Skip to content

யாருடைய கைவண்ணம்?

பார்னக்கிள் சிப்பியின் பசை

பார்னக்கிள் சிப்பியின் பசை

 பார்னக்கிள் என்பது ஒரு வகை சிப்பி. விலங்கியல் நிபுணர்களை ரொம்ப காலமாக வியக்க வைத்த இந்த வகை சிப்பிகள் பாறைகளிலும் கடல் மேலுள்ள பாலங்களிலும் கப்பலின் அடிப்பகுதியிலும் உடும்பு போல் உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கும். செயற்கையாக உருவாக்கப்படுகிற பசையைவிட பார்னக்கிள் சிப்பியின் பசை ரொம்பவே உறுதியானது. இவை எப்படி ஈரமான இடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பது புரியா புதிராகவே இருந்தது. ஆனால், சமீபத்தில்தான் இதைப் பற்றிக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 யோசித்துப்பாருங்கள்: பார்னக்கிள் ஒரு லார்வாவாக இருக்கும்போது அங்கும் இங்கும் நீந்தி, தான் ஒட்டிக்கொள்ள பொருத்தமான ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அப்படி ஒட்டிக்கொள்வதற்குப் பொருத்தமான ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடித்தவுடன் அந்த லார்வா இரண்டு திரவங்களை வெளியிடுகிறது. எண்ணெய் பசை உள்ள முதல் திரவம் அந்த லார்வா தேர்ந்தெடுக்கும் இடத்திலுள்ள தண்ணீரை அகற்றிவிட்டு அடுத்த திரவம் வந்து ஒட்டிக்கொள்வதற்கு ஏற்ற மாதிரி அந்த இடத்தை தயார்ப்படுத்துகிறது. அந்த இரண்டாவது திரவம் ஃபாஸ்ஃபோப்ரோட்டீன்ஸ் (phosphoproteins) என்று அழைக்கப்படுகிற புரதங்களால் ஆனது.

 இந்த இரண்டு திரவங்களும் சேரும்போது, பாக்டீரியாக்களால்கூட அரித்துப்போட முடியாத ஒரு உறுதியான பசை உருவாகிறது. எதையும் தாங்கும் இந்த உறுதியான பசை, இந்த சிப்பிகளுக்கு ரொம்பவே அவசியம். ஏனென்றால், அவை எந்த இடத்தில் ஒட்டிக்கொள்கிறதோ அதே இடத்தில்தான் சாகும்வரை உயிர்வாழும்.

பார்னக்கிள் சிப்பிகளும் அவற்றின் பசை நார்களைக் காட்டும் உள்படமும்

 பார்னக்கிள் சிப்பிகள் உருவாக்கும் பசை விஞ்ஞானிகள் நினைத்ததைவிட அதிக சிக்கலானது. இதைப் பற்றிக் கண்டுபிடித்த குழுவில் இருந்த ஒருவர் இப்படிச் சொல்கிறார்: ‘ஈரமான மேற்பரப்பில் ஒரு பொருளை ஒட்டவைப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் பார்னக்கிள் இயற்கையாகவே ஒரு பசையை உருவாக்கி இதற்கு புத்திசாலித்தனமான ஒரு தீர்வை கொடுக்கிறது.’ இந்தச் சிப்பியின் பசை உருவாக்கும் முறையை வைத்து தண்ணீருக்குள் பயன்படுத்த முடிந்த ஒரு பசையை கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதோடு, உயிரினங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களை வைத்து ஒரு செயற்கையான பசையை தயாரித்து அதை எலெக்ட்ரானிக் கருவிகளிலும், மருத்துவ சிகிச்சைகளிலும் பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பசையை உருவாக்கும் இந்த அற்புதத் திறமை பார்னக்கிளுக்கு தானாகவே வந்ததா? அல்லது படைக்கப்பட்டதா?