Skip to content

அடிக்கடி மின்சாரம் தடைபட்டாலும் உக்ரைனில் இருக்கிற சகோதரர்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதை நிறுத்தவே இல்லை. இடது: ஒரு சகோதரரின் வீட்டில் கூடிவந்த பிரஸ்தாபிகளின் ஒரு சிறிய தொகுதிக்கு ஒரு வட்டார கண்காணி பேச்சு கொடுக்கிறார். மேலே வலது: மின்சாரம் இல்லாவிட்டாலும் ராஜ்ய மன்றத்தில் கூட்டம் தொடர்ந்து நடக்கிறது. கீழே வலது: அடிக்கடி மின்சாரம் தடைபட்டாலும் ஒரு குடும்பத்தார் ஜூம் வழியாக கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்

டிசம்பர் 20, 2022
உக்ரைன்

அறிக்கை #14 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

அறிக்கை #14 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

உக்ரைனின் நிறைய பகுதிகளில் குண்டு வெடிப்புகள் அடிக்கடி நடப்பதால் அங்கே இருக்கிற சாலைகள், பாலங்கள், மின் நிலையங்கள் பயங்கரமாக நாசமாகியிருக்கின்றன அல்லது முற்றிலும் சேதமாகியிருக்கின்றன. மின்சாரமும் அடிக்கடி தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், நம்முடைய சகோதரர்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதையும் கடவுளை வணங்குவதற்கான மற்ற செயல்களையும் நிறுத்தவே இல்லை.

அடிக்கடி மின்சாரம் தடைபட்டாலும் ஜூம் வழியாக கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்

குறைந்தது ஒரு நாளைக்கு 12 மணிநேரம் மின்சாரம் தடைபடுவதாக கிவீவ்வில் பயனியர்களாக சேவை செய்கிற அனஸ்டாசியாவும் டெபோராவும் சொல்கிறார்கள். அதனால் அவர்களுடைய எலக்ட்ரானிக் கருவிகளை மின்சாரம் இருக்கும்போதே சார்ஜ் செய்துகொள்கிறார்கள், கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர்களுடைய மொபைலில் இருக்கிற இன்டர்நெட் டேட்டாவையும் பயன்படுத்துகிறார்கள். நிறைய சமயங்களில் கூட்டங்கள் முடியும்போது அவர்களுடைய இன்டர்நெட் தொடர்பும் துண்டிக்கப்படுகிறது.

மின்சாரம் தடைபடுவதால் வருகிற இன்னொரு சவால், அறைகளைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவுகிற ஹீட்டரை பயன்படுத்த முடியாதுதான். சில சகோதரர்கள் மின்சாரத்துக்காகவும் தங்கள் அறைகளைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் வீட்டுக்கு வெளியே இருக்கிற ஜெனரேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஒருசிலர் ஹீட்டர் வசதிகள் இருக்கும் தங்கள் சொந்தக்காரர்களின் வீட்டில் போய்த் தங்குகிறார்கள். ஆனால் மற்றவர்கள் வேறு வழி இல்லாமல் அந்தக் குளிரைப் பொறுத்துக்கொள்கிறார்கள். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், நிறைய சகோதரர்களுடைய வீடுகளில், அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில், கேஸ் மூலமாக இயங்குகிற ஹீட்டர் வசதிகள் இருக்கின்றன. அதனால் அடிக்கடி மின்சாரம் தடைபட்டாலும் அவர்களுடைய வீடுகளைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள முடிகிறது.

இவானோ-பிராங்கிவ்ஸ்கில் இருக்கிற பயனியர் ஆன இரினா, எப்போதுமே சந்தோஷமான மனநிலையோடு இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார். அதனால் அவர் இப்படிச் சொல்கிறார்: “என் கைமீறிப் போன விஷயங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக யோசித்து கவலைப்பட கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதனால், அடுத்த ஒரு மணிநேரத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி மட்டும்தான் நான் யோசிக்கிறேன். மின்சாரம் இல்லாதபோது என்ன செய்யலாம் என்பதை முன்னதாகவே யோசித்து வைப்பதால், எனக்கு தேவையான பிரசுரங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே நான் டவுன்லோட் செய்துகொள்கிறேன்.”

உக்ரைனில் இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகள் எப்படிப்பட்ட சவால்களைச் சந்தித்தாலும், யெகோவாவுடைய சேவையில் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். ‘நன்மை செய்வதில்’ அவர்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.—கலாத்தியர் 6:9.

கீழே இருக்கிற எண்ணிக்கை டிசம்பர் 6, 2022 கணக்குப்படி, உக்ரைனிலிருந்து கிடைத்திருக்கிறது. உள்ளூர் சகோதரர்கள் சொன்ன உண்மையான தகவல்களின் அடிப்படையில் இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் இருப்பவர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருப்பதால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.

நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை

  • 47 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்

  • 97 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்

  • 11,537 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்குத் தப்பித்துப் போயிருக்கிறார்கள்

  • 590 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன

  • 645 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 1,722 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன

  • 7 ராஜ்ய மன்றங்கள் நாசமடைந்திருக்கின்றன

  • 19 ராஜ்ய மன்றங்கள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 68 ராஜ்ய மன்றங்கள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன

நிவாரண நடவடிக்கைகள்

  • 27 பேரழிவு நிவாரணக் குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன

  • 54,212 ஆட்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன

  • 26,811 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்குள்ள சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்