Skip to content

யாருடைய கைவண்ணம்?

கேபேஜ் வெள்ளை பட்டாம்பூச்சியின் சிறகுகள்

கேபேஜ் வெள்ளை பட்டாம்பூச்சியின் சிறகுகள்

 ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்க வேண்டுமென்றால், பறப்பதற்கு உதவும் தசைகள் சூடாக வேண்டும். அதற்கு சூரிய ஒளி தேவை! மேகமூட்டமான நாட்களில், மற்ற பட்டாம்பூச்சிகளுக்கு முன்பாகவே கேபேஜ் பட்டாம்பூச்சிகளால் பறந்து போக முடிகிறது. எப்படி?

 யோசித்துப்பாருங்கள்: பொதுவாக, சூரிய ஒளி படுவதற்காக பட்டாம்பூச்சிகள் எங்கேயாவது உட்கார்ந்திருக்கும். அதுபோன்ற சமயங்களில், சிறகுகளை முழுமையாக மூடியிருக்கும் அல்லது அகலமாக விரித்து வைத்திருக்கும். ஆனால், கேபேஜ் வெள்ளை பட்டாம்பூச்சிகள், சிறகுகளை V-வடிவத்தில் விரித்து வைத்திருக்கும். இந்த வடிவத்தில் சிறகுகளை விரித்து வைத்திருக்கும்போதுதான், அவற்றுக்குத் தேவையான சூரிய வெப்பம் கிடைப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. V-வடிவத்தில் சிறகுகள் இருந்தால்தான், அவற்றின் உடலின் நடுப் பகுதியில், அதாவது பறப்பதற்கு உதவும் தசைகள் இருக்கும் பகுதியில், சூரிய வெப்பம் அதிகமாகக் கிடைக்கும். அந்தத் தசைகள் சூடேறிய உடனே அவற்றால் பறந்து போக முடியும்.

 இதேபோல், V-வடிவ சோலார் பேனல்களைத் தயாரிக்க முடியுமா என்று இங்கிலாந்தில் இருக்கிற எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்தார்கள். அந்த முயற்சிக்கு என்ன பலன் கிடைத்தது? எப்போதும் கிடைக்கும் ஆற்றலைவிட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகமான ஆற்றலை அவர்களால் உற்பத்தி செய்ய முடிந்தது. ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு விஷயத்தையும் கண்டுபிடித்தார்கள். அதாவது, சூரிய ஒளியை எதிரொளிக்கும் தன்மை கேபேஜ் பட்டாம்பூச்சியின் சிறகுகளுக்கு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதனால், சோலார் பேனல்களைத் தயாரிக்கும்போது, V-வடிவத்திலும் சூரிய ஒளியை எதிரொளிக்கும் விதத்திலும் அவற்றைத் தயாரித்தார்கள். இப்படித் தயாரிக்கப்பட்ட பேனல்களின் எடை குறைவாக இருந்தது. அதோடு, அதிக ஆற்றலையும் அவற்றால் உற்பத்தி செய்ய முடிந்தது. ஆராய்ச்சியின் முடிவுகளைப் பார்த்ததற்குப் பிறகு, ஆராய்ச்சிக் குழுவில் இருந்த பேராசிரியர் ரிச்சர்ட் கான்ஸ்டென்ட் இப்படிச் சொன்னார்: “சூரிய ஒளியை நன்றாகப் பயன்படுத்துவதில் [இந்தப் பட்டாம்பூச்சி] ஒரு திறமைசாலி.”

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கேபேஜ் வெள்ளை பட்டாம்பூச்சியின் சிறகுகள் செயல்படும் விதம் நம்மை வியக்க வைக்கிறது. இது எப்படி தோன்றியிருக்கும்? பரிணாமத்தினாலா, படைப்பினாலா?