Skip to content

யாருடைய கைவண்ணம்?

டால்பின்களின் சோனார் திறன்

டால்பின்களின் சோனார் திறன்

 டால்பின்கள் விதவிதமான க்ளிக் சத்தங்களையும் விசில் சத்தங்களையும் எழுப்புகின்றன. பிறகு, அந்தச் சத்தங்களின் எதிரொலியை வைத்தே, தங்களைச் சுற்றி என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்துவிடுகின்றன. இதைத்தான் சோனார் திறன் என்று சொல்கிறோம். இந்தத் திறனைப் பயன்படுத்தி டால்பின்கள் பத்திரமாகப் பயணம் செய்கின்றன. குப்பிமூக்கு டால்பின்களுக்கு [bottlenose dolphin (Tursiops truncatus)] இருக்கும் இந்தத் திறனைக் காப்பியடித்து, தண்ணீருக்கு அடியில் இயங்கும் அதிநவீன ஒலிக் கருவிகளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். இப்போதுள்ள தொழில்நுட்பத்தால் தீர்க்க முடியாத பிரச்சினைகளைக்கூட அவை தீர்க்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

 யோசித்துப் பாருங்கள்: டால்பின்கள் இந்த சோனார் திறனை வைத்து, கடலுக்கு அடியிலுள்ள மணலில் ஒளிந்துகொண்டிருக்கும் மீனைக்கூடக் கண்டுபிடித்துவிடுகின்றன. தூரத்தில் இருப்பது மீனா பாறையா என்றும் கண்டுபிடித்துவிடுகின்றன. அதுமட்டுமா? “ஒரு கன்டெய்னருக்குள் இருப்பது நல்ல தண்ணீரா, உப்புத் தண்ணீரா, பெட்ரோலா, அல்லது ஏதாவது சிரப்பா என்றெல்லாம் பத்து மீட்டர் [32.8 அடி] தூரத்திலிருந்தே [டால்பின்களால்] கண்டுபிடித்துவிட முடியும்” என்று சொல்கிறார், கித் ப்ரவுன் என்ற துணைப் பேராசிரியர். (இவர் ஸ்காட்லாந்து, எடின்பர்க்கிலுள்ள ஹெரியாட்-வாட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.) இதேபோல் திறமையாகச் செயல்படும் கருவிகளை உருவாக்க விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள்.

ஒரு கன்டெய்னருக்குள் என்ன இருக்கிறதென்று பத்து மீட்டர் தூரத்திலிருந்தே டால்பின்களால் கண்டுபிடித்துவிட முடியும்

 டால்பின்கள் எழுப்பும் சத்தங்களையும், அவை கேட்கும் எதிரொலிகளையும் ஆராய்ச்சி செய்த நிபுணர்கள், அவற்றைக் காப்பியடித்து ஒரு புதிய சோனார் கருவியை உருவாக்கினார்கள். மிகச் சிக்கலான எலெக்ட்ரானிக் சாதனங்களைக் கொண்ட அந்தக் கருவியைக் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் (3.3 அடி) நீளமுள்ள ஒருவிதமான சிலிண்டருக்குள் வைத்தார்கள். பிறகு, தண்ணீருக்கு அடியில் இயங்கும் ரோபோ வாகனத்தோடு அதைப் பொருத்தினார்கள். (இந்த ரோபோ வாகனம், தண்ணீருக்கு அடியில் பயன்படுத்தப்படும் டார்பீடோ வெடிகுண்டைப் போல் இருக்கும்.) கடல்படுகையைக் கண்காணிக்கவும், மணலில் புதைந்திருக்கும் கேபிள்களை அல்லது பைப்புகளைக் கண்டுபிடித்து, தூரத்திலிருந்தே அவற்றை ஆராயவும் இந்தக் கருவியை அவர்கள் உருவாக்கினார்கள். இந்தக் கண்டுபிடிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகளுக்கு உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். டால்பின்களைப் பார்த்து உருவாக்கப்பட்ட இந்தப் புதிய கருவி, ஏற்கெனவே உள்ள சோனார் கருவிகளைவிட மிகத் திறமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தொழில்நுட்ப வல்லுனர்களால் தண்ணீருக்கு அடியில் இயங்கும் சாதனங்களை மிகச் சரியான இடத்தில் வைக்க முடியும். அதோடு, அவற்றுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டுவிட்டால் அதைக் கண்டுபிடிக்கவும் முடியும். உதாரணத்துக்கு, எண்ணெய்க் கிணறுகளின் தூண்களில் ஏற்படும் லேசான விரிசல்களைக் கண்டுபிடிக்க முடியும். சொல்லப்போனால், பைப்புகளில் ஏற்படும் அடைப்புகளைக்கூடக் கண்டுபிடிக்க முடியும்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குப்பிமூக்கு டால்பின்களுக்கு இந்த சோனார் திறன் தானாக வந்திருக்குமா? அல்லது அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா?