் தாக்க வருவது அப்போதுதான் பெலிஸ்தியர்களுக்குப் புரிந்தது. அதனால், இரண்டு பேரையும் தீர்த்துக்கட்ட தங்கள் வீரர்களை அனுப்பினார்கள். அந்த வீரர்கள் இவர்களைச் சுலபமாக வீழ்த்தியிருக்க முடியும். ஏனென்றால், அவர்கள் நிறைய பேர் இருந்தார்கள், அதுவும் உயரத்தில் இருந்தார்கள். ஆனால், நடந்தது வேறு! பெலிஸ்தியர்களை யோனத்தான் வெட்டிக்கொண்டே போனார். அவருடைய ஆயுதங்களைச் சுமப்பவன் அவருக்குப் பின்னால் பெலிஸ்தியர்களைக் கொன்றுபோட்டுக்கொண்டே வந்தான். சில நிமிடங்களிலேயே கிட்டத்தட்ட 20 பேரை அவர்கள் வெட்டிச் சாய்த்தார்கள்! அதன் பிறகு யெகோவா இன்னொரு விஷயத்தைச் செய்தார். பைபிள் இப்படிச் சொல்கிறது: “அப்போது, முகாமில் இருந்த வீரர்களும் புறக்காவல் படையில் இருந்த வீரர்களும் கதிகலங்கிப்போனார்கள். சூறையாடப் போன பிரிவினர்களும்கூட பயந்து நடுங்கினார்கள். பூமி அதிர ஆரம்பித்தது. கடவுள் அவர்கள் எல்லாரையும் குலைநடுங்க வைத்தார்.”—1 சாமுவேல் 14:15.

யோனத்தான் ஒரேவொரு வீரனோடு போய், பலம்படைத்த எதிரி படையை வீழ்த்தினார்

பெலிஸ்தியர்களுக்கு மத்தியில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது; அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கவும் ஆரம்பித்தார்கள். இதை சவுலும் அவருடைய ஆட்களும் தூரத்திலிருந்து பார்த்தார்கள். (1 சாமுவேல் 14:16, 20) உடனே, தைரியமாகப் போய் பெலிஸ்தியர்களைத் தாக்கினார்கள்; அவர்களைத் தாக்குவதற்கு, செத்துக் கிடந்த பெலிஸ்தியர்களின் ஆயுதங்களை அவர்கள் ஒருவேளை எடுத்திருக்கலாம். அன்று யெகோவா தன் மக்களுக்கு அபார வெற்றி தந்தார். அதேபோல் இன்றும் யெகோவா தன் மக்களுக்கு வெற்றி தருகிறார். யோனத்தானையும், அவரோடு போன (பெயர் குறிப்பிடப்படாத) வீரனையும் போலவே இன்று நாமும் யெகோவாமேல் விசுவாசத்தைக் காட்டினால், ஒருபோதும் அதற்காக வருத்தப்பட மாட்டோம்.—மல்கியா 3:6; ரோமர் 10:11.

“அவர் கடவுளுடைய துணையோடுதான் போர் செய்தார்”

யோனத்தானுக்கு, அந்த வெற்றி யெகோவாவின் ஆசீர்வாதத்தால் கிடைத்த வெற்றியாக இருந்தது; ஆனால், சவுலுக்கு அப்படி இல்லை. ஏனென்றால், சவுல் பெரிய தவறுகளைச் செய்திருந்தார். உதாரணத்துக்கு, யெகோவா தேர்ந்தெடுத்திருந்த தீர்க்கதரிசியான சாமுவேலின் பேச்சை அவர் கேட்கவில்லை; ஒரு லேவியராக சாமுவேல் செலுத்த வேண்டியிருந்த பலியை சவுல் செலுத்திவிட்டார். இப்படிக் கீழ்ப்படியாமல் போனதால் சவுலின் ஆட்சி நீடிக்காது என்று சாமுவேல் சொல்லிவிட்டார். சவுல் இன்னொரு தவறையும் செய்திருந்தார். தன் வீரர்களைப் போருக்கு அனுப்பியபோது, “நான் என்னுடைய எதிரிகளைப் பழிவாங்கித் தீரும்வரை பொறுத்திருக்காமல் சாயங்காலத்துக்கு முன்பே உணவு சாப்பிடுகிற எவனும் சபிக்கப்பட்டவன்!” என்று முட்டாள்தனமாக ஆணையிட்டுச் சொல்லியிருந்தார்.—1 சாமுவேல் 13:10-14; 14:24.

சவுல் நிறம் மாற ஆரம்பித்துவிட்டாரா? பணிவோடும் பயபக்தியோடும் இருந்தவருக்கு ‘நான்’ என்ற ஆணவம் வந்துவிட்டதா? வந்துவிட்டதாகத்தான் அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன. தைரியசாலிகளாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருந்த வீரர்களிடம் நியாயமில்லாத அந்தக் கட்டளையைக் கொடுக்கும்படி சவுலிடம் யெகோவா சொல்லவே இல்லையே! அதோடு, “நான் என்னுடைய எதிரிகளைப் பழிவாங்கித் தீரும்வரை” என்று சவுல் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, அந்தப் போர் அவருடையது என்ற நினைப்பு அவருக்கு வந்துவிட்டதோ? யெகோவாவின் நீதிதான் முக்கியம், தனக்குப் புகழ் சேருவதும், தனக்கு வெற்றி கிடைப்பதும், தான் பழிவாங்குவதும் முக்கியம் அல்ல என்பதை அவர் மறந்துவிட்டாரோ?

சாப்பிடக் கூடாதென்று சவுல் தன் வீரர்களிடம் முட்டாள்தனமாக ஆணையிட்டுச் சொல்லியிருந்தது யோனத்தானுக்குத் தெரியவில்லை. போர் செய்த களைப்பில் அவர் தன்னுடைய கோலை ஒரு தேன்கூட்டில் குத்தி, கொஞ்சம் தேனை எடுத்துச் சாப்பிட்டார். உடனே அவருக்குத் தெம்பு கிடைத்தது. ஆனால், எதையும் சாப்பிடக் கூடாதென்று அவருடைய அப்பா கட்டளை போட்டிருந்த விஷயத்தை ஒரு வீரன் அப்போது சொன்னான். அதற்கு யோனத்தான், “என்னுடைய அப்பாவால் ஜனங்களுக்கு எவ்வளவு கஷ்டம்! கொஞ்சம் தேன் சாப்பிட்டதற்கே நான் எவ்வளவு தெம்பாக இருக்கிறேன் என்று பாருங்கள். அப்படியிருக்கும்போது, எதிரிகளிடம் கைப்பற்றிய ஆடுமாடுகளை வீரர்கள் வயிறார சாப்பிட்டிருந்தால் இன்னும் எத்தனை பெலிஸ்தியர்களை வெட்டிக் குவித்திருக்கலாம்!” என்று சொன்னார். (1 சாமுவேல் 14:25-30) அவர் சொன்னதில் நியாயம் இருந்தது. அவர் தன் அப்பாவுக்கு உண்மையாக இருந்தார்தான், அதற்காகத் தன் அப்பா சொன்னதையெல்லாம் அல்லது செய்ததையெல்லாம் அவர் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி நடந்துகொண்டதால், மற்றவர்களுடைய மதிப்புமரியாதையைச் சம்பாதித்தார்.

யோனத்தான் தன்னுடைய கட்டளையை மீறியதைப் பற்றி சவுல் கேள்விப்பட்டார். அப்போதுகூட, தன்னுடைய கட்டளை எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. சொல்லப்போனால், தன் மகனுக்கு மரண தண்டனை கொடுக்க நினைத்தார்! யோனத்தான் நியாயம் கேட்டு வாதாடவில்லை, இரக்கம் கேட்டுக் கெஞ்சவும் இல்லை. அதற்குப் பதிலாக, சுயநலமே இல்லாமல், “இப்போது நான் சாகத் தயார்!” என்று சொன்னார். ஆனால் இஸ்ரவேலர்கள் அவருக்காகப் பரிந்து பேசினார்கள். “இஸ்ரவேலர்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித் தந்த யோனத்தான் சாக வேண்டுமா? கூடவே கூடாது! இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை, யோனத்தானின் தலையிலிருந்து ஒரு முடிகூட கீழே விழக் கூடாது. இன்றைக்கு அவர் கடவுளுடைய துணையோடுதான் போர் செய்தார்” என்று சொன்னார்கள். அதைக் கேட்டு சவுல் மனம் மாறினார். இப்படி, “அந்த வீரர்கள் யோனத்தானின் உயிரைக் காப்பாற்றினார்கள்.”—1 சாமுவேல் 14:43-45.

“இப்போது நான் சாகத் தயார்!”

யோனத்தானின் தைரியமும், கடின உழைப்பும், சுயநலமற்ற மனப்பான்மையும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன. அந்த நல்ல பெயர், ஆபத்தில் அவருக்குக் கைகொடுத்தது. இன்று நாம் எப்படிப்பட்ட பெயர் எடுக்கிறோம் என்பதைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். நல்ல பெயர் அதிக மதிப்புள்ளது என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:1) யோனத்தானைப் போலவே நாமும் யெகோவாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதுதான் நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பொக்கிஷம்.

சீரழிந்துகொண்டே போன சுபாவம்

சவுல் தவறுகள் செய்தபோதும், யோனத்தான் ஒரு மகனாகத் தன் கடமையை உண்மையோடு செய்துவந்தார்; போர் செய்ய பல வருஷங்களாகத் தன் அப்பாவுக்குத் தோள்கொடுத்து உதவினார். ஆனால், தன்னுடைய அப்பா ஆணவத்தோடு கடவுளுடைய பேச்சை மீறி நடக்க ஆரம்பித்தபோது யோனத்தானுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! அவருடைய அப்பாவின் சுபாவம் சீரழிந்துகொண்டே போனது. அதைத் தடுக்க யோனத்தானால் எதுவும் செய்ய முடியவில்லை.

அமலேக்கியர்களை எதிர்த்துப் போர் செய்யும்படி சவுலுக்கு யெகோவா கட்டளை கொடுத்தபோது, பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியது. அமலேக்கியர்கள் அக்கிரமம் செய்வதில் ஊறிப்போயிருந்ததால், அவர்களுடைய தேசம் அழியும் என்று மோசேயின் காலத்திலேயே யெகோவா சொல்லியிருந்தார். (யாத்திராகமம் 17:14) இந்தச் சந்தர்ப்பத்தில் யெகோவா சவுலிடம், அமலேக்கியர்களுடைய எல்லா கால்நடைகளையும் அவர்களுடைய ராஜா ஆகாகையும் கொன்றுபோடும்படி சொன்னார். அந்தப் போரில் சவுலுக்கு வெற்றி கிடைத்தது; யோனத்தான் எப்போதும்போல் தன்னுடைய அப்பாவின் தலைமையில் தைரியமாகப் போர் செய்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சவுல் துணிச்சலோடு யெகோவாவின் கட்டளையை மீறினார். ஆகாகையும் தரமான கால்நடைகளையும் அழிக்காமல் விட்டுவிட்டார். அதனால், சாமுவேல் தீர்க்கதரிசி யெகோவாவின் தண்டனைத் தீர்ப்பை சவுலிடம் சொன்னார். “யெகோவாவின் கட்டளையை நீ ஒதுக்கித்தள்ளிவிட்டாய், அதனால் ராஜாவாக இல்லாதபடி அவர் உன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார்” என்று சொன்னார்.—1 சாமுவேல் 15:2, 3, 9, 10, 23.

கொஞ்ச நாளிலேயே, சவுலிடமிருந்து யெகோவா தன்னுடைய சக்தியை எடுத்துவிட்டார். யெகோவாவின் அன்பும் ஆதரவும் இல்லாததால் சவுலின் மனநிலை திடீர் திடீரென்று மாறியது, அவர் அடிக்கடி கோபத்தில் எரிந்துவிழுந்தார், பயத்தில் நடுநடுங்கினார். கெட்ட சிந்தை அவரை ஆட்டிப்படைக்க கடவுள் விட்டுவிட்டார். (1 சாமுவேல் 16:14; 18:10-12) ஒருகாலத்தில் தங்கமானவராக இருந்த தன் அப்பா இந்தளவுக்குச் சீரழிந்துபோனதைப் பார்த்து யோனத்தான் எந்தளவு துடிதுடித்திருப்பார்! ஆனாலும், யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்வதை யோனத்தான் நிறுத்தவே இல்லை. அவர் முடிந்தவரை தன் அப்பாவுக்குத் தோள்கொடுத்து உதவியதும், சிலசமயங்களில் அவரிடம் மிக வெளிப்படையாகப் பேசியதும் உண்மைதான். ஆனால், என்றும் மாறாத தன் கடவுளும் தகப்பனுமான யெகோவாவுக்குத்தான் எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்தார்.—1 சாமுவேல் 19:4, 5.

நீங்கள் நேசிக்கும் ஒருவர், ஒருவேளை உங்களுடைய குடும்ப அங்கத்தினர், கெட்ட வழியில் போய் சீரழிந்துபோவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது நெஞ்சைப் பிழியும் சோகமான விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை. யோனத்தானின் உதாரணம், பிற்பாடு தாவீது எழுதிய வார்த்தைகளை நம் ஞாபகத்துக்குக் கொண்டுவருகின்றன. “என்னுடைய அப்பாவும் அம்மாவும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்வார்” என்று அவர் எழுதினார். (சங்கீதம் 27:10) யெகோவா உங்களையும் சேர்த்துக்கொள்வார். உங்களால் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு அருமையான அப்பாவாக இருப்பார். அவர் தன் மக்களைக் கைவிடவே மாட்டார். பாவ இயல்புள்ள மனிதர்கள் உங்களைக் கைவிட்டுவிட்டாலும் சரி, உங்களுக்கு ஏமாற்றம் தந்தாலும் சரி, யெகோவா எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பார்.

ராஜாவாக இருப்பதற்கு சவுலை இனி யெகோவா அனுமதிக்க மாட்டார் என்பது யோனத்தானுக்கு அநேகமாகத் தெரியவந்திருக்கும். அப்போது யோனத்தான் என்ன நினைத்திருப்பார்? ‘நான் ராஜாவானா, என் அப்பா மாதிரி நடந்துக்க கூடாது. அப்பா செஞ்ச தப்பயெல்லாம் சரிசெய்யணும். கடவுளோட பேச்ச கேட்டு நடக்கற நல்ல ராஜாவா இருக்கணும்’ என்றெல்லாம் நினைத்திருப்பாரா? அவர் உண்மையில் என்ன நினைத்திருப்பார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அப்படிப்பட்ட ஆசைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்று மட்டும் நமக்குத் தெரியும். அப்படியென்றால், உண்மையுள்ள அந்த மனிதரை யெகோவா கைவிட்டுவிட்டார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. சொல்லப்போனால், இணைபிரியாத நட்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கும் பைபிள் கதாபாத்திரங்களில் அவரும் இடம்பெறும்படி யெகோவா செய்திருக்கிறார். யோனத்தானைப் பற்றிய அடுத்த கட்டுரையில் அந்த நட்பைப் பற்றி நாம் விவரமாகப் பார்ப்போம்.