Skip to content

Todd Aki/Moment Open via Getty Images

யாருடைய கைவண்ணம்?

வாயால் வடிகட்டும் ஆனைத் திருக்கை மீன்

வாயால் வடிகட்டும் ஆனைத் திருக்கை மீன்

 ஆனைத் திருக்கை சாப்பிடுகிற விதத்தைப் பார்த்தால் நாம் எல்லாருமே ரொம்ப ஆச்சரியப்படுவோம். அது தன் வாயை ஆ-வென திறந்து வைத்துக்கொண்டே நீந்தும். அப்படி நீந்தும்போது கடலில் மிதக்கும் சின்னச் சின்ன உயிரினங்களும் (பிளாக்ங்டன்கள்) தண்ணீரும் அதன் வாய்க்குள்ளே போகும். இவை எல்லாம் அதன் வாயில் இருக்கிற ஒரு வடிகட்டிக்குப் பக்கத்தில் வந்தவுடன், பிளாக்ங்டன்கள் மட்டும் நேராக அதனுடைய தொண்டைக்குள்ளே போய் உணவாக மாறிவிடும். வடிகட்டியின் ஓட்டையை விட ரொம்பவே சிறியதாயிருக்கிற பிளாக்ங்டன்களைக்கூட ஆனைத் திருக்கை தண்ணீரிலிருந்து தனியாகப் பிரித்துவிடும். கடல் தண்ணீர் மட்டும் அந்த வடிகட்டிக்குள்ளே போய் ஆனைத் திருக்கையின் செதில்கள் வழியாக வெளியேறிவிடும். இதை பற்றி அறிவியல் பத்திரிகையாளர் எட் யங் இப்படிச் சொல்கிறார்: “இது ஒரு சாதனைதான். நடக்கவே நடக்காது என்று நினைக்கிற விஷயத்தையும் அது நடத்திக் காட்டுகிறது.”

 யோசித்துப் பாருங்கள்: ஆனைத் திருக்கையின் வடிகட்டி பார்ப்பதற்கு ஐந்து வளைவுகள் போல தெரியும். அதாவது இரண்டு பக்கமும் பற்கள் இருக்கிற சீப்புகள் மாதிரி இருக்கும். இந்த சீப்புகளில் இருக்கிற சில பற்கள் முன்னோக்கி சாய்ந்த மாதிரி இருக்கும். சில பற்கள் பின்னோக்கி சாய்ந்த மாதிரி இருக்கும். இந்த பற்கள்தான் கடல் தண்ணீரைத் தனியாகப் பிரித்து, கொஞ்சம் தண்ணீரை பற்களுக்கு மேலேயும், கொஞ்சம் தண்ணீரை பற்களுக்கு நடுவிலும் பாய வைக்கிறது. இதனால் சின்னச் சின்னதாக நீர் சுழல் உருவாகிறது.

 மிதக்கும் பிளாக்ங்டன்களோ அல்லது மற்ற உணவுப் பொருள்களோ பற்களின் ஓரத்தைத் தொட்டவுடனே ஒரே தாவாகத் தாவி வாய்க்குள்ளே வேகமாக போகிற நீரோட்டத்தில் கலந்துவிடும். இது எப்படி நடக்கிறது என்றால், அங்கே ஏற்படுகிற நீர் சுழல் அந்த உணவுப் பொருள்களை வேகமாக நகரவைத்து தாவிப் போய் அந்த நீரோட்டத்தில் கலக்க வைக்கிறது. இவை அந்த ஆனைத் திருக்கையின் தொண்டைக்குள்ளே போய் சேர்ந்தவுடன் அந்த மீன் அவற்றை அப்படியே முழுங்கிவிடும். அந்த பற்களுக்கிடையே சுலபமாகப் போகிற அளவுக்கு சின்னதாக இருக்கிற பிளாக்ங்டன்கள்கூட, அதற்குள்ளே போகாமல் அதனுடைய தொண்டையில் போய் விழுகின்றன. இந்த மீனுக்கு இப்படி ஒரு வடிகட்டி இருப்பதால்தான் சின்னச் சின்ன மீனையும் கூட அதனால் சாப்பிட முடிகிறது. ஒருவேளை இந்த வடிகட்டி மட்டும் இல்லையென்றால், அந்த பிளாக்ங்டன்கள் பற்களுக்கிடையே இருக்கிற ஓட்டைகள் வழியாக கடலுக்கே போய்விடும். ஆனைத் திருக்கையால் அதை சாப்பிட முடியாமல் போய்விடும்.

 இந்த ஆனைத் திருக்கை எவ்வளவு வேகமாக நீந்தினாலும் கூட... அது விழுங்கும் தண்ணீரில் எக்கச்சக்கமாக பிளாக்ங்டன்கள் இருந்தாலும் கூட... அதன் வடிகட்டும் முறை சூப்பராக இருப்பதால் சாப்பாடு அடைத்துக்கொள்கிற பிரச்சினையே இல்லை. அதோடு, அதுவாகவே சுத்தப்படுத்துகிற திறனும் அந்த வடிகட்டியில் இருக்கிறது.

 ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆனைத் திருக்கையின் வடிகட்டும் முறையை காப்பியடிக்க திட்டம் போட்டிருக்கிறார்கள். எதற்காக? கழிவுநீரை சுத்தம் பண்ணுவதற்கும், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை வெளியேற்றுவதற்கும் உதவுகிற வடிகட்டியைத் தயாரிப்பதற்காக.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: இந்த ஆனைத் திருக்கையின் வடிகட்டும் முறை தானாகவே வந்திருக்குமா? அல்லது யாராவது அதை அப்படிப் படைத்திருப்பார்களா?